- சீன நாட்டில் புத்தாண்டு 2024 ஜனவரி முதல் நாளிலிருந்து புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துவிட்டன; அதில் மிகவும் முக்கியமானது ‘நாட்டுப்பற்றுக் கல்விச் சட்டம்’. தேசியவாதம் இன்று எத்தகைய வடிவங்களை எல்லாம் எடுக்கிறது என்பதற்கு இது உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
- நாட்டுப்பற்றை வளர்க்கும் கல்வியைச் சமூகத்தின் அனைத்து வயதுப் பிரிவினருக்கும் அளிக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது; பள்ளிக்கூடங்களிலும் உயர்கல்வி நிலையங்களிலும் குடும்பங்களிலும் அரசு வேலைகளைச் செய்யும் அரசு ஊழியர்களிடையேயும் கிராமங்களில் வசிப்போரிடமும் ஹாங்காங், மகாவ், தாய்வான் போன்ற சுயாட்சிப் பிரதேசங்களில் வாழ்வோரிடையேயும் நாட்டுப்பற்றை மேலும் வலுப்படுத்துவதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
என்ன சொல்கிறது சட்டம்
- சீன மக்கள் குடியரசில் தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது, நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாட வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.
- கல்வி நிலையங்களில் வழக்கமான பாடங்கள், சீன அரசின் பொதுவுடைமை சித்தாந்தங்கள் ஆகியவற்றுடன் அரசியல் கொள்கைகளும் கற்றுத்தரப்படுகின்றன. அவற்றுடன் நாட்டுப்பற்றை வளர்க்கும் செயலையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறது சட்டம். தனிப் பாடமாக இல்லாமல், வெவ்வேறு தலைப்பிலான பாடங்களிலும் பாடப்புத்தகங்களிலும் நாட்டுப்பற்றும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நாட்டுப்பற்று தொடர்பான பாடங்களுடன், நாட்டின் பாதுகாப்பைக் குடிமக்கள் எப்படி வலுப்படுத்த வேண்டும், அவர்களுடைய கடமை என்ன என்று கூறும் பாடங்களும் கற்றுத்தரப்படவிருக்கின்றன.
- நாட்டுப்பற்றை வலியுறுத்தும் சட்டம் சீனத்தில் கட்டாயமாக்கப்படுகிறது என்று லண்டனிலிருந்து வெளியாகும் ‘கார்டியன்’ பத்திரிகையில் கட்டுரை வெளியானதை அடுத்து, பிரிட்டிஷாரால் சீனத்தில் நடத்தப்படும் சில தனியார் கல்வி நிலையங்கள், வெளியேற முடிவெடுத்துள்ளன. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் சீனத்தில் இனி வேலை செய்ய முடியாதபடிக்குச் சட்டம் இருக்கிறது என்ற பீதியை ‘கார்டியன்’ கட்டுரை கிளப்பிவிட்டிருப்பதாக சீன அரசு வட்டாரங்கள் கண்டிக்கின்றன.
மக்கள் கருத்து
- ஷாங்காய் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஒரு மாணவரின் தாய், புதிய சட்டம் குறித்து சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ நிருபரிடம் பேசினார். “சீன மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும் சித்தாந்தப் பாடங்களிலும் ஒழுக்கநெறிப் பயிற்சிகளிலும் நாட்டுப்பற்றும் அங்கமாக இருக்கும் வகையில் சிறிய மாற்றங்கள்தான் செய்யப்படுகின்றன” என்றார்.
- “நாட்டுப்பற்றை ஊட்டும் பாடங்கள் முறையாக கற்றுத்தரப்படுகின்றனவா, மாணவர்கள் அதை நன்கு ஏற்கிறார்களா என்பதைச் சோதிக்க உள்ளூர் கல்வித் துறை அதிகாரிகள் இனி திடீர் ஆய்வுகளுக்கு வருவார்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
- தனியார் நடத்தும் சர்வதேச (தர) பள்ளிக்கூடங்களானாலும் அங்கும் சீன நாட்டுப்பற்றை வளர்க்கும் பாடங்களை நடத்த வேண்டும் என்கிறது சட்டம். பள்ளிக்கூடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சீன அரசு இயற்றியச் சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தியான்ஜின் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி பேராசிரியர் ஜியாங் வென்ஷோ தெரிவிக்கிறார். இறையாண்மையுள்ள எந்த அரசின் இறையாண்மை மிக்க எந்தக் கல்விக் கொள்கையும், நாட்டுப்பற்றுக்கு முக்கியத்துவம் தந்தாக வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார் அவர். இந்தச் சட்டம் அமல்செய்யப்பட்டால் சீன மக்களிடையே நாட்டுப்பற்றுடன் எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான சூழலும் மேலும் வலுவடையும் என்கிறார்.
புதிய சட்டமும் தியாகிகளும்
- இந்தச் சட்டம் பள்ளிக்கூடங்களிலும் பிற கல்வி நிலையங்களிலும் ஒழுங்கை ஏற்படுத்துவதுடன், நாட்டின் தலைவர்களையும் நாட்டுக்காக பாடுபட்ட தியாகிகளையும் எவரும், எந்தக் காரணத்துக்காகவும் அவமதிப்பதையும் கடுமையாக தடைசெய்கிறது. நாட்டின் வரலாற்றை மதிக்கவும், தலைவர்களையும் தியாகிகளையும் போற்றவும் உற்ற வகையில் இந்தச் சட்டம் அமல்செய்யப்படவிருக்கிறது. நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள், தியாகிகளின் உரிமைகள் இதன் மூலம் உறுதிசெய்யப்படவிருகிறது என்று ஜியாங் தெரிவிக்கிறார்.
- இந்தச் சட்டம் அமலாவதற்கு முன்பிருந்தே இதை எப்படி தங்களுடைய பாடத்திட்டத்திலும் பாடப்புத்தகங்களிலும் சேர்க்கலாம் என்று பல சர்வதேச கல்வி நிலையங்கள் தீவிரமாக ஆராயத் தொடங்கிவிட்டன என்றும் ‘கார்டியன்’ கட்டுரை தெரிவிக்கிறது.
- சோங்கிங் நிதி பள்ளிக்கூடத்தில் (உயர்கல்விக்கூடம்) நாட்டுப்பற்றை வளர்க்கும் பாடங்களைச் சீன அருங்காட்சியகங்களுக்குக் கூட்டிச் சென்றே நடத்த முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைப் போலவே தியாகிகள், தலைவர்கள் வாழ்க்கையில் தொடர்புள்ள இடங்களுக்கும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படக்கூடும் என்று தெரிகிறது.
இணையதள அச்சுறுத்தல்
- சீனச் சிறார்கள் பொழுதுபோக்குக்காக விளையாட பதிவிறக்கம் செய்யும் சில ‘செயலிகள்’ (ஆப்), மாணவர்கள் அதில் மனம் லயித்து கிட்டத்தட்ட அடிமையான பிறகு அவர்களை அச்சுறுத்தும் வேலைகளில் ஈடுபடுகின்றன. இனி அப்படி எந்த நிறுவனமாவது, தனிநபராவது செயல்பட்டால் அவற்றைத் தடுக்கவும் தண்டிக்கவும்கூட புதிய சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
- சீனத்தின் வட கிழக்கில் உள்ள ஜிலின், வட மேற்கில் உள்ள நிங்ஜியா ஹூய், பெய்ஜிங் ஆகிய பிரதேசங்களில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கைப்பேசிகளையும் செயலிகளையும் எப்படிக் கையாள வேண்டும் என்று மாணவர்களுக்குக் கற்றுத்தரும் வழிகாட்டுதல்களும் இனி கல்வி நிலையங்களிலேயே வழங்கப்படும்.
- இணையதளம், தகவல் தொழில்நுட்பம், ஊடகங்கள், பதிப்புத் துறை, பொதுப் பாதுகாப்பு, சந்தை ஒழுங்காற்றுத் துறை போன்ற பிற அரசுத் துறைகளும் இணையதளங்களில் இப்படி வரும் அச்சுறுத்தல்களைக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிவிட்டது சட்டம்.
நன்றி: அருஞ்சொல் (16 – 02 – 2024)