- சீதை குறித்த தொன்மங்களைக்கொண்டு ‘அடவி’ என்றொரு சிறுகதையை அம்பை எழுதியிருக்கிறார். மண்டோதரியால் கடலில் விடப்பட்ட சீதை, ஒரு கானகத் தலைவனின் வீட்டில் வளர்கிறாள். வீட்டைச் சுத்தம் செய்வதற்காகப் பெருக்கிக்கொண்டே வந்த சீதை, அங்கே வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய வில்லைத் தன் இடக்கையால் தூக்கி, அந்த இடத்தைச் சுத்தம் செய்ததைக் கண்ட ஜனகன் பெரிதும் ஆச்சரியப்பட்டு, ‘இவள் சக்தியின் அவதாரமே ஆவாள்.
- இந்த வில்லைத் தூக்கி வளைப்பவனுக்குத்தான் இவள் மனைவியாவாள்’ என்று முடிவுசெய்கிறான் என்று விரஜ மொழி நாட்டுப்பாடல் கூறுவதாக அ.அ.மணவாளன் எழுதியிருக்கிறார். சீதையின் வனப் பிரவேசம் தொடர்பான தொன்மக் கதைகளைத்தான் நிகழ்காலத்துடன் பொருத்தி மறுவாசிப்புச் செய்திருக்கிறார் அம்பை.
- ‘அடவி’ புனைவின் முக்கியக் கதாபாத்திரம் செந்திரு. இவள் சீதைக்கான குறியீடு. செந்திரு என்றால் ‘லக்ஷ்மி’ என்று பொருள். சீதையும் திருமகளின் அவதாரமாகப் பார்க்கப்படுபவள். பிரசவத்துக்குச் செல்லும் வழியில் மரத்தடியில் பிறக்கிறாள் செந்திரு. எம்.எஸ்ஸி. படித்தவள். திருமலை என்பவனைக் காதல் திருமணம் செய்துகொள்கிறாள். திருமலையின் வியாபாரத்தைப் பெருக்குவதில் செந்திருவின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. பதினான்கு ஆண்டு காலச் செந்திருவின் உழைப்பில், அவனது வியாபாரம் பல மடங்கு பெருகுகிறது.
- ஆனாலும் வியாபாரத்தில் இவளுக்குரிய இடம் மறுக்கப்படுகிறது. நண்பர்களைக் காரணம் காட்டுகிறான் திருமலை. இவள் மனம் கனத்துப்போகிறது. சில நாள்கள் காட்டில் தங்க முடிவெடுக்கிறாள். சீதையை லட்சுமணன் காட்டில் விட்டுவிட்டு வந்ததைப் போல், திருமலையின் தம்பி அண்ணாமலை செந்திருவைப் பேருந்து நிலையத்தில் விட்டுவருகிறான். காட்டில் ருக்மணிபாயி, மீனாபாயி, சவிதாபாயி ஆகிய மூன்று தோழிகள் செந்திருவுக்குக் கிடைக்கின்றனர். நால்வரும் மீனும் கள்ளும் உண்டு மகிழ்கின்றனர். காட்டில் வீணை ஒலி கேட்கிறது. செந்திரு அந்த ஒலியைத் தேடிப் போகிறாள்.
- தொன்மத்தை நவீன வாழ்க்கையுடன் பொருத்தி அம்பை இந்தச் சிறுகதையை எழுதியிருக்கிறார். சீதையுடன் அவளது துயரங்கள் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. நிகழ்காலத்தில் பலர் சீதையின் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தினந்தோறும் அக்கினிப் பிரவேசம் செய்கிறார்கள். அதன் வடிவம்தான் மாறியிருக்கிறது. கோயில் முன்பு கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்வது அக்கினிப் பிரவேசத்தின் மாற்று வடிவம்தான். அடுத்து, வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களின் கூட்டு நனவிலி மனதில் சீதையின் தொன்மம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ‘மறைந்த உலகம், மறைந்த அடையாளம் அதனை மீண்டும் பெற மனிதனின் முயற்சி ஆகியனவற்றைக் கூறும் கதையே அடிப்படைத் தொன்மம்’ என்பது நார்த்தராப் பிரையின் கருத்து.
- நவீன இலக்கியங்கள்தாம் தொன்மக் கதைகளை நிகழ்கால அரசியலுடன் மறுஉருவாக்கம் செய்துவருகின்றன. தொன்மக் கதைகளின் இடைவெளிகளை நிரப்புவதில் நவீன இலக்கியங்களின் பங்கு முக்கியமானது. ராமன் மிகச் சிறந்த வீரன். யாராலும் அசைக்க முடியாத சிவதனுசுவை வளைத்துச் சீதையை மணம் புரிகிறான் என்று ராமாயணப் பிரதிகள் கூறுகின்றன. சிவதனுசுவை இடது கையால் தூக்கும் வலிமை சீதையிடம் இருந்ததாக ராமாயணத்தின் மாற்று வடிவங்கள் கூறுகின்றன.
- செந்திரு அத்தகைய வலிமைகொண்டவள். தன் திறமையைப் பயன்படுத்தித் திருமலையின் குடும்பத் தொழிலை உலகம் முழுக்கக் கொண்டுசெல்கிறாள். ஆனால், திறமைக்கு அங்கு மரியாதை இல்லை. பங்குதாரர்களைக் காரணம் காட்டுகிறான் திருமலை. இவன் ராமனின் நவீன வடிவம். சீதையை ஊருக்காகத்தான் அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னான் ராமன். அதாவது, தன்னைப் புனிதர்களாகக் காட்டிக்கொள்ள ஆண்கள் சென்றடையும் இடம்தான் மரபு. ராமனின் இந்தக் குணத்தைப் பல ஆண்கள் இன்றும் அடைகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே அம்பை இக்கதையினூடாக நிறுவுகிறார்.
- நாடு தராத சுதந்திர உணர்வைக் காடு தருவதாகச் செந்திரு உணர்கிறாள். தன் இறுக்கத்தைக் குறைக்கக் காடே சிறந்த இடமென முடிவெடுக்கிறாள். வீட்டைத் துறத்தல் என்கிற முடிவைக்கூட அவளால் எளிதாக எடுத்துவிட முடியவில்லை. கோசல நாட்டைவிட வனமே பாதுகாப்பாக இருப்பதாகச் சீதை உணர்கிறாள். அதனால்தான் ராமன் அழைத்தபோது, அவனுடன் செல்ல மறுக்கிறாள்.
- பூமிக்குள் சென்றுவிட்ட உணர்வைச் சீதை அடைந்ததாக அம்பை எழுதியிருக்கிறார். sஅமானுஷ்ய நிகழ்வின் மீது கட்டப்பட்ட மாற்று மதிப்பீடு இது. தொன்மக் காலச் சீதையின் வாழ்க்கையைத்தான் நிகழ்காலத்தில் பல பெண்கள் வாழ்ந்துவருகிறார்கள். அதில் ஒருத்திதான் செந்திரு. ராமன், சீதை ஆகிய தொன்மக் கதாபாத்திரங்களின் மூலமாகத் தற்காலத்திலும் தொடரும் பாலினப் பாகுபாட்டின் நுண்ணரசியலை இப்புனைவின் வழியாகப் பேசியிருக்கிறார் அம்பை.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 03 – 2024)