TNPSC Thervupettagam

நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் அவசியம்

August 6 , 2019 1793 days 5265 0
  • பல மசோதாக்கள் நிலைக் குழுக்களின் ஆய்விற்கு உட்படுத்தப்படாமலேயே நிறைவேற்றப்பட்டதை பின்னணியாகக் கொண்டு நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் அவசியம் குறித்து இங்கு காணலாம்.

இதுவரை

  • நாடாளுமன்றத்தின் தற்போதைய அமர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 22 மசோதாக்களில் சுமார் பதினெட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு அதிக செயல்பாடுள்ள அமர்வாக இது உள்ளது.
  • ஆனால் ஒவ்வொரு சட்டத்தையும் விரிவாக கருத்தில் கொள்ளும் பாராளுமன்ற நிலைக் குழுக்களின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமலேயே இவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • 17வது மக்களவை அமைக்கப்பட்ட பின்னர், கட்சிகளிடையே ஆலோசனைகள் இன்னும் நடைபெற்று வருவதால் பாராளுமன்ற நிலைக் குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.

  • இதன் விளைவாகவே அனைத்து மசோதாக்களும் நிலைக் குழுக்களின் ஆய்வுகளின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • மேலும் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரையிலான காலங்களில் இவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றக் குழுக்களின் தேவை

  • நாடாளுமன்ற மக்களாட்சியில், நாடாளுமன்றமானது சட்டமியற்றுதல் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக கிளைப் பிரிவை மேற்பார்வையிடுதல் என விரிவான அளவில் இரண்டு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
  • நாடாளுமன்றம் என்பது மக்களுடைய விருப்பத்தின் ஒட்டு மொத்த வடிவமாகும். குழுக்கள் என்பவை பாராளுமன்றத்தின் சிறப்பான செயல்திறனுக்கான ஒரு கருவியாகும்.
  • சட்டமியற்றும் பணியின் அளவைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தின் பரிசீலனையின் கீழ் அனைத்து மசோதாக்களையும் அவையில் விரிவாக விவாதிப்பது என்பது சாத்தியமான செயல் அன்று.
  • குழுக்கள் என்பவை முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து விரிவான விவாதம் செய்வதற்கான தளமாகும்.
  • தனித்தனி கட்சிகளின் விகிதாச்சார வலிமை மற்றும் கருத்துக்கள், சட்டமியற்றுபவர்களின் தனிப்பட்ட நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கூடும் இந்த சிறு குழுக்களானது அதிக வெளிப்படைத் தன்மை, தீவிரமான மற்றும் சிறந்த தகவலறிந்த விவாதங்களைக் கொள்கையளவிலேனும் கொண்டிருக்கக் கூடும் என்பது ஒரு அனுமானமாகும்.
  • இந்தக் குழுக்களின் கூட்டங்களானது முழுமையான மற்றும் வெளிப்படையான முறையில் பிரம்மாண்டமான மற்றும் கட்சியின் நிலைகள் முன்னுரிமை பெறும் அவைக் கூட்டங்களைப் போலல்லாமல் தனிப்பட்டதாகவும் அதன் உறுப்பினர்கள் கட்சிகளின் கொறடாவிற்கு கட்டுப்படாதவர்களாகவும் மிகவும் பொருளுடைய அல்லது அர்த்தமுடைய தங்களின் பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை அளிக்கின்றது.
  • தொழில்நுட்பத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் வர்த்தக விரிவாக்கம், வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை பொதுவாக சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளில் நிலையான சீர்திருத்தங்கள் தேவைப்படும் புதிய கொள்கை சவால்களை உருவாக்குகின்றன.
  • சட்டமியற்றும் முறைகளில் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, சட்டமியற்றுபவர்கள் தங்கள் அறிவினை எப்போதும் விரிவடைந்துக் கொண்டிருக்கும் மனித நடவடிக்கைகளின் பகுதிகளின் அளவிற்கு பெருக்கிக் கொள்ள இயலாது.
  • உதாரணமாக, இணைப்புகளை விரிவாக்குவதன் மூலம் உருவாக்கப்படும் மீத்தரவுகளின் (Meta Data - மெட்டா டேட்டா) சகாப்தத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
  • டிஜிட்டல் சமுதாயத்தை நிர்வகிக்கத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவு மற்றும் அரசியல் புத்திக் கூர்மை இன்றி உருவாக்க இயலாது.
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகச் சிறந்த அறிவுக் கூர்மை இருக்கலாம். ஆனால் இது போன்ற சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு நிபுணர்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படும்.
  • குழுக்கள் அமைப்பதன் மூலம் இத்தகைய நிபுணத்துவமானது சட்டமியற்றலில் ஈடுபடுத்தப் படுகின்றது.
  • பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் அமைச்சர்களால் பதிலளிக்கப்படுதல் வழியாக நிர்வாக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு (மக்களவை) பொறுப்புடையவர்கள் ஆவர்.
  • இருந்தாலும், துறை சார்ந்த நிலைக் குழுக்களானது அதனினும் ஒரு படி மேலே சென்று அரசின் மூத்த அதிகாரிகளிடமிருந்து ஒரு தனிப்பட்ட அமைப்பில் கருத்துக்களைக் கேட்கவும் விரிவான விவாதங்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கின்றன.
  • இந்த வழிமுறையானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலாண்மை செயல்முறைகளை நெருக்கமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.

குழுக்களின் வகைகள்

  • பெரும்பாலான குழுக்கள் தங்களின் நிலையைத் தடையின்றித் தக்க வைத்துக் கொள்கின்றன. மேலும் இவை வழக்கமாக ஆண்டிற்கொரு முறை மறுசீரமைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக “தேர்வுக் குழுக்கள்” உருவாக்கப்படுகின்றன.
  • உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மசோதாவிற்கென ஒரு தேர்வுக் குழு அமைக்கப்படும். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் அந்த தேர்வுக் குழு கலைக்கப்படும்.

  • சில நிலைக் குழுக்கள் துறைரீதியான தொடர்புடையவை. இதற்கு உதாரணமாக மனிதவள மேம்பாட்டு நிலைக் குழுவைக் கூறலாம்.
  • கல்வி தொடர்பான ஒரு மசோதாவானது துறை சார்ந்த நிலைக் குழுவினாலோ அல்லது குறிப்பாக இதற்கென அமைக்கப்படும் தேர்வுக் குழுவினாலோ பரிசீலிக்கப்படலாம்.
  • ஒரு மசோதாவைப் பாராளுமன்றக் குழுவிற்குப் பரிந்துரைப்பதற்கு சபாநாயகர் தனது தனிப்பட்ட சுய விருப்பத்தைப் பயன்படுத்துகின்றார். ஆனாலும் இது வழக்கமாக அவையில் உள்ள கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தே செய்யப் படுகின்றது.
  • நிர்வாகத்தின் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கான முக்கியக் கருவி நிதி கட்டுப்பாடு ஆகும். எனவே நிதிக் குழுக்கள் மிகக் குறிப்பாக அதிகாரமிக்கவை என கருதப்படுகின்றன.
  • பொதுக் கணக்குகளுக்கான குழு, மதிப்பீட்டுக் குழு, பொது நிறுவனங்களுக்கான குழு என மூன்று நிதிக் குழுக்கள் உள்ளன.
  • பாராளுமன்றக் குழுக்களானது தங்களது அதிகாரங்களை சரத்து 105 (பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள்) மற்றும் சரத்து 118 (நடைமுறை மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்குதல் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரம்) ஆகியவற்றிலிருந்துப் பெறுகின்றன.
  • குழுக்களின் அறிக்கைகளானது பொதுவாக முழுமையானவை. மேலும் இவை ஆளுகை தொடர்பான விவகாரங்களில் உண்மைத் தன்மையுடைய தகவல்களை வழங்குகின்றன.
  • குழுக்களுக்கு பரிந்துரைக்கப்படும் மசோதாக்களானது குறிப்பிடத்தக்க மற்றும் மதிப்பிடத்தக்க அளவிலான மதிப்புக் கூட்டலுடன் திருப்பி அனுப்பப் படுகின்றன.
  • ஆனால் குழுக்களின் பரிந்துரைகளுக்குப் பாராளுமன்றம் கட்டுப்பட வேண்டியதில்லை.

நாடாளுமன்றக் குழுக்களின் தோற்றம்

  • இந்திய நாடாளுமன்ற மக்களாட்சியின் பல நடைமுறைகளைப் போலவே பாராளுமன்றக் குழு அமைப்பும் அதன் தோற்றத்தைப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் கொண்டுள்ளது.
  • முதல் நாடாளுமன்றக் குழுவானது 1571 ஆம் ஆண்டு பிரிட்டனில் அமைக்கப்பட்டது.
  • பொதுக் கணக்கிற்கான குழு 1861 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இந்தியாவின் முதல் பொதுக் கணக்கிற்கான குழு 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டது.
  • மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளரான P.D.T. ஆச்சாரியின் கூற்றுப்படி, மசோதாக்களை தவறாமல் குழுக்களுக்குப் பரிந்துரை செய்யும் முறையானது 1989 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் துறைகள் தங்களுக்கென சொந்த நிலைக் குழுக்களை உருவாக்கத் தொடங்கிய பின்னரே ஆரம்பித்தது.
  • அதற்கு முன்னர், அவையின் சில முக்கியமான மசோதாக்களை ஆய்வு விரிவாக செய்வதற்கு மட்டுமே தேர்வுக் குழுக்கள் அல்லது கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை மிகவும் குறைவாகவும் நீண்ட இடைவெளிக்கு மத்தியிலும் அமைக்கப் பட்டன.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்