- 2018, 2021 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 160 பேர் தனிமையில் வைக்கப்பட்டுளள்னர்.
- இந்த நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன? பரவாமல் தடுப்பது எப்படி? சிகிச்சை முறைகள் என்னென்ன?
நிபா வைரஸ் - வரலாறு
- 1998-99-ம் ஆண்டுகளில், மலேசியாவில் மக்கள் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தபோது, அதற்குக் காரணம் பன்றிகள் என்பதைக் கண்டறிந்து, சுமார் 10 லட்சம் பன்றிகளை அழித்தார்கள். ‘கும்பங் சங்கை நிபா’ (KUMPUNG SUNGAI NIPAH) என்ற இடத்தில் உள்ள பன்றி வளர்ப்பவர்களை முதலில் இது பாதித்ததால், ‘நிபா வைரஸ்’ என்றும் ‘நிபா காய்ச்சல்’ என்றும் பெயர் வந்தது. அப்போது, நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 257 பேரில், 105 பேர் இறந்து போனார்கள். அதன்பிறகு, சிங்கப்பூருக்கும் இந்த நோய் பரவி, 11 பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் இறந்துபோனார்.
- முதலில் இதை வேறொரு வைரஸால் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் (Japanese encephalitis) எனத் தவறாகக் கருதிய அரசாங்கம், பன்றிகளைக் கொன்றதுடன், இதற்குக் காரணமாக கியூலெக்ஸ் (Culex) வகை கொசுக்களையும் கட்டுப்படுத்தியது. ஆனால், இவ்வகை மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பூசி (JE-V) போட்டுக்கொண்டவர்களுக்கும் இந்த மூளைக்காய்ச்சல் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்த போதுதான், இதை நிபா என்ற வைரஸ் ஏற்படுத்தியதும், இதை பன்றிகள் பரப்பியது, அவை நோயினால் நலிவடைந்ததும் தெரிய வந்தது.
- அதுசரி, பன்றிகளுக்கு இந்த வைரஸ் எப்படிப் பரவியது. வௌவால்களிடம் இருந்துதான்! இதுவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பழம் தின்னும் வௌவால்கள் (Pteropus vampyrus, Pteropus hypomelanus) உடலில் இந்த வைரஸ்கள் (Primary reservoir for Nipah virus) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
- இந்த வைரஸ் இருபது வருடங்களுக்கு முன்று கண்டறியப்பட்டாலும், இவை 1947-ம் ஆண்டுகளிலேயே தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்தத் தொற்று ஏற்பட்டு 24 பேர் பாதிக்கப்பட்டு அதில் 17 பேர் இறந்துள்ளனர்.
- 2001-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு, சிலிகுரி மற்றும் நொய்டா பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளானது வங்க தேசம்தான். 2018-ல் கேரள மாநிலத்தின் வட பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
- ஆக, இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய (Zoonotic disease) நோயாகும்.
எப்படியெல்லாம் நிபா ஏற்படலாம்?
- இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் என எந்த வகையிலும் நோய்த்தொற்று ஏற்படலாம். அல்லது, அவை கடித்த/சுவைத்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.
- வௌவால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை, பன்றி என பிற வீட்டு வளர்ப்பு - மனித தொடர்புடைய விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவலாம்.
- காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவலாம். நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ் நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம்.
- இப்படி பல்வேறு வழிகளிலும் நேரடியாகவோ அல்லது பிற விலங்குகள் மூலமாகவோ, மனிதர்கள் மூலமாகவோ பரவ பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.
நிபா வைரஸ் குறித்து
- இந்த வைரஸ் ஹெனிபா வைரஸ் (Henipa virus) என்ற பேரினத்தைச் சேர்ந்தது. இது பாராமிக்ஸோ விரிடியே (Paramyxo viridea) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை நிவ் (NIV) என்றும் குறிப்பிடுகிறார்கள். இது ஒழுங்கற்ற தன்மையைக் கொண்டது. சுமார், 40 முதல் 60 நானோமீட்டர் அளவு உள்ளது. இது ஒரு ஆர்என்ஏ வைரஸாகும். இதைச் சுற்றி கொழுப்பால் ஆன ஒரு சவ்வு இருக்கும். அதன் உட்பகுதியில் புரதக்கூறுகளால் ஆன ஒரு ஓடும் அமைந்திருக்கும். உட்பகுதியில் வளைந்த வடிவிலான ஒரு ஆர்என்ஏ இருக்கும். அந்த ஆர்என்ஏவுடன் நியூக்ளியோகாஸ்பிட் என்ற ‘என்’ புரதமும், எல் மற்றும் பி புரதமும் இணைந்திருக்கும். இந்தப் புரதங்கள்தான், ஆர்என்ஏ பெருகுவதற்கான ஆர்என்ஏ பாலிமரேஸ் நொதியின் பணிகளைச் செய்கின்றன. கொழுப்புச்சவ்வில், F என்ற கம்பி போன்ற நீட்சிகளும், G போன்ற அமைப்பும் இருக்கும். இவை புரதப் பொருள்களால் ஆனவை. இவை, மனித உடலில் வைரஸ் கிருமி ஒட்டிக்கொள்ள உதவுகின்றன. இந்த ஆர்என்ஏவில் 6 ஜீன்கள் இருக்கும்.
தொற்ற ஏற்பட்ட எவ்வளவு நாளில் நோய் அறிகுறிகள் தென்படும்?
- இந்த வைரஸ், மனித உடலுக்குள் நுழைந்த 4 அல்லது 14 நாட்களுக்குள் பெருகி நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும். அறிகுறிகள் தொடர்ந்து பல நாட்களுக்கு இருக்கலாம். இவை அடுத்த இரண்டு வாரங்கள் வரை நீண்டு செல்லவும் வாய்ப்பு உண்டு.
நோய் அறிகுறிகள் என்னென்ன?
- பிற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் அயர்ச்சி ஏற்படும். நிலை தடுமாறும். மனதில் குழப்பம் நிலவும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். பார்வைக் கோளாறும் ஏற்படலாம். இறுதியில், மயக்க நிலையை அடைந்து மரணம் ஏற்படும். இந்தத் துயர நிலை, நரம்பு பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே சம்பவித்துவிடும்.
பரிசோதனைகள்
- இந்த வைஸ் தொற்றைக் கண்டறிய, எலிஸா பரிசோதனைகள் உள்ளன. இதன்மூலம், இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கொண்டு, இந்த நோயைக் கண்டுபிடிக்கலாம். மேலும், பிசிஆர் பரிசோதனை மூலமும் இதனை உறுதி செய்யலாம். இப் பரிசோதனையை புணேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் மட்டுமே செய்ய இயலும்.
- இந்தப் பரிசோதனைக்கு ரத்தம், சிறுநீர், முதுகிலிருந்து பெறப்படும் தண்டுவட நீர், சளி, உமிழ்நீர், தொண்டை மற்றும் நாசிப்பகுதி நீர் ஆகியவை பயன்படுத்தப்படும். சிலருக்கு, பொதுவான பரிசோதனைகளுடன் சிறுநீர்ப் பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, சுவாசப் பரிசோதனை, நரம்பு மண்டலப் பரிசோதனைகளும் தேவைப்படலாம்.
மருத்துவச் சிகிச்சை - மருந்துகள் இல்லை
- நிபா வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் பிரத்தியேகமான வைரஸுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றை அழிக்கவோ, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இதற்கு தற்சமயம், ரிபாவிரின் (Ribavirin) என்ற மருந்து கொடுக்கப் படுகிறது.
தடுப்பூசிகள் இல்லை
- இந்த நிபா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுத்துக்கொள்ளலாமா என்றால், அதற்கான தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, வரும்முன் காப்பதுதான் சிறந்தது என்று மக்கள்தான் தொற்று ஏற்படாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
- ஆனாலும், வாய்ப்பு உள்ளது; ஆறுதலும் உள்ளது
- இந்த வைரஸை ஒத்த ஹென்ரா (Hendra virus) வைரஸுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே (HENV-) நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதங்களையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி குதிரைகளிடம் சோதிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எப்படித்தான் சிகிச்சை செய்வது?
- இந்த வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளும், தடுப்பூசிகளும் இல்லாதநிலையில், இந்தக் காய்ச்சல் கண்டவரை அல்லது நிபா வந்தவரென சந்தேகப்படுபவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் இதற்கென உள்ள பிரத்தியேக வார்டுகளில் உள்நோயாளியாகச் சேர்த்து, அவரை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அங்கு அவருக்கு இரண்டுவிதமான சிகிச்சை அளிக்கப்படும்.
- தொந்தரவுகளை கட்டுப்படுத்தும் சிகிச்சை (symptomatic treatment)
- தொற்றால், சுவாசம் - மூளை - நரம்பு மண்டலப் பாதிப்புகளில் இருந்து (supportive care treatment) விடுபட, செயற்கை சுவாசம், அவரது இதயத் துடிப்பு (நாடித் துடிப்பு), ரத்த அழுத்தம் ஆகியவை சீராக இருக்கவும், தேவையான ஆக்ஸிஜனை மூளையும், நரம்பு மண்டலமும் பெறவும் சிகிச்சை அளிக்கப்படும்.
- தேவையான சத்துகள், குளுக்கோஸ் ஆகியவையும் சிரை மூலமாக அவருக்குச் செலுத்தப்படும். தொடர்ந்து, சுவாசம், இதயம், சிறுநீரகம், கல்லீரல், மூளை - நரம்பு மண்டல தேவைகளுக்கு ஏற்பட தொடர் கண்காணிப்பு சிகிச்சை தரப்படும்.
வௌவால்கள் பாதிக்கப்படுமா?
- இந்த நிபா வைரஸை உடலில் கொண்டிருக்கும் வௌவால்கள் நோய்வாய்ப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், பன்றிகள் மற்றும் பிற விலங்குகள் இந்த நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுவதாகத் தெரிகிறது. பன்றிகளுக்குக் கடுமையான இருமல், மூச்சுத்திணறல், தசைப்பிடிப்பு, தடைத்துடிப்பு, நடக்கத் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் இருக்கும். பன்றி வளர்ப்புப் பண்ணையில் உள்ளவர்கள், பன்றிகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அது நிபாவாக இருக்குமோ என சந்தேகிக்க வேண்டும். இதன்மூலம், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து பிற பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
நோய் பரவாமல் தடுப்பது எப்படி?
- முதலில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளிப் போடுங்கள்.
- சிலர் வௌவால்களையே சாப்பிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். வௌவால்களிடம் இந்த நிபா வைரஸ் மட்டுமின்றி, கொஞ்ச காலத்துக்கு முன்பு நம்மைப் பயமுறுத்திய எபோலா, சார்ஸ் தொடங்கி ரேபீஸ் வெறிநாய்க்கடி வைரஸ் வரை சுமார் 60 வகை வைரஸ் வகைகளைச் சுமந்து திரிகிறது.
- எனவே, வௌவால் கடித்தாலும் ஆபத்துதான். அதன் உமிழ் நீர், பிற உடல் நீரினாலும் மனிதர்களுக்குப் பல்வேறு வைரஸ் தொற்று ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை.
- விலங்கு நல மருத்துவர்களும், வனவிலங்குகளைக் கையாள்பவர்கள், ஆராய்ச்சியாகள், வனப் பாதுகாப்புத் துறையினர், சுற்றுலா செல்பவர்கள் என அனைவருமே சற்று முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
- அடுத்து, நோய்த்தொற்று ஏற்பட்டவர்களோடு இருப்பவர்கள், முகக் கவசம், கையுறை, உடல் பாதுகாப்பு உடைகளை அணிந்தே அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தொற்று ஏற்பட்டவரின் பழைய உடைகளை எரித்துவிட வேண்டும். இவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மருந்தோ, தடுப்பூசியோ இல்லாத காரணத்தால், சுய பாதுகாப்பு முறைதான் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.
- பொதுமக்கள், வீட்டு விலங்குகள் மற்றும் பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளிடம் மாற்றம் தெரிந்தால், உடனடியாக விலங்கு நல மருத்துவரிடம் காண்பித்து நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். தொற்று ஏற்பட்ட விலங்குகள் பன்றியாகவோ, குதிரையாகவோ, எதுவாக இருந்தாலும், அவற்றை அழிப்பதன் மூலம் பிற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.
- நோயுற்ற இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்ணக் கூடாது. சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவ்வளவுதான்.
- தரையில் விழுந்துகிடக்கும் பல் பட்ட, கடிக்கப்பட்ட, குதறிய, ஓட்டை விழுந்த, கெட்டுப்போன பழங்களை எடுத்து, அணில் கடித்தது, இனிப்பாக இருக்கும் என்று நினைத்து கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
- எந்தக் காய்ச்சல் என்றாலும் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். காய்ச்சல் கண்டவரை, அரசு மருத்துவமனையில் வைத்து அதற்கான வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
- வீடு அருகே எலியோ பூனையோ எந்த விலங்கோ இறந்தாலும், உடனடியான வனத் துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- கள், பதநீர் என திறந்த நிலையில் தயாரிக்கப்படும் பானங்கள், எந்தப் பழத்தில் இருந்து தயாரிக்கப் பட்டது என்று தெரியாமல் தயாரிக்கப்படும் பழச் சாறுகளையும் தவிர்க்க வேண்டும்.
- மருத்துவத் துறையில் இருப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவராகட்டும், செவிலியராகட்டும், ஆய்வுக்கூட பரிசோதகராகட்டும், மருத்துவமனை ஊழியராகட்டும், அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- இதுபோன்ற தொற்றுநோய்க் கிருமி பாதிப்பு திடீரென ஏற்படும்போது, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆலோசனை கேட்கப்பட்டு, தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் மேற்பார்வையில் ஆய்வு நடத்தி, குறிப்பிட்ட மாநில சுகாதார அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து சிகிச்சைகள் மட்டுமல்லாது, பாதுகாப்பு - தற்காப்பு - தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
நன்றி: தினமணி (14 – 09 – 2023)