TNPSC Thervupettagam

நாமும் மெத்தனமாக இல்லை!

July 16 , 2020 1646 days 732 0
  • சீனா என்ன கருதுமோ, இதனால் சீனா கோபப்படுமோ போன்ற பல தயக்கங்களுக்கு விடை கொடுத்து, துணிந்து முடிவுகளை எடுப்பது என்று மத்திய அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு பாராட்டுக்குரியது.

  • அதில் மிக முக்கியமான முடிவு, கடற்படை கூட்டு அணிவகுப்பு நடத்துவதற்கு ஆஸ்திரேலியாவையும் இணைத்துக் கொள்வது.

மலபார் கடற்படை கூட்டு அணிவகுப்பு

  • ஆண்டுதோறும் அமெரிக்காவுடனும் ஜப்பானுடனும் இணைந்து இந்தியக் கடற்படை வங்காள விரிகுடாவிலும் இந்து மகா சமுத்திரத்திலும் கூட்டு அணிவகுப்பு நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதற்கு "மலபார் கடற்படை கூட்டு அணிவகுப்பு” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அணிவகுப்பில் இந்த முறை ஆஸ்திரேலியாவை இணைத்துக் கொள்வதன் மூலம், இந்தோ - பசிபிக் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நாம் நமது கடற்படையின் தயார் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

  • ஆஸ்திரேலியாவும் சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

  • கொவைட்- 19 கொள்ளை நோய்த்தாக்கத்துக்கு சீனாதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டியிருப்பது மட்டுமல்லாமல், உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து நடத்தும் விசாரணைக்கு முக்கியமான காரணம் ஆஸ்திரேலியாவின் வற்புறுத்தல்தான்.

  • அதேபோல, ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சீனாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆஸ்திரேலியா இடமளிக்கும் என்று உறுதி கூறியிருப்பது ஒரு மிகப்பெரிய திருப்பம்.

  • ஒருவழியாக இந்தியா தனது தயக்கத்தையெல்லாம் அகற்றி வைத்துவிட்டு சீனாவுக்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவது வரவேற்புக்குரியது.

  • 2007-லேயே இந்திய கடற்படை, அமெரிக்காவுடன் இணைந்து நடத்தும் வருடாந்திர மலபார் கடற்படை கூட்டு அணிவகுப்பில் கலந்துகொள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. இந்த ஐந்து நாடுகளின் கூட்டுக் கடற்படை அணிவகுப்பு என்பது ஒரு மிகப்பெரிய கடற்படை அணிவகுப்பாக இருந்திருக்கும். ஆனால், இந்தியா எதிர்பார்த்ததுபோல அந்த அணிவகுப்பை நடத்த முடியவில்லை.


 

ஆசிய நேட்டோ

  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டு அணிவகுப்பு நடத்தப் போகிறது என்கிற செய்தி வந்தபோதே, சீனா அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

  • அப்படியொரு அணிவகுப்பை வங்காள விரிகுடாவிலோ, இந்து மகா சமுத்திரத்திலோ நடத்தக் கூடாது என்றும், அது அந்தப் பகுதியிலுள்ள ஏனைய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் மிகக் கடுமையான விமர்சனங்களை சீனா முன்வைத்தது.

  • சீன ஊடகங்களும், சீனாவுக்குச் சாதகமான இந்திய ஊடகங்களும் அந்த ஐந்து நாடுகளின் கூட்டணியை "ஆசிய நேட்டோ' என்று விமர்சித்தன.

  • அமெரிக்காவுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டு அணிவகுப்பு நடத்துவதற்கு இந்தியாவிலும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுப்பப்பட்டது.

  • அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி அமைத்திருந்தது.

  • இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்காவுடன் எந்தவிதக் கூட்டு அணிவகுப்பு முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தியா முழுவதும் போராட்டம் நடத்துவதற்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதையெல்லாம் பார்த்த அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மிகவும் பயந்துபோய் விட்டார்.

  • அதன் விளைவாக, இந்தியக் கடற்படையை அழைத்து எந்தவிதமான பன்னாட்டுக் கடற்படை கூட்டு அணிவகுப்பும் தேவையில்லை என்று கூறி அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தியாவின் ராஜதந்திரம்

  • 2014- இல் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகுதான் இந்திய - அமெரிக்க ராணுவ கூட்டுறவுக்கு புதிய பரிமாணம் ஏற்பட்டது.

  • இந்தியாவின் கடற்படையும் சரி, ராணுவமும் சரி அமெரிக்காவுடன் பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் கலந்துகொண்டன. 2015- இல் மலபார் கடற்படைக் கூட்டு அணிவகுப்பில் ஜப்பான் கலந்துகொண்டது. இந்த முறை ஆஸ்திரேலியாவும் கலந்துகொள்ள இருக்கிறது.

  • கடந்த 13 ஆண்டுகளில் இந்தியாவை எந்தவிதமான கடற்படை கூட்டு அணிவகுப்பும் நடத்தவிடாமல் ஒருபுறம் தடுத்துவிட்ட நிலையில், சீனா தனது கடற்படை பலத்தை மட்டும் இந்து மகா சமுத்திரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.

  • இப்போது இந்து மகா சமுத்திரத்தில் நிரந்தரமாக சீனாவின் வலிமையான கடற்படை பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

  • ஆப்பிரிக்காவின் ஜிபோத்தியில் சீனா கடற்படைத் தளம் அமைத்திருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலும், கோதாரிலும் சீனாவின் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

  • இந்து மகா சமுத்திரத்தில் உள்ள எல்லாத் தீவுகளிலும் சீனா தனது அரசியல், ராணுவ செல்வாக்கை அதிகரித்து வந்திருக்கிறது.

  • கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்களை அத்துமீறித் தாக்கி படுகொலை செய்ததற்குப் பிறகும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

  • இந்தோ - பசிபிக் கடற்பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள வேண்டுமானால் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியம்.

  • அந்த வகையில், மலபார் கடற்படை கூட்டு அணிவகுப்பில் ஆஸ்திரேலியாவை இணைத்துக்கொண்டது இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திரம். சீனா என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி: தினமணி (16-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்