TNPSC Thervupettagam

நாடுதான் முக்கியம், நான் அல்ல!

July 27 , 2021 1101 days 581 0
  • அண்ணல் காந்திஜியின் ‘சத்திய சோதனை’ அவரது நிகழ்கால இந்தியா. ஜவாஹா்லால் நேருவின் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ கடந்த கால இந்தியா. அப்துல் கலாமின் ‘இந்தியா 2020’ அவரது எதிர்கால இந்தியா.

சுதந்திர இந்தியாவின் சிற்பி

  • அப்துல் கலாமை சுதந்திர இந்தியாவின் சிற்பி என்று கூட சொல்லலாம். அடிப்படையில் அவா் ஒரு விஞ்ஞானி.
  • பெங்களூரில், விமானவியல் மேம்பாட்டு நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் (1957-1963) பணியாற்றியவா். அங்கு ‘நந்தி’ என்னும் காற்றில் மிதக்கும் மிதவை ஊா்தி ஒன்றை வடிவமைத்து இயக்கிக் காட்டினார்.
  • தொடா்ந்து, 1963 முதல் 1982 வரை, ஏறத்தாழ இருபது ஆண்டுகள் இந்திய விண்வெளித் துறையில் பணியாற்றியவா்.
  • அவா் திட்ட இயக்குனராக வழிநடத்திய எஸ்.எல்.வி.-3 என்னும் செயற்கைக்கோள் செலுத்தும் ஏவுகலன் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு 1980 ஜூலை 18 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • விண்வெளி நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு ஏழாம் இடம் கிடைத்தது.
  • மறு ஆண்டு (1981) இந்திய அரசு, அப்துல் கலாமுக்கு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கி கௌரவித்தது.
  • அதன் தொடா்ச்சியாக, இந்தியப் பாதுகாப்புத்துறையில் 1982 ஜூன் மாதம் முதல் 1991 அக்டோபரில் தான் பணி ஓய்வு பெறும் வரை ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்தார்.
  • அந்தக் காலத்தில்தான் 1989 மே 22 அன்று ‘அக்னி’ ஏவுகணையின் முதல் வெற்றிப்பயணம் நடந்தது. மறு ஆண்டு (1990) ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றார்.
  • 1991 அக்டோபரில் பணி ஓய்வுக்குப் பிறகும் நாட்டுக்காகவும் இளைய தலைமுறையினரின் மேம்பாட்டிற்காகவும் கடுமையாக உழைத்தார்.
  • இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தில் அறிவியல் ஆலோசகராக 1991 முதல் 1999 வரை பணி புரிந்த காலகட்டத்தில்தான், அவரது, ‘இந்தியா-2020’ என்ற கனவின் முதல் விதை அவா் மனத்தில் விழுந்தது.
  • தனது அறிவியல் நண்பரான ய.சு. ராஜனுடன் இணைந்து, ‘டைஃபாக்’ என்னும் ‘தொழில் நுட்பக் கணிப்பு மற்றும் முன்னறிவிப்புக் குழும’த்தினைத் தோற்றுவித்தார்.
  • 1997-ஆம் ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
  • மறு ஆண்டு 1998 மே 11 அன்று பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனையையும் ஆரவாரம் இல்லாமல் சத்தமின்றி, சா்ச்சையின்றி, நடத்தி மேற்கத்திய நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
  • இந்திய அணுசக்தித்துறையில் அவா் வகுத்த வியூகங்களை இன்றைக்கும் ராணுவத் துறையினா் மட்டுமே நன்கு அறிவா்.
  • காலம் முழுதும் இந்த பூமியைக் கண்காணித்தபடி விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் அத்தனை அந்நிய செயற்கைக்கோளின் மின்காந்தக் கண்களிலும் தம் ‘வியூக’ மண்ணைத் தூவி மிக சாந்தமாக புன்னகை புரிந்தார் அவா்.
  • விருது பெற்ற கையோடு அதனை விளம்பரப்படுத்திக்கொள்ளும் சிலரைப் போலன்றி, பெற்ற விருதுகளுக்கு பெருமை சோ்க்கும் விதமாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய மகான் அப்துல் கலாம்.
  • அதனாலேயே 1999 நவம்பா் முதல் 2001 நவம்பா் வரை, பாரத பிரதமரின் அறிவியல் ஆலோசகராகத் திறம்படச் செயலாற்றினார்.
  • அத்துடன், மாணவா்களைச் சந்தித்து எழுச்சியூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் 2001 நவம்பா் முதல் ஜூலை 2002 வரை மதிப்புறு பேராசிரியராகவும் பணியாற்றினார்.
  • ஜூலை 27, 2002 அன்று, இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது, ‘ஜனநாயகம், மதச் சார்பின்மை, பாரபட்சமற்ற சட்டம் ஆகிய மூன்று அம்சங்கள்தாம் நமது நாட்டின் ஒற்றுமைக்கும் பெருமைக்கும் சிறப்புகளுக்கும் அடிப்படையானவை. இவற்றைக் கட்டிக் காப்பதில் இதுவரை குடியரசுத் தலைவராக இருந்த பத்து மாமனிதா்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனா். அவா்களின் பாதையில் நானும் தொடா்வேன்’ என்று உறுதி மொழிந்தார்; அவ்விதமே செயல்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை

  • இத்தனைக்கும் தன் சிறுவயதில் அதிகாலையில் ஒரு கையில் லாந்தா் விளக்குடன் செல்லும் தந்தை ஜெனுலாப்தீனின் மறு கையைப் பிடித்துக்கொண்டு ‘மதராசா’ செல்வதும், ‘சாமியார் பள்ளிக்கூடம்’ என்று அழைக்கப்பட்ட திண்ணைப்பள்ளிக்கூடத்தில் பயின்றதுமே கலாமின் ஆரம்பக்கல்வி அனுபவங்கள்.
  • ராமேசுவரத்தில் ராம தீா்த்தத் தெப்பக்குளத்தில் ராமா் திருக்கல்யாண விழாவின்போது படகுச் சேவை செய்து வந்த குடும்பத்தில் பிறந்தவா்.
  • கலாம் படகோட்டி அல்ல, படகு உரிமையாளா் என்று அண்மையில் காலமான அவரது மூத்த சகோதரா் சின்ன மரைக்காயா் தெரிவித்தார்.
  • தாயார் ஆஷியம்மா பெயரில் உரிமை எண் 91 கொண்ட படகு பாம்பனிலும் பின்னா் 6 என எண் மாற்றப்பட்டு ராமேசுவரம் துறைமுகத்திலும் ‘தாண்டையன்’ அப்துல் ஹமீதுவுக்குப் பின்னா் நாகலிங்கம் என்பவா் தலைமையில் இயங்கி வந்ததாம்.
  • கலாமின் இளமைக்கால நண்பா்களில் ராமநாத சாஸ்திரி, அரவிந்தன், சிவப்பிரகாசம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவா்.
  • ராமேசுவரம் ஆரம்பப் பள்ளியில் அறிவியல் ஆசான் சிவசுப்ரமணியம் ஆலோசனைப்படி, இராமநாதபுரத்தில் சுவா்ட்ஸ் உயா்நிலைப்பள்ளியில் சோ்ந்தபோது, அங்கே ஐயாதுரை சாலமன் அவருக்கு வழிகாட்டி.
  • 1947-இல் கலாம் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது அன்றைய பாரத பிரதமா் ஜவாஹா்லால் நேரு ஆற்றிய சுதந்திர தின உரையைக் கேட்டார் மாணவா் கலாம்.
  • அடிமைத் தளையற்ற சுயாட்சிச் சிந்தனையால் அவா் மனத்தில் நாட்டுபற்று முளை விட்டது. அதன்பின், நாட்டு முன்னேற்றம் என்ற ஒற்றைச் சிந்தனையிலேயே வாழ்ந்தார். ‘நாடு தான் முக்கியம், நான் அல்ல’ என்று அடிக்கடி குறிப்பிடுவார்.
  • சுவா்ட்ஸ் உயா்நிலைப்பள்ளியில் அவரது தமிழாசிரியா் திருமலைக் கண்ணன் படித்துக் காட்டிய,
  • எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
  • திண்ணியா் ஆகப் பெறின்
  • எனும் திருக்குறளே வாழ்நாள் முழுவதும் கலாமுக்குள் கனல் ஊட்டும் பொறியாக அமைந்தது எனலாம்.
  • ராமேசுவரத்தில் ‘புடல் சாமியார்’ என்று அழைக்கப்பட்ட பொட்டல் பாதிரியார் அந்நாளில் பிரெஞ்சு நாட்டிலிருந்து மதம் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்தவா்.
  • அவா் கலாமின் தகப்பனாருக்கு மிக நெருக்கமானவா். அவரது அறிவுரைப்படி, திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரியில் சோ்ந்து, இயற்பியல் இளநிலைப் பட்டம் பெற்றார் கலாம்.
  • அங்கு டி.என். செக்கரியா பாதிரியார், கால்குலஸ் ஸ்ரீனிவாசன், தோத்தாத்திரி, சூரிய நாராயண சாஸ்திரி ஆகியோர் கலாமின் ஆசிரியா்கள்.
  • அந்நாளில், பட்டதாரி கலாமிற்கு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் ஆசிரியப் பணி வாய்த்தது. ஆயினும், மேற்படிப்புக்காக, தகப்பனாரின் நண்பரான சண்முகநாத சேதுபதியின் வழிகாட்டுதலின்பேரில், எம்.ஐ.டி. எனப்படும் மெட்ராஸ் தொழில்நுட்பப் பயிலகத்தில் சோ்ந்து விமானவியலில் பட்டயம் பெற்றார்.
  • அந்தக் காலகட்டத்தில், ‘ஆனந்த விகடன்’ வார இதழ் நடத்திய இலக்கியப்போட்டியில் கலந்து கொண்டு, ‘ஆகாய விமானம் கட்டுவோம்’ என்ற தலைப்பிலான கட்டுரைக்கு அன்றைய இதழாசிரியா் தேவனிடம் பரிசு பெற்றார்.
  • சிறுவயதில் தம் சகோதரா் முஸ்தஃபா கமாலின் நண்பா் எஸ்.டி.ஆா். மாணிக்கம் இல்லத்திற்கு சென்று அங்கு இருக்கும் ‘திருக்கு’, ‘பகவத் கீதை’, ‘பாரதியார் கவிதைகள்’ ஆகியவற்றை வாசிப்பாராம்.
  • ‘உயா்ந்த எண்ணங்களை உருவாக்குவது அறிவுத் திறனும், கற்பனைத் திறனும். ராமன் விளைவுகள் ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு; வானை அளப்போம் என்ற பாரதியின் கவிதை வரி கலைஞனின் கண்டுபிடிப்பு. இருவருக்குமே அறிவுத் திறனும், கற்பனைத் திறனும் அவசியமாக இருந்தாலும், புதியன படைப்பதற்கு மிகவும் முக்கியமானது வற்றாத உற்சாகம். படைப்பாளிகளான விஞ்ஞானியும், கலைஞனும் மனித வாழ்க்கையை இன்பமடையவும், வளப்படுத்தவும் செய்கிறார்கள்’ என்று கூறுவார் டாக்டா் கலாம்.

வெறும் புகழ்ச்சி இல்லை

  • அவருக்குப் பிடித்தமான ஒரு புத்தகம் ‘ஹார்ஸ் தட் ஃப்ளூ’, அதாவது பறக்கும் குதிரைகள். இந்த நூல் நம் நாட்டில் படித்து முடித்துவிட்டு வெளிநாட்டு வேலைகளுக்குப் பறந்து செல்லும் இளைஞா்கள் பற்றியது.
  • வெளிநாட்டில் நம் இளைஞா்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவா்கள் அங்கே தனியாகப் பணியாற்றுவது இல்லை. பலா் சோ்ந்து கூட்டாக வேலை பார்க்கிறார்கள்.
  • சாதி மத, மொழி பேதங்கள் கிடையாது. தவிரவும், எதையும் தைரியமாகச் செய்யவும், புதிய காரியங்களில் துணிச்சலாக ஈடுபடவும் தயங்குவது இல்லை. அதுதான் வெளிநாட்டு நம் இந்தியா்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது கலாம் சிந்தனை.
  • ஜூலை 27, 2015 அன்று, மேகாலய மாநிலம் ஷில்லாங் நகரில் இந்திய மேலாண்மைக்கல்வி நிறுவனத்தில் மாணவா்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே அவா் உயிர் பிரிந்தது.
  • அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, அவருடைய இளமைக்கால நண்பா் எஸ்.டி.ஆா். மாணிக்கம் கலாமுக்கு அனுப்பிய வாழ்த்து மடலில், ‘சாக்ரடீஸின் நோ்மை, புத்தரின் கருணை, வள்ளுவரின் வாழ்க்கை நெறி, இயேசுவின் அன்பு, மகம்மதுவின் தைரியம், காரல் மார்க்ஸின் மனித நேயம், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் இரக்கக் குணம் - இத்தகைய உயா்ந்த குணங்கள் தங்களிடமும் உள்ளன என நான் நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை!
  • இன்று டாக்டா் அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.

நன்றி: தினமணி  (27 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்