TNPSC Thervupettagam

நிதி ஒதுக்கல்: வடக்கு - தெற்கு பிரச்சினை அல்ல

September 8 , 2024 80 days 96 0

நிதி ஒதுக்கல்: வடக்கு - தெற்கு பிரச்சினை அல்ல

  • ஒன்றிய அரசின் 2024 - 2025 நிதிநிலை அறிக்கையின்போது ஆந்திர பிரதேசம், பிஹார் மாநிலங்களுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கல் அறிவிக்கப்பட்டபோது பல (எதிர்க்கட்சிகள் ஆளும்) மாநிலங்கள் கவலை தெரிவித்தன. கர்நாடகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமய்யா குற்றஞ்சாட்டினார்; தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாட்டை ஆளும் திமுக அறிவித்தது; மிகவும் பாரபட்சமானது இந்த நடவடிக்கை என்று தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி வருத்தம் தெரிவித்தார்.
  • நிதி ஒதுக்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு இருந்துவரும் நெடுங்கால அச்சங்களே இப்படிப் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டன. இந்தப் பிரச்சினைக்கு நீடித்ததாகவும், சுமுகமாகவுமான ஒரு தீர்வை இதுவரை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்யப்படவில்லை.
  • கூட்டாட்சி தொடர்பான விவாதங்கள் அனைத்தும் ‘கிடைமட்ட நிதி ஒதுக்கீடு’ பற்றியே சுற்றிச் சுழல்கின்றன. வட மாநிலங்களின் தேவைகளுக்கு தென் மாநிலங்களின் வருவாய்தான் மானியமாக, பொருத்தமற்ற வகையில் அதிகமாக எடுத்து வழங்கப்படுகிறது என்று தென் மாநிலங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. பிரச்சினை அதுவல்ல, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வருவாய்ப் பகிர்வு ‘செங்குத்தான முறையில்’ இருக்கிறது.

பிரச்சினை இதுதான்

  • செங்குத்தான முறையில் நிதிப் பகிர்வு செய்யப்படுவதால் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது, அது மட்டுமல்ல ஆண்டுதோறும் அது அதிகரித்துக்கொண்டேவருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டமானது வருவாயைப் பெருக்கக்கூடிய வளமான துறைகளை ஒன்றிய அரசின் பொறுப்பிலும், செலவுகள் அதிகம் பிடிக்கக்கூடிய துறைகளை மாநிலங்கள் பொறுப்பிலும் ஒதுக்கியிருக்கிறது.
  • தனிநபர் வருமான வரி, நிறுவனங்கள் மீதான (கார்ப்பரேட்) வரி ஆகியவற்றை விதிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத் தரப்பட்டுள்ளது. மாநிலங்களுக்குச் செலவுகள் அதிகம் செய்ய வேண்டிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், காவல் துறை (சட்டம் – ஒழுங்கு  பராமரிப்பு), வனவளம், குடிநீர் வழங்கல் போன்றவை மாநிலங்களுடைய அதிகாரப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • சில மாநிலங்களில், மாநிலங்கள் செய்ய வேண்டிய செலவுகள் அவற்றின் வருவாய்க்குப் பொருந்தாத வகையில் அதிகமாக இருக்கின்றன. உதாரணத்துக்குச் சொல்வதென்றால் மருத்துவம் உள்ளிட்ட சுகாதார வசதிகளுக்கான செலவில் 77% (2023 - 2024) மாநிலங்கள் ஏற்க வேண்டியிருக்கிறது, கல்வித் துறையில் 75% (2020 - 2021) மாநிலங்களுடைய பொறுப்பாகிறது.

15வது நிதி ஆணையம்

  • ஒன்றிய அரசு, மாநில அரசுகள் அனைத்துக்குமான நிதியில் 62.7% அளவை ஒன்றிய அரசு திரட்டுகிறது, ஆனால் மொத்த செலவில் 62.4% மாநிலங்களுடைய பொறுப்பாகிறது. வருவாய் வசூலில் ஒன்றிய அரசின் பங்களிப்பு கிட்டத்தட்ட அதே அளவில் நீடிக்கும்போது, கடந்த பத்தாண்டுகளில் மாநிலங்களின் செலவுத் தொகை 10% அதிகரித்துக்கொண்டேவந்துள்ளது. 14வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 32%லிருந்து 42% ஆக அதிகரித்தும், மாநிலங்களுக்கு அதே விகிதத்தில் கூடுதல் நிதி கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு கூடுதல் வரி - மிகை தீர்வை (செஸ் - சர்சார்ஜ்) ஆகியவற்றை உயர்த்திக்கொண்டேபோவதுதான்.
  • கூடுதல் வரி, மிகைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மாநிலங்களுடன், ஒன்றிய அரசு பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை என்று அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. இந்த இனங்கள் மூலமான வருமானத்தை, எந்த நோக்கத்துக்காக ஒன்றிய அரசு விதிக்கிறதோ அதற்கு மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. எனவே, இவற்றை மாநிலங்களுடன் ஒன்றியம் பகிர்ந்துகொள்வதில்லை.
  • அரசு இப்படிக் கூடுதல் வரிகள் மூலம் கணிசமான தொகைகளைப் பெறுவதால் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படும் தொகையில் பெருத்த இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மாநிலங்களுக்கு வருவாய் குறைவு, செலவுப் பொறுப்புகள் அதிகம் என்பதால் பொதுச் சேவைகளின் தரம் வெகுவாகக் குறைந்துவிட்டதுடன் மாநிலங்களுக்கு இடையே தேவையில்லாமல் பூசல்களும் ஏற்பட்டுவருகின்றன.
  • கிடைமட்டமாக பிரிக்கப்படும் வருவாய் பங்கு தொடர்பாக சர்ச்சையில் காட்டும் கவனத்தால், செங்குத்தான பகிர்வால் ஏற்படும் பிரச்சினை நம்முடைய கவனத்தைப் பெறாமலேயே சிதறிவிடுகிறது. இந்தப் பிரச்சினைக்கு சில தீர்வைக் கூறுகிறோம். மாநிலங்களுக்குக் கிடைக்கும் நிதிப் பகிர்வு அடிப்படையில், இறங்கு வரிசையில்கூட இந்த யோசனைகளை அமல்செய்வதற்கு அரசு பரிசீலிக்கலாம்.

தீர்வு இதுவே

  • மொத்த வருவாயில் 50%ஐ மாநிலங்களுக்குப் பிரித்துத் தந்துவிடலாம். இது ஒன்றும் புரட்சிகரமான யோசனையும் அல்ல, இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது வலியுறுத்தியதுதான். 2023 - 2024 நிதியாண்டு ஒதுக்கீட்டில் இந்த யோசனை அமல்படுத்தப்பட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக ரூ.2.24 லட்சம் கோடி நிதி கிடைத்திருக்கும். மாநிலங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் நிதி வருவாய் பங்களிப்பில் மேலும் 5.42% அதிகரித்திருக்கும்.
  • இவ்வளவு பெரிய ஒதுக்கீட்டை உடனடியாகச் செய்வது ஒன்றிய அரசுக்கும் பெரிய சவாலாக இருக்கும். அதற்குப் பதிலாக இந்த நிதியாண்டிலிருந்து மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகையை 1% அதிகரித்துக்கொண்டேவரலாம்.
  • இந்த யோசனையை ஏற்பது அரசியல்ரீதியாக பெரிய எதிர்ப்புகளுக்கு ஆளாக்கும் என்று கருதினால், செஸ் – சர்சார்ஜ் போன்ற கூடுதல் வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்து மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் பகிர்ந்து அளிக்கலாம். நிதியாண்டு 2023 – 2024இல் மட்டம் செஸ் – சர்சார்ஜ் மூலம் ஒன்றிய அரசுக்குக் கிடைத்த கூடுதல் வருவாய் ரூ.5.01 லட்சம் கோடியாகும் இதை அப்படியே பகிரக்கூடிய வருவாயுடன் சேர்த்தால் மாநிலங்களுக்குக் கூடுதலாக, மொத்தமாக ரூ.2.06 லட்சம் கோடி கிடைத்திருக்கும். அது சதவீத கணக்கில் 4.97%.

ஒன்றிய திட்டங்கள்

  • மேலே சொன்ன யோசனையையும் ஏற்க முடியாது என்றால், ஒன்றிய அரசின் திட்டங்களின் (சிஎஸ்எஸ்) எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் நிதியளித்தாலும் அவற்றை நிறைவேற்றும் பொறுப்பு முழுக்க முழுக்க மாநில அரசுகளுடையது. ஒன்றிய அரசின் திட்டங்கள் மாநிலங்களின் வருமான ஆதாரத்தைப் பெருக்குபவைதான் என்றாலும் அவற்றுக்கான நிதியை ஒதுக்குவதிலும் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் மாநிலங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
  • எடுத்துக்காட்டுக்கு, 2023 – 2024இல் ஒன்றிய அரசின் திட்டங்களை அமல்செய்வதற்காக மாநிலங்களுக்கு உண்மையில் வழங்கிய தொகை ரூ.1.12 லட்சம் கோடிதான், காரணம் ஒன்றிய அரசு முதலில் ரூ.4.76 லட்சம் கோடி ஒதுக்கியும், பல மாநிலங்களால் அதற்கு இணையான மானியத் தொகையை அளித்து திட்டங்களைச் செயல்படுத்த நிதி வசதி இல்லை. ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களின் அரசு நிர்வாகத்தால் பெரும் தொகையைப் பெற்று, அதற்குப் பொருந்தும் வகையிலான மானியத் தொகையைத் தங்கள் பங்கிலிருந்து செலவிட்டு திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை.
  • அந்தந்த மாநிலங்களில் வசூலாகும் ஜிஎஸ்டிபியும் (மொத்த உற்பத்தி மதிப்பு) குறைவாக இருப்பது அடுத்த முக்கிய காரணம். இந்த இரண்டு தடைகள் தவிர, மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நிர்வாக அதிகாரத்தில் ஒன்றிய அரசு தேவையின்றி அடிக்கடி தலையிடுவதும்கூட பல திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தடைகளாகவே இருக்கின்றன.
  • எனவே, ஒன்றிய அரசு அதன் திட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது ஒன்றிய அரசின் செலவுச் சுமையையும் கணிசமாகக் குறைத்துவிடும். இதனால் கூடுதல் வரிகளை விதிக்க வேண்டிய தேவையும் ஏற்படாது. கல்வி, சுகாதாரம், சமூக உதவி ஆகிய திட்டங்களுடன் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறுகிவிட்டால், மாநிலங்களுக்குச் செலவுசெய்ய கூடுதலாக ரூ.1.69 லட்சம் கோடி கிடைக்கும், அதாவது ஒட்டுமொத்தமாக மேலும் 4.09%, அதை அவற்றால் அவசியத் தேவைகளுக்கு தாராளமாக செலவிட முடியும்.

வரி அல்லாத வருவாய்

  • ஒன்றிய அரசுக்கு மேலே சொன்ன யோசனைகள் ஒன்றுகூட பிடிக்கவில்லை என்றால், வரி அல்லாத இதர வருவாய்களையும் பகிரக்கூடிய நிதித் தொகுப்பில் சேர்க்கலாம். ஒன்றிய அரசு தரும் கடன்களுக்குக் கிடைக்கும் வட்டி, அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் லாப ஈவு (டிவிடெண்ட்), லாபம், சேவைக் கட்டணங்கள் ஆகியவற்றை பகிரக்கூடிய நிதிப் பிரிவில் சேர்த்துவிடலாம். 2023 - 2024 நிதியாண்டில் வரி அல்லாத வருவாய் இனத்தில் சேர்ந்த தொகை மட்டும் ரூ.3.01 லட்சம் கோடி. இவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டால் கூடுதலாக ரூ.1.24 லட்சம் கோடி மாநிலங்களுக்குக் கிடைக்கும், அது சதவீத அளவில் 2.99%.
  • இந்த மாற்று வழிகள் அனைத்துமே பரஸ்பரமாக ஒன்றிய – மாநில அரசுகள் பரிசீலிக்கக்கூடியவை. இந்த அணுகுமுறைகள் அனைத்தையுமே இல்லாவிட்டாலும், ஒரு சிலவற்றையாவது இணைத்து அமல்படுத்த முயற்சிக்கலாம். இதில் அனைவரும் முதலில் ஒரு அம்சத்தை ஒப்புக்கொள்ள வேண்டும், அது நிதிப் பகிர்வு என்பது ‘வட மாநிலங்கள் எதிர் தென் மாநிலங்கள் பிரச்சினை’ அல்ல, செலவுசெய்ய வேண்டிய பொறுப்புகள் மாநிலங்களுக்கு அதிகமாகவும், வருவாய் ஈட்டும் வழிகள் குறைவாகவும் இருப்பதே பிரச்சினை.
  • நன்றி: அருஞ்சொல் (08 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்