- கல்லூரிச் சூழலில் வகுப்பில் ஒழுங்காகப் பாடங்களைக் கவனிக்காத, அடிக்கடி வகுப்புக்கு வராத ஒரு மாணவனைத் தனியாக அழைத்து “என்ன நடக்கிறது? ஏன் உன்னுடைய நடவடிக்கையில் இவ்வளவு மாற்றங்கள் தெரிகின்றன”? என்று கேட்டபோது, ‘‘சார், எனக்கே தெரியல. என்னுடைய நடவடிக்கை சரியில்லைதான். நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன்... தெரியல சார்? ஆனா, நானே நெனச்சாலும் என்னால மாற முடியல. வகுப்பறையில் முழுசா உட்கார முடியல. ஒரு அரை மணி நேரம் செல்போன் இல்லாம இருக்க முடியல” என்று வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டான்.
- கரோனா ஊரடங்குக் காலத்தில் அளவுக்கு அதிகமான நாட்கள் வீட்டிலேயே இருந்ததால், இணைய வகுப்புகளுக்கு இடம்பெயர்ந்த மாணவர்கள் தங்களுக்கென்று தனி உலகத்தை அமைத்துக்கொண்டார்கள், அல்லது சமூக வலைதளங்கள் உருவாக்கி வைத்திருக்கும் இன்னொரு மெட்டா உலகத்துக்குள் பயணிக்க ஆரம்பித்தனர். அதிலிருந்து அவர்கள் இன்னும் வெளிவர முடியாமல் தவிக்கின்றனர்.
- இத்தகைய போக்கு, அவர்களின் மதிப்பீடுகளில் பிறழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு எதெல்லாம் சரி என்று பட்டதோ அதெல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தவறு என்று படுகிறது. இதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒருசேரக் குழப்பமடைந்து நிற்கின்றனர். இந்தத் தலைமுறையினரை எப்படிப் புரிந்துகொள்வது, இவர்களை எப்படி வழிநடத்துவது, இவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் கவலையும் அச்சமும் எல்லோருடைய மனதிலும் இருக்கின்றன.
- வீட்டில் சொகுசாக அமர்ந்துகொண்டும் படுத்துக்கொண்டும் மனம் போன போக்கில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டதால், குறைந்தபட்சம் உழைத்தால் போதும் என்று மாணவர்கள் நினைத்துக்கொண்டார்கள். எதையும் கஷ்டப்படாமல் செய்ய வேண்டும் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்காகக் குறுக்கு வழிகளைத் தேடுகிறார்கள். அதற்காகப் பொய் சொன்னாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துக்குள் நுழைந்துவிட்டனர்.
- எனவேதான், ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் அளவுக்கு அதிகமாகப் பொய் சொல்கிறார்கள். மேலும், வீட்டில் தனியறையில் இருந்துகொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டுள்ளதால், கணிசமானோர் பல்வேறு நிலைகளில் போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகியிருக்கிறார்கள். இது பெற்றோருக்குத் தெரிவதில்லை. தங்கள் பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்று தெரியவரும்போது, அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
- கடந்த பத்தாண்டுகளில் இணையதள வசதியுடன் கூடிய கைபேசிப் பயன்பாடு பெருமளவு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரிடம் கைபேசிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கின்றன. எவ்விதத் தடையுமின்றி அனைத்தையும் அனுமதிக்கும் சமூக வலைதளங்கள் இளைஞர், இளம் பெண்கள் மத்தியில் ஒருவிதமான கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை விதைத்திருக்கின்றன.
- எனவே, பாலியல் சார்ந்த ஒளிப்படங்கள், பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் காணொளிகள், பாலியல் வல்லுறவு சார்ந்த நிகழ்வுகள், கதைகள் ஆகியவற்றை நுகர்கிறார்கள். இந்த நுகர்வால் ஏற்படும் உளவியல் சார்ந்த சிக்கல்களையும், உடல் சார்ந்த விளைவுகளையும் தன்னந்தனியே வைத்துக்கொள்கிறார்கள். யாரிடமும் பகிர்ந்துகொள்ள பயப்படுகிறார்கள். இதனால் மனதிலே ஒரு குழப்பமும் தேக்கமும் ஏற்பட்டிருப்பதை அவர்களால் உணர முடிகிறது.
- சமூக வலைதளங்களை எப்படி ஆரோக்கியமான விதத்தில் பயன்படுத்துவது, எவ்வளவு நேரம் அதை நுகர்வது என்பது பற்றியெல்லாம் வழிகாட்டுதல் இல்லாத சூழலில், ஒவ்வொரு மாணவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, அவரவர்க்கு உகந்த வகையில், நல்லது-கெட்டது என்று பிரித்தறியக்கூட முடியாத சூழலில் அதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.
- பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதை உணர்த்தினாலும் அதைக் கேட்டுக்கொள்ளும் மனநிலையில் மாணவர்கள் இல்லை. சமூக வலைதளங்களுக்கும் கைபேசியில் உள்ள செயலிகளுக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட அடிமைத்தனத்துக்குள் நாம் இருக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் இருப்பதுதான் அடிமைத்தனத்தின் சுகம் என்று சொல்லலாம்.
- வெகுஜனத் தொடர்பியல் துறையில் பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கிய மார்ஷல் மக்லூகன் என்ற அறிஞர், இந்த எதார்த்தத்தைத் ‘தொழில்நுட்ப நிர்ணயவாதம்’ என்று கூறுகிறார். அளவுக்கு அதிகமாக இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளையும் இளைஞர்களையும் குறிப்பிட்ட விதத்திலான சிந்தனைகளுக்குள்ளும் செயல்பாடுகளுக்குள்ளும் தள்ளிவிட்டு, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது தொழில்நுட்பம். அதன் விளைவுகளைத்தான் இன்றைய இளைஞர்களிடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
- எது உண்மையான நட்பு, எது உண்மையான காதல் என்பதற்கெல்லாம் பெரும்பாலானோரிடம் தெளிவான புரிதல் இல்லை. நீ எனக்குப் பயன்படும் வரை தேவை. ஒருவேளை நீ எனக்குப் பயன்படவில்லை என்றாலோ நீ எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றாலோ, உன்னுடைய நட்பும் உறவும் எனக்குத் தேவை இல்லை.
- இதுபோன்ற மனநிலை இன்றைய இளைஞர்களிடம் இயல்பாக இருக்கிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு நட்பு இருந்தால் போதும், காதல் இருந்தால் போதும் என்கிற எண்ணம் வெளிப்படுகின்றது. வாழ்க்கையின் ஆழத்தைத் தொடாமல் மேலோட்டமாகவே சிந்திக்கும், மேலோட்டமாகவே செயல்படும் மனநிலை இளைஞர்கள் பலருக்கும் வந்துவிட்டது.
- அரசு இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, இணைய உலகைச் சீர்ப்படுத்த வேண்டும். கட்டுக்கடங்காமல் செயல்படும் வலைதளங்களைக் கட்டுப்படுத்தி, எப்படிப்பட்ட படங்களை, காணொளிகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற ஒருசில திட்டவட்டமான நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும். ஒருசில ஒழுங்குகளை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் பள்ளிக் குழந்தைகளையும் கல்லூரி இளைஞர்களையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் பொறுப்பை நாம் எல்லோரும் ஏற்க முடியும்.
- அதேபோல பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குரிய கடமைகளை உணர்ந்து, திசைமாறிச் செல்லும் பிள்ளைகளையும் மாணவர்களையும் தனியாக அழைத்து, அவர்களோடு ‘தரமான’ நேரத்தைச் செலவழிக்க வேண்டும். அவர்ளோடு அமர்ந்து பேசுவதும், உரையாடுவதும் அவர்களின் பிரச்சினைகள் என்னென்ன என்பதை அடையாளம் காண்பதும் அவசியம்.
- அதற்கேற்ற வகையில் அவர்களை நெறிப்படுத்துவது காலத்தின் தேவை. நான்கு பேருக்கு மத்தியில் வைத்துத் திட்டுவதையும், அறிவுரை சொல்வதையும் ஒருவேளை அவர்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால், தனியாக அவர்களை அழைத்து, உரிய மதிப்புக் கொடுத்து அக்கறையோடு பேசும்போது, உற்றுக் கவனிக்கும்போது, எதைச் சொன்னாலும் கேட்கும் பக்குவம் இளைஞர்களுக்கு இருக்கிறது. இந்த மந்திரத்தை மறக்காமல் பின்பற்றினால், நாளைய தலைமுறையை நாம் எளிதாகக் காப்பாற்றிவிடலாம்.
நன்றி: தி இந்து (24 – 04 – 2022)