TNPSC Thervupettagam

நாம் பெற்ற செல்வம்!

July 12 , 2024 184 days 201 0
  • பிள்ளைப் பிராயத்தை இழந்தோமே என்று ஓர் ஒளிக்கீற்றில் மறையும் இளமையை நினைத்து அங்கலாய்ப்பது உண்டு. இளமைக் காலம் வாழ்வில் பொற்காலம். அதை முழுமையாகப் பயன்படுத்தினால்தான் பிற்காலம் நற்காலமாக துணை நிற்கும்.
  • இளமைப் பருவத்தில் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு முதன்மையான பங்கு உண்டு. "அவன் அமைதிகொள்வான் நான் தூக்கியபோது, நான் அமைதி கொள்வேன் அவன் தூங்கியபோது' என்று குழந்தைகள் வளரும் ஒவ்வொரு பருவமும் ரம்யமானவை.
  • குழந்தைகளிடம் பேதம் இல்லை. எல்லோரிடமும் சிரித்துப் பழகும் குணம் பெரியவர்களுக்குப் பாடம். அதனால்தான் "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று' என்றார் கவியரசர். பக்தி மார்க்கத்திலும் ஆண்டவனை குழந்தை வடிவில் ஆராதிக்கிறோம்.
  • பிள்ளைகளை அன்பால் அரவணைத்து, திறமைகளை மேம்படுத்த வேண்டியது பெற்றோருக்கு மட்டுமில்லாது சமுதாயத்தின் கடமை. ஆனால் அது எந்த அளவிற்கு நிறைவேற்றப்படுகிறது என்று பார்க்கையில் வேதனைதான் மிஞ்சுகிறது.
  • தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேலை நாடுகளில், ஏன் குழந்தை பெற்றுக் கொண்டு கஷ்டப்பட வேண்டும் என்று திருமண வாழ்க்கையை தவிர்க்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. அதே வேளையில், சந்ததி வளர்வதைக் கொண்டாடும் வகையில் தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாசாரம் பழங்குடியினரிடம் உண்டு.
  • இன்போசிஸ் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவையில் உறுப்பினராகத் தனது முதல் உரையில் பெண்கள், முக்கியமாக தாய்மார்கள் எவ்வாறு பாதுக்காப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். ஒரு மனைவி இறந்துவிட்டால் கணவன்மார்கள் வேறு திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் குழந்தைகளுக்கு வேறு தாய் கிடைக்க மாட்டாள் என்றார்.
  • பெண்களிடம் கருப்பை வாய் புற்றுநோய் பெரிய பிரச்னையாக உருவாகியிருக்கிறது. 9 வயதிலிருந்து 40 வயது வரை பெண்களுக்கு இதற்கான தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் என்ற சுதா மூர்த்தியின் உரை அவையோர் அனைவரின் வரவேற்பைப் பெற்றது.
  • எவ்வளவுதான் குழந்தை வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோர்கள் தம் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
  • சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு கோரமான நிகழ்வு. வேலையிலிருந்து கணவன் வீடு திரும்பியபோது குழந்தை அழுதுகொண்டிருப்பதை பார்க்கிறான். மனைவி கைவேலையாக சமையலறையில் இருந்தாள். என்ன தோன்றியதோ, குழந்தையை கழுத்துப் பக்கம் அடித்ததில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் அறுந்து குழந்தை இறந்துவிடுகிறது.
  • அவசர உலகில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிர்பந்தம். குழந்தைகளுக்குப் பெற்றோர் பராமரிப்பு இல்லாமல் போய்விடுகிறது. காலம் கடந்துவிடுகிறது. குழந்தைகள் தம் இளம் பருவத்தை இனிமையாக கழிக்க முடியாமல் ஒருவித மன அழுத்தத்தோடு வாழ்க்கையை அணுகுகிறார்கள்.
  • வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் கொண்டது. பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையும் துணிச்சலும் தேவை. தோல்விகளைக் கண்டு துவளக் கூடாது. வளர்ப்பின் குறைபாடு காரணமாக இளைஞர்களுக்கு சிறு பின்னடைவையும் தாங்கும் சக்தி இல்லை. திரும்ப வழியில்லா முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். அதிகமாக ஏற்படும் தற்கொலைகளுக்கு பெற்றோரின் கடமை தவறலே காரணம் என்பது தெளிவு.
  • பெற்றோருடன் குழந்தைகளோடு அன்பால் உருவாகும் பிணைப்பு அலாதியானது தெய்விகமானது.இந்தப் பிணைப்புதான் பிற்காலத்தில் அந்தக் குழந்தையின் நடத்தை, சமுதாயத்தில் பழகும் நேர்த்தி, எல்லோருடன் அனுசரித்துப் போகும் ஒழுக்கம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இளையவர்கள் பெரியவர்களின் நடத்தையை, எடுக்கும் முடிவுகளை கூர்மையாக கவனிக்கிறார்கள், அதுவே அவர்களின் ஆளுமையாக உருவெடுக்கிறது.
  • "மைந்தர்தமை நெஞ்சில்' பாராட்ட வேண்டும் என்று ஒüவை சொல்லியிருந்தாலும், இக்காலத்திற்கு ஏற்றவாறு இளையவர்களின் நல்ல செய்கைகளை மனம் திறந்து பாராட்ட வேண்டும். இது அவர்களின் சுய மரியாதையை உயர்த்தும். சந்தோஷத்தையும் நல்ல மன நிலையையும் கொடுக்கும்.
  • தினமும் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி அவர்களோடு மனம் திறந்து பேச வேண்டும். கைப்பேசி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாட்டம் காரணமாக பரஸ்பர உரையாடல் மறைந்துவிடுகிறது. இது சரி செய்ய முடியாத விரிசலை ஏற்படுத்தும் .
  • குழந்தைகள் பெற்றோரிடம் தைரியமாக குறை நிறைகளை பகிர்ந்துகொள்ள நல்ல சூழலை உருவாக்க வேண்டும். குடும்பம் ஒன்றாகச் சேர்ந்து உணவருந்த வேண்டும். "சேர்ந்துண்ணும் குடும்பம் நிலைத்திருப்பது திண்ணம்' என்பது சத்தியம்.
  • விளையாட்டுத் திடல் நல்லுணர்வுகளின் ஊற்று என்றால் மிகையில்லை. குழந்தைகளை விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு அழைத்து செல்லுதல், அவர்களோடு சேர்ந்து விளையாடுதல் குழந்தைகளுக்கு அளவிலா மகிழ்ச்சியை அளிக்கும். அப்போதுதான் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை அறிய முடியும். திறமை என்பது தெரிந்ததை நன்கு செய்தல் செய்வதனைத்தையும் திறனுடன் செய்தல் என்பது உண்மை.
  • "நல்ல முன்னோடிகள் சமுதாயத்தில் இல்லை' என்று சமீபத்தில் ஒரு பிரபலம் குறைபட்டுக் கொண்டார். அதற்காக எல்லோரும் களத்தில் குதிக்க முடியாது. உதாரணமாக இருக்க ஒரு தகுதி வேண்டும். பெற்றோரை விட வேறு யார் உதாரணமாக இருக்க முடியும்? குழந்தைகள் பெற்றோரையும் ஆசிரியரையும் முன் உதாரணமாகப் பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்கிறோமா என்பது சந்தேகமே. கடுஞ்சொற்கள் காதைத் துளைக்கின்றன. மோசமான வார்த்தைகள் சகஜமாக பேச்சுவழக்கில் வந்துவிட்டன. சர்வ சாதாரணமாக பொய்யுரைகள் மெய்யுரைகளாக சித்தரிக்கப்படுகின்றன.
  • எதிர்மறை கருத்துகள் சமூக வலைதளங்களில் கட்டுக்கடங்காமல் கரை புரண்டு ஓடுகின்றன. நேர்பட நாம் குழந்தைகளோடு ஆரோக்கியமான வகையில் விவாதிக்க வேண்டும். பொதுவாழ்வில் உள்ள சுயநல வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக எதையும் எதிர்ப்பது, ஆராயாமல் கதைப்பதை ஊக்குவிக்கிறார்கள்.
  • இருந்த இடம் பள்ளம் என்றிருப்போம் புதிய வார்ப்புகளை ஏற்க மறுப்போம் என்ற நிலைப்பாடு, சிந்தனை சக்தியை குலைத்து விடுகிறது. அதுவே எதிர்மறை கருத்துகளைப் பரப்பும் சுயநலவாதிகளின் நோக்கம். அந்த வலையில் பல இளையவர்கள் சிக்குகிறார்கள். சுவாமி விவேகானந்தர் எந்தக் கருத்தையும் சுயமாகச் சிந்தித்து ஆராய்ந்து ஏற்பதுதான் விவேகம் என்றார். ஆனால் எதிர்மறை கருத்துகள் திணிக்கப்படுகின்றன.
  • தமிழ் மொழி பாதுகாப்பு என்ற போர்வையில் எந்த வேற்று மொழியும் கற்க வேண்டாம், நுழைவுத் தேர்வுகள் வேண்டாம், பிற்படுத்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் வீடு தேடி தரமான கல்வி அளிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம், தகைசால் கல்விக் கொள்கை வேண்டாம் என்று எதிர்ப்பு கலாசாரம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இதிலிருந்து விடுபட்டுச் செல்லும் இளைஞர்கள் உலக அளவில் சாதிக்கிறார்கள். பாவப்பட்ட பலர் முன்னேற்றத்தை அனுபவிக்காமல் காலம் தள்ளுகிறார்கள்.
  • குழந்தைகள் தவறு செய்தால் பெரியோர் கண்டிக்க வேண்டியது அவசியம். ஆனால் எதற்கெடுத்தாலும் குறை கூறுவது, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று கடும் கட்டுப்பாடு விதித்து விரட்டுவது, ஏனையோரின் குழந்தைகளை ஒப்பிட்டு மட்டம் தட்டுவது, தான் சாதிக்க முடியாததை குழந்தைகள் மூலம் அடைய நினைப்பது, இவை எல்லாம் எதிர்மறை விளைவுகளுக்கு வித்திடுகிறது. குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள், எதிர்க்கத் துவங்குவார்கள், போதை போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். குடிக்க வசதியோடு எங்கு பார்த்தாலும் திறந்திருக்கும் மதுக்கடைகளின் வலையில் இளைஞர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.
  • புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ளது. கண்களில் பல கனவுகளைத் தாங்கி சிறார்கள் பள்ளிக்குச் செல்லும் காட்சி சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்தக் கனவுகள் மெய்ப்பட முழுமையான மாணாக்கர்களின் ஆளுமை வலிமை பெறத் தக்க கல்வி முறை தேவை.
  • எல்லா வகையிலும் கல்வித் தரம் உயர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலுரையாக இருபதாயிரம் பஞ்சாயத்து பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 79,500 துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி டாப்லட்டுகள் வழங்கபட்டுள்ளதாகவும் மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நவீன யுக்திகள் எந்த அளவிற்கு அவதானிக்கப்படுகிறது என்பது முக்கியம்.
  • பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்குப் படையெடுக்கிறார்கள். நகரங்களில் சில அரசுப் பள்ளிகளில் விரல் விட்டு எண்ணும் அளவில் மாணவர்கள் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. கல்வி உரிமை சட்டம் அளிக்கும் 25 சதவீத ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு கோடிக்கணக்காக பணம் தனியார் பள்ளிகளுக்கு அளிப்பதற்கு பதிலாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தலாம். அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (12 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்