TNPSC Thervupettagam

நாய்க்கடி இறப்புகள்: உறுதியான நடவடிக்கை அவசியம்

July 31 , 2024 164 days 127 0
  • தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரை 2,42,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 22 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் ஆய்விதழ் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. மனித – விலங்கு எதிர்கொள்ளலில் மிக முக்கியப் பிரச்சினை நாய்க்கடி. விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் 95% நாய்க்கடியால் ஏற்படுவதாக இந்த ஆய்விதழ் தெரிவிக்கிறது.
  • தகுந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, உரிமம் பெற்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களால் பெரும்பாலும் பிரச்சினை இல்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், நாய்க்கடிக்கு ஆளாவோரில் 75% பேர் வீட்டு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பவர்களிலும் வீட்டு நாயால் கடிபட்டவர்களே அதிகம். அதேபோல் ஆதரவின்றித் தெருவில் திரியும் நாய்களாலும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
  • 5 முதல் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். நாய்க்கடியின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை வேறுபடும். நாய் கடித்த அன்றைக்கே முதல் தவணை ஊசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில், சிலர் தாமதமாகச் சிகிச்சை பெறுகின்றனர்.
  • மேலோட்டமான கடிக்கு ஐந்து தவணைகள் ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில், வேலைக்குச் செல்வோர் வருமான இழப்பு ஏற்படும் என்பதற்காக மருத்துவமனைக்குச் செல்வதில்லை. நாய் கடித்த இடத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்றித் தாங்களாகவே மருந்துகளைப் பூசுகிறார்கள். இதுவும் நோய்த்தொற்றின் தீவிரத்துக்கு வழிவகுக்கும்.
  • 2030க்குள் ரேபிஸ் மரணங்களை முற்றாக ஒழிக்க வேண்டும் என்கிற தேசியச் செயல் திட்டத்தின் இலக்கை அடைய வேண்டுமென்றால், முதலில் இதுபோன்ற குறைகளை அரசு களைய வேண்டும்.
  • நாய்க்கடிக்குச் சிகிச்சை பெறுவது குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குவதுடன் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவில் மருந்துப் பொருள்கள் இருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • குடியிருப்புப் பகுதிகளில் உணவுப் பொருள்களைக் கொட்டுவதும் தெருநாய்களுக்கு உணவிடுவதும் நாய்களின் பரவலை அதிகரிக்கிறது. விலங்கு நல ஆர்வலர்களும் விலங்குப் பாதுகாப்பு அமைப்புகளும் தெருநாய்களின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் நிலையில், நாய்க்கடியைத் தடுப்பதும் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுமே இப்போதைக்கு அரசிடம் இருக்கும் சட்டபூர்வ வழிகள். 2020ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 12,97,230 நாய்கள் இருக்கின்றன.
  • இவற்றில் 50% நாய்களுக்குக்கூட இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சை செய்திருக்க முடியாத நிலையே நீடிக்கிறது. இதற்கு ஆகும் பொருள்செலவு மட்டுமே சராசரியாக ரூ.107 கோடியைத் தாண்டும் என்கிற நிலையில், தெருநாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி போடுவதும் மற்றுமொரு சவாலாகவே நீடிக்கிறது.
  • சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி சார்பில் நாய்கள் பிடித்துச் செல்லப்பட்டு, அறுவைசிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அதே பகுதியில் விடப்படுவதுதான் வழக்கம். வெறிநோய்த் தடுப்பூசிக்கென்று தனியாக முகாம் நடத்தப்படும். வெறிபிடித்த நாய்கள் தனியாகக் கூண்டில் அடைக்கப்பட்டுப் பராமரிக்கப்படும். லட்சக்கணக்கில் சுற்றித் திரியும் தெருநாய்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்கத் தற்போதைக்கு அரசிடம் இருக்கும் அதிகபட்சத் தீர்வுகள் இவை மட்டுமே.
  • இவற்றில் ஏற்படும் சிறு தொய்வுக்கும் புறக்கணிப்புக்கும் மக்களின் உயிர்தான் விலையாக மாறும். எனவே, தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்றுவழிகளை அரசு சிந்திக்க வேண்டும். நாய்க்கடி மரணங்களை முற்றிலும் தவிர்ப்பதற்கும் நாய்க்கடியிலிருந்து மக்களைக் காப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்