TNPSC Thervupettagam

நிதிச் சேவையின் பிதாமகன்!

July 19 , 2019 2003 days 982 0
  • மக்களவையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அடங்கிய பெரிய செலவினங்களில்  ஒன்று, பொதுத் துறை வங்கிகளின் மூலதன ஆதாரத்தைப் பெருக்குவது சார்ந்ததாகும். அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.70,000 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • பாரத ஸ்டேட் வங்கியை தவிர, 18 பொதுத் துறை வங்கிகள் தற்போது செயல்படுகின்றன. நாட்டின் வங்கி வர்த்தகத்தில், இவை 70 சதவீத பங்கு வகிக்கின்றன. வங்கிகளின் மூலதனத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மத்திய அரசு முதலீடு செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. எனவே, மத்திய அரசுதான் இந்த வங்கிகளின் பிரதான உரிமையாளர்.
பொருளாதாரச் செயல்பாடுகள்
  • இந்த வங்கிகளின் பொருளாதாரச் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்போது, அதன் உரிமையாளரான மத்திய அரசுதான், தேவையான நிதி ஆதாரங்களை வழங்கி, அவற்றை இடர்ப்பாடுகளிலிருந்து மீட்க வேண்டும் என்பது நடைமுறை நியதியாகும். 2008-ஆம் ஆண்டிலிருந்து சில காலங்கள் நீடித்த சர்வதேச பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட பாதிப்புகள், பொதுத் துறை வங்கிகளையும் தாக்கியது. வங்கி கடனை மையமிட்டுச் செயல்பட்ட தொழில் நிறுவனங்கள், திட்டமிட்டபடி தங்கள் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல் திணறின. இதனால், வங்கிகள் வழங்கிய தொழில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் பெரும் முடக்கம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தொழிலதிபர்கள், வசதி இருந்தும், தாங்கள் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கான மோசடி வேலைகளில் ஈடுபட்டனர்.
  • பொருளாதார மந்த நிலை காலங்களில், கடன் வழங்குவதற்கு முன்பான ஆய்வுகளில் அதற்குரிய பிரத்யேக வழிமுறைகளையும், எச்சரிக்கைகளையும் பயன்படுத்தத் தவறியது, கடனாளிகளின் மோசடி செயல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் போன்ற காரணங்களால், வங்கிகளின் வாராக் கடன்கள், இந்தக் காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாக பெருக ஆரம்பித்தன.
வங்கிகளின் சொத்து தர மதீப்பீட்டு ஆய்வு
  • 2015-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட "வங்கிகளின் சொத்து தர மதீப்பீட்டு ஆய்வு' திட்டத்தின் கீழ், வங்கிகளில் தேங்கியிருந்த வாராக் கடன்கள், இரண்டு ஆண்டு காலத்தில் படிப்படியாக வெளிக் கொண்டுவரப்பட்டன. அந்த அதிரடி நடவடிக்கையின் தாக்கம், வங்கித் துறையில் இன்று வரை நீடித்துக்  கொண்டிருக்கிறது.
  • கடந்த சில ஆண்டுகளில் வாராக் கடன்களின் அளவு ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இது அரசு வங்கிகளின் லாபக் கணக்கை சேதப்படுத்தியது மட்டுமின்றி, மூலதனங்களையும் பெருமளவில் அரித்துவிட்ட நிலையில், அவற்றின் நிதி நிலையும், வர்த்தகப் பெருக்கமும் கேள்விக்குறியாகி வருகிறது.
  • வங்கிகளின் வர்த்தகப் பெருக்கம் தடைபட்டால், பல்வேறு தொழில் துறைகளின் வியாபார பெருக்கத்துக்குத் தேவையான கடன் வசதிகளை போதுமான அளவில் அவை வழங்க இயலாமல் போகும். இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) குறையும். இதன் நேரடித் தாக்கம் வேலைவாய்ப்புகளில் பிரதிபலிக்கும். வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு எரிமலை போன்றதாகும். விரக்தி, வெறுப்பு, அரசு மற்றும் சமூகத்தின் மீதான அவநம்பிக்கை ஆகிய காரணிகளின் அஸ்திவாரத்தில் கனலாக பொங்கவல்ல அந்த மாதிரி எரிமலைகள், வேகமாக வளர்ந்து வெடிக்கக்கூடிய அபாய நெருப்புக் குழிகளை உள்ளடக்கியதாகும்.
தடைகள்
  • மேலே குறிப்பிட்ட பல பக்க விளைவுகள் அடங்கிய வங்கிகளின் பொருளாதாரச் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக தடைகள் வேகமாக அகற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. வாராக் கடன்களால் சுருங்கிய மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொருளாதார நடவடிக்கைகள் அதில் அடங்கும். இந்த நடவடிக்கையில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பங்கு உண்டு.
  • வங்கிகளின் மூலதன ஆதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு, மத்திய அரசின் வரவு-செலவு கணக்கிலிருந்து செய்யப்படுகிறது. அது மக்களின் வரிப்பணம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு நிபுணத்துவம் தேவை இல்லை. எனவே, நேரடி அல்லது மறைமுக வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனும், நலிவுற்ற வங்கிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கிறார் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. இந்த பங்களிப்பை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் வங்கிகளின் பரிணாம வளர்ச்சி சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் புரட்டினால் புரியும். 1969-ஆம் ஆண்டு, ஜுலை 19-இந்திய வங்கிகளின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். அந்தத் தினத்தில்தான் நீண்ட காலமாக பெரிய தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செயல்பட்டுக் கொண்டிருந்த 14 வங்கிகள், சோஷலிச சித்தாந்த கொள்கை அடிப்படையில் தேசியமயமாக்கப்பட்டன. வங்கிச் சேவை என்பது பெரும் செல்வந்தர்களுக்கு மட்டும் உரித்தானது என்ற நீண்ட கால சித்தாந்தம், ஓர் அவசரச் சட்டத்தால் மாற்றப்பட்ட நாள் அது. இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் திறவுகோல், அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நாளில்தான், அந்தத் துறையில் இந்திய பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் பரிணாம வளர்ச்சிக்கான விதைகள் வித்திடப்பட்டன. இந்த நிகழ்வுக்குப் பிறகு, பரவலான கடன் வசதிகள் மூலம் சமூக நோக்கை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்பாடுகள், அனைவருக்கும் வங்கி சேவை போன்ற அரிய நோக்கங்கள் ஒவ்வொன்றாக வங்கித் துறையில் துளிர் விட்டு மலர ஆரம்பித்தன.
  • கிராமங்கள் போன்ற புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிக் கிளைகளை விரிவுபடுத்துதல், விவசாயம், சிறு தொழில் போன்ற துறைகளுக்கு எளிய வழிமுறைகள் மூலம் கடன் வசதி போன்ற நடவடிக்கைகள் வேகம் எடுக்க ஆரம்பித்தன. இந்த புரட்சிகரமான நடவடிக்கைகள், நீண்ட காலமாக வங்கி வாயிலை மிதிக்காத சாதாரண குடிமகனையும் வங்கிச் சேவை வளையத்துக்குள் ஈர்க்கும் சக்திக்கு வித்திட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

வங்கிக் கிளைகள்

  • தேசியமயமாக்கப்பட்ட 20 ஆண்டுகளில், வங்கிக் கிளைகள் சுமார் 8,000-த்திலிருந்து 50,000-த்துக்கு மேல் பரந்து விரிந்தன. 1980-ஆம் ஆண்டு மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, பூகோள ரீதியாக வங்கிக் கிளைகளின் பரவல் அதிகரித்து, இன்று வரை அவற்றின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்துக்கு மேல் கணிசமாக உயர்ந்து நிற்கின்றன. அவற்றில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட கிளைகள் கிராமப் பகுதிகளைச் சார்ந்தது.  65,000 பேருக்கு ஒரு வங்கிக் கிளை என்பது, 10,000 பேருக்கு ஒன்று என்ற வளர்ச்சியால் வங்கிச் சேவை பயனாளிகளும் பெருமளவில் அதிகரித்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி, வங்கிகளால் வழங்கப்படும் மொத்த கடன் தொகையில், 40 சதவீத அளவு சிறு, குறுந்தொழில், வீடு, கல்விக் கடன், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரத்யேகக் கடன் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதைத் தவிர விவசாயம், அது சார்ந்த சிறு தொழில்களுக்கு 18 சதவீத அளவுக்கு கடன் வழங்கப்பட வேண்டும்.
  • கிராமப்புற சேவைகளில் வங்கிப் பணியாளர்களை ஈடுபடுத்தும் பொருட்டு, அவர்களின் பதவி உயர்வுகள் கிராமப்புற பணிக் காலத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. எண்ணற்ற வங்கிப் பணியாளர்கள், கிராமப்புற வங்கி சேவையில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு வருவது மெச்சத் தகுந்த ஒன்றாகும். இந்த மாதிரி சமூக நோக்கத்துடன் கூடிய வங்கி சேவைகளை தொடர்ந்து அளித்து வரும் வங்கிகளின் பங்களிப்பால்தான், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் மேம்பட்டு, தற்போது உலக அளவில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக பரிணமிக்க முடிகிறது.
  • வங்கிகளின் பொருளாதார பலத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் விஜயா மற்றும் தேனா வங்கிகள் பரோடா வங்கியுடன் அண்மையில் இணைக்கப்பட்டன. இந்த மாதிரி இணைப்புகள் தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை தவிர, மேலும் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் வங்கித் துறைக்கு உடனடியாக தேவைப்படுகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் (சுமார் 40 சதவீதம்) இணையதள வங்கிச் சேவைகளுக்கு மாறி விட்ட நிலையில், நகர்ப்புறங்களில், ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்ட ஒரே பகுதியில் பல வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வருவதை சீர்திருத்தச் சிந்தனைக்கு உட்படுத்துவது அவசியம். நிபுணத்துவம் நிறைந்தவர்களைக் கொண்டு நிர்வாகக் குழுக்களைச் சீரமைப்பது, நீண்ட கால அடிப்படையில் வங்கி தலைவர்களின் நியமனம், இடர்ப்பாடுகள் நிறைந்த செயல்பாடுகளுக்கேற்ற ஊதியம், பணியாளர்களுக்கு தொடர் பயிற்சி ஆகிய சீர்திருத்தங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
  • நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் தொடர் பங்களிப்பு அபரிமிதமானது. வரும் காலங்களிலும் அந்த பங்களிப்பு நிச்சயம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். அதைக் கருத்தில் கொண்டு, இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர்களான பொதுத் துறை வங்கிகள் தற்போதைய சுணக்க நிலையிலிருந்து மீண்டெழுவதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம்.

நன்றி: தினமணி(19-07-2019) 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்