TNPSC Thervupettagam

நிதிப் பகிர்வு: அரசுகளுக்கு இடையிலான போட்டி அல்ல

April 15 , 2024 271 days 288 0
  • நிதிப் பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே போட்டி மனப்பான்மை இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது கவனத்துக்குரியது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகத் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் குரல் எழுப்பிவரும் நிலையில், இந்த அறிவுறுத்தல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
  • கர்நாடகத்தில், 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023 ஜூன் மாத மழைப்பொழிவு குறைவாக இருந்தது. இதனால் சம்பா சாகுபடிக் காலத்தில் பெரும்பாலான வருவாய் வட்டங்கள் வறட்சியில் பாதிக்கப்பட்டதாக அம்மாநில அரசு கூறியது. இதற்கான வறட்சி நிவாரண நிதியாக ரூ.18,171 கோடியைத் தேசியப் பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கையும் விடுத்தது.
  • ஆறு மாதங்கள் ஆகியும் எந்தப் பதிலும் வரவில்லை என்ற நிலையில், வறட்சி நிவாரண நிதி வழங்க மறுப்பதாக மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
  • இந்த வழக்கு விசாரணையின்போது நிதிப் பகிர்வு சார்ந்த முறையீட்டுடன் மத்திய அரசுக்கு எதிராகப் பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பதாக நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ளார். மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கு மத்திய அரசு உச்ச வரம்பு விதித்துள்ளதை எதிர்த்து கேரள அரசு கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
  • மாநில அரசுகள் கடன் வாங்கும் உரிமை தொடர்பாக முடிவெடுக்கும் விவகாரம், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்கான ரூ.38,000 கோடி நிவாரண நிதியை விரைவாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஏப்ரல் 3 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
  • ‘நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன் மத்திய அரசிடம் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும்’ என்று விசாரணையின்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், இத்தகைய வழக்கு தொடரப்பட்டிருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
  • அதே நேரம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் தகவல்களைப் பெற்று தாக்கல் செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளதன் பெயரில், வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடாவுன் டெல்லியில் சந்தித்து நிவாரண நிதிக்கான கோரிக்கையை முன்வைத்ததாகவும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலைத் தருவதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
  • நிதிப் பகிர்வு விவகாரத்தில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிலவிவரும் பிணக்குகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்திருப்பது, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
  • இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாமதிக்கக் கூடாது. மாநில அரசுகளும் மத்திய அரசுடனான மோதல் போக்கைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் தமக்குக் கிடைக்க வேண்டிய நிதியைப் பெற முயல வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு அழகு!

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்