- போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த திங்கள்கிழமை தனது அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. பொதுவெளியில் அதிகம் பேசப்படாத அந்த அறிக்கை முன்வைத்திருக்கும் ஆலோசனைகள் தேவையற்றதாகவும், படைப்பாளிகளின் மனநிலை குறித்த புரிதல் இல்லாததாகவும் தோன்றுகிறது.
- விருது பெறுபவர்கள், "விருதைத் திருப்பி தரமாட்டோம்' என்கிற உறுதிமொழியை முன்மொழிகிறது அந்த அறிக்கை. "கெளரவம்' என்று பெருமிதத்துடன் விருதைப் பெறுபவர்கள், அதை "அகெளரவம்' என்று கருதித் துறக்க முற்பட்டால், அதுவும்கூட கருத்துச் சுதந்திரம் என்று ஏற்கப்பட வேண்டும்.
- வலதுசாரி கருத்துகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எழுத்தாளர்கள் சிலர் தாக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும் மிகப் பெரிய சர்ச்சைக்கு வழிகோலியது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபோது, இடதுசாரி சிந்தனையாளர்களும், மதச்சார்பின்மைக் கருத்தாளர்களும், மக்களாட்சியில் ஏற்பட்ட அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தனர் (இருக்கின்றனர்) என்பது நிதர்சனம்.
- கர்நாடக மாநிலம் தார்வாடில் எழுத்தாளர் எம்.எம். கலபுர்கி அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அவர் மட்டுமல்ல, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கெளரி லங்கேஷ் என்று முக்கியமான இடதுசாரி சிந்தனாவாதிகள் கொல்லப்பட்டபோது, அவை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல்களாகக் கருதப்பட்டன. அந்தக் கொலைகள் குறித்த முழுமையான விசாரணைகள் விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
- அப்படிப்பட்ட சூழலில்தான் தேசிய அளவில் கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்தியாவில் பல மாநிலங்களைச் சேர்ந்த 39 சாகித்திய அகாதெமி விருதாளர்கள், நாட்டில் அதிகரித்துவரும் சகிப்புத்தன்மை இல்லாத சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தங்களது விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதாக அறிவித்தனர். ஆட்சிக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களை வலதுசாரிக் குழுக்கள் குறிவைத்துத் தாக்குகின்றன என்பது அவர்களது குற்றச்சாட்டு.
- எழுத்தாளர்கள் மட்டுமல்ல, நாடகக் கலைஞர்கள், திரைத் துறையினர் என்று பலர் தங்களது திறமைக்கும், சாதனைக்கும் வழங்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதாக அப்போது அறிவித்தனர். சாகித்திய அகாதெமியின் நிர்வாகக் குழு, எழுத்தாளர்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிறப்புக் கூட்டம் கூட்டி வேண்டுகோள் விடுத்தது. அவர்களில் சிலர் தங்களது முடிவை மாற்றிக் கொண்டனர்; பலர் மறுத்துவிட்டனர்.
- அரசின் நிலைப்பாட்டையோ, செயல்பாட்டையோ ஏற்றுக் கொள்ளாமல், தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது என்பது புதிதொன்றுமல்ல. ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் மன்னர் வழங்கிய "சர்' பட்டத்தை ரவீந்திரநாத் தாகூர் திருப்பி அளித்தார். 1964-இல் ஜீன் பால் சார்ட்ரே, இலக்கியத்திற்கான நோபல் விருதையே நிராகரித்தார். பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பத்ம விருதை ஏற்றுக் கொள்ளாதது அனைவருக்கும் தெரியும்.
- நாடாளுமன்ற நிலைக்குழு முன்வைத்திருக்கும் ஆலோசனை என்னவென்றால், விருதுகளை வழங்குவதற்கு முன்னர், "அந்த விருதுகளை எந்தக் காரணம் கொண்டும் திருப்பித் தர மாட்டோம்' என்கிற உறுதிமொழியை விருதாளர்களிடமிருந்து எழுத்து மூலம் பெறுவது என்பது. அதன் மூலம் விருதுகளின் கெளரவம் பாதிக்கப்படாது என்பதுடன், விருது பெற்ற ஏனைய ஆளுமைகளின் பங்களிப்புகளுக்குக் களங்கம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்கிறது நிலைக்குழு அறிக்கை.
- முதலாவதாக, சாகித்திய அகாதெமி என்பது அரசு அமைப்பு அல்ல. 1950-இல் அந்த அமைப்பு உருவாக்கப்பட்டபோதே, அது சுதந்திரமாகச் செயல்படும், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகளில் உள்ள எழுத்தாளர்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் எழுத்தாளர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து கெளரவிக்கிறது.
- சாகித்திய அகாதெமி விருது என்பது "பத்ம' விருதுகளைப் போல அரசால் வழங்கப்படுவதல்ல. 1860-ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த அமைப்பு, எழுத்தாளர்களால் எழுத்தாளர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறது என்பதை உணர வேண்டும். அது அரசு அமைப்பு அல்ல என்பதால், அந்த விருதைத் திருப்பிக் கொடுப்பதால், அரசுக்கோ, தேசத்துக்கோ எந்தவித பாதிப்பும், கெளரவக் குறைவும் ஏற்பட்டுவிடாது. சாகித்திய அகாதெமிக்கும் பாதிப்பில்லை.
- விருதுகள், ஒரு தனிநபரின் சாதனை, பங்களிப்பு, ஆளுமைத் திறன், சேவை ஆகியவற்றுக்காக வழங்கப்படுபவை. விருதுகளும், பட்டங்களும் வழங்கப்படும் அமைப்புகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதில்லை. யார் பெறுகிறார்கள் என்பதும், அவர்கள் அந்த விருதுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதும்தான் விருதுக்கு மரியாதை சேர்ப்பவை.
- "விருதைத் திருப்பிக் கொடுப்பது' என்பது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயல்பாடு அவ்வளவே... அதற்காக விருது பெறுபவர்கள், அந்த விருதை எந்தக் காரணத்துக்காகவும் திருப்பிக் கொடுக்கமாட்டோம் என்று உறுதிமொழி வழங்கச் சொல்வது, உண்மையைச் சொல்வதானால் - "சகிப்புத்தன்மை இல்லாமை'. நிபந்தனைகளுடன் விருது வழங்குவது, எழுத்தாளர்களின் மரியாதைக்கு விடப்படும் சவால் என்றுதான் கூற வேண்டும்!
நன்றி: தினமணி (02 – 08 – 2023)