- உலகம் முழுவதும் சுமார் 55 கோடிப் பேர் ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த 30 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
- மூட்டுவலி உலகளாவிய பாதிப்பாக இருந்தாலும் இந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறைகள் இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளன.
இரண்டு வகை மூட்டுவலி
- ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலியில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் முதுமை மூட்டழற்சி (Osteo Arthritis), முடக்குவாதம் (Rheumatoid Arthritis) ஆகிய இரண்டு வகைகளே பெரும்பாலானவர்களைப் பாதிக்கின்றன. முதுமை மூட்டழற்சி பொதுவாக இடுப்பு, முழங்கால் மூட்டு சேதமடைவதாலோ தேய்வதாலோ அல்லது விபத்தால் காயமடைவதாலோ வருவதாகும். உடல் பருமன், வயது முதிர்வு, பாலினம் (பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்), மரபியல் போன்றவை இந்நோயை ஏற்படுத்தும் காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
- ஆனால், முடக்குவாதம் ‘தன்னுடல் தாக்கும்’ நோயாகும். அதாவது, ஒருவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் அவரது உடலில் உள்ள சொந்தத் திசுக்களை அல்லது செல்களைத் தவறுதலாகத் தாக்குவதால் வருவது. இந்த நோய் உள்ளவர்களுக்குக் கை, கால் விரல்கள் உள்பட உடலில் உள்ள அனைத்து மூட்டுகளிலும் வீக்கம் ஏற்பட்டு மிக அதிகமான வலி ஏற்படும்.
பாதிப்புகள்
- மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைப் போல வெளியே நடமாட முடியாமல், அவர்களது இயக்கம் குறைந்து வீட்டிலேயே முடங்கிவிட நேரிடுகிறது. கடுமையான மூட்டு வலி, ஒருவர் தன்னுடைய வேலையைச் செய்ய முடியாமல் பணி இழப்பை ஏற்படுத்துவதுடன் தனது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்துகிறது.
- அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களது தேசிய உற்பத்தியில் 1-3 சதவீதத்தை மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சிகிச்சைக் காகவோ சமூகப் பாதுகாப்புக்காகவோ செலவிடுகின்றன. உதாரணமாக, அமெரிக்காவுக்கு மட்டும் இந்த நோய் ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகளும் நோய் முற்றுதலும்
- மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட 50% சாத்தியம் உண்டு. மேலும், இவர்கள் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மன அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
- எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி, காலை மடக்கி நீட்டுவதில் பிரச்சினை, மூட்டுகளில் எலும்பு வளர்ச்சி ஆகியவை மூட்டு பாதிக்கப் பட்டிருப்பதற்கான அறிகுறிகள். 40 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இந்த நோய் அரிதாகவே வருகிறது. பெரும்பாலும் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, கவனிக்கத் தவறும்பட்சத்தில் மூட்டு அதிகம் பாதிக்கப்பட்டு நோய் முதிர்ச்சி நிலையை அடைகிறது.
- மூட்டு வலியானது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப் பட்டு மருத்துவர்களின் ஆலோசனையோடு நோயைத் தீவிரப்படுத்தும் செயல்களைக் குறைத்துக்கொண்டால், நோய் முற்றுவதைச் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட வாய்ப்பிருக்கிறது.
சிகிச்சை முறைகள்
- சேதம் அடைந்த மூட்டுப் பகுதியைச் சரிசெய்வதற்கென இதுவரை எந்தச் சிகிச்சை முறையும் கண்டறியப்படவில்லை. மூட்டு மிகவும் மோசமாகச் சேதம் அடைந்து மூட்டுவலி அதிகமாகும்போது மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே தற்போதைக்கு இருக்கும் ஒரே சிகிச்சை முறை. ஆனால், மூட்டு மாற்று அறுவைசிகிச்சையானது சுமார் 70 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை செலவு பிடிக்கக்கூடியது.
- ஆரம்ப காலகட்டத்தில் வலியைக் குறைக்க வலி நிவாரணிகளும் பிசியோதெரபிமருத்துவமும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட மூட்டினுள் ஜெல் போன்ற திரவம் ஊசி மூலமாகச் செலுத்தப்படுகிறது. இது இரண்டு மூட்டு எலும்புகளுக்கும் இடையிலான உராய்வைக் குறைத்து, வலியைக் குறைக்க வழிசெய்கிறது.
- இந்த ஜெல் திரவத்தைத் தங்கள் கால்களில் செலுத்திக்கொண்டவர்கள் வலியில்லாமல் இயல்பாக நடக்க முடிகிறது. இந்த நோய்க்கான சிகிச்சை முறையில் இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனினும் இந்தச் சிகிச்சை முறை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாகக் கிடைத்தாலும், இந்தியாவில் இன்னும் பரவலாகக் கிடைக்கவில்லை.
புதிய ஆராய்ச்சிகள்
- இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் நூற்றுக் கணக்கான ஆய்வகங்களில் ஆய்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஆனாலும் மூட்டுவலிக்கான சிகிச்சையைக் கண்டு பிடிப்பதில் பல சவால்கள் இருக்கின்றன. பாலினம், வயது, மரபியல் எனப் பலதரப்பட்ட காரணிகள் இந்த நோயை ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்ட மூட்டில் அவை வித்தியாசமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
- அதாவது மேலோட்டமாக இது மூட்டுவலியாகத் தெரிந்தாலும், நோய் ஏற்படுத்தும் காரணியைப் பொறுத்து மூட்டுக்குள் மூலக்கூறு அளவில் நிகழும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. நோய் ஏற்படுத்தும் காரணிகள் மூலக்கூறு அளவில் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை.
- அடுத்ததாக, மூட்டின் அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் கார்டிலேஜ் தசை, ஒருமுறை சேதம் அடைந்துவிட்டால் மறு உருவாக்கம் அடையும் தன்மை அந்தத் தசைக்கு இல்லை. சேதமடைந்த தசை, தானாகவே மறு உருவாக்கம் அடைவதை ஊக்குவிக்கும் சிகிச்சை முறைகள் கண்டறியப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 - 10 – 2023)