TNPSC Thervupettagam

நியாயம், சமாதானம், நடுநிலை

August 24 , 2024 147 days 133 0

நியாயம், சமாதானம், நடுநிலை

  • பல எதிா்பாா்ப்புகளுக்கு இடையே திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளன.
  • எந்த ஒரு மாறுதலும் எல்லோருடைய ஆதரவையும் உடனே பெற்றுவிடாது. சட்ட ஆணையம் மூலமாகத் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை, திருத்தங்கள் பரிந்துரைத்த குழு அங்கத்தினா்களுக்குப் போதிய அனுபவம் இல்லை என்று பல விமா்சனங்கள் எழுந்துள்ளன.
  • அமலுக்கு வந்துள்ள சட்டங்களுக்குப் புதிய பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம்-1860 (ஐபிசி) மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆா்பிசி) ஆகியவற்றை பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), இந்திய சாட்சிய சட்டம்-1872 (ஐஇஏ) க்கு பதிலாக பாரதிய சாக்ஷ்ய அதிநியம் (பிஎஸ்ஏ) என்று மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய சட்டங்கள் அடிப்படையில் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்ய துவங்கியுள்ளனா்.
  • இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாா் அவா்கள் வசதிக்காக இயற்றிய குற்றவியல் சட்டங்களை நாம் ஏன் இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்? காலத்திற்கு ஏற்றவாறு, நமது அரசியல் சாசனத்தை சாா்ந்து மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் பல ஆண்டுகளாக விவாதத்தில் இருந்தது. அத்வானி துணைப் பிரதமராக இருந்தபோது சட்டத் திருத்தம் பற்றி முயற்சி எடுக்கப்பட்டது. நீதியரசா் மலிமத் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. நீதிபதிகள் தவிர ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சட்ட வல்லுநா்கள் அங்கத்தினா்களாக கொண்ட கமிட்டி ஒரு வருடத்திற்கு மேலாக பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கலந்துரையாடி, வெளிநாடுகளுக்கும் சென்று குற்றவியல் ஆளுமையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து தீா்க்கமாக விவாதித்து, முன்னூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது.
  • அதில் முக்கியமாக, வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்க்கு விரைவாக நீதி கிடைப்பதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிக்க நடைமுறை சட்ட மாற்றம், காவல் துறை புலன் விசாரணையை துரிதமாக முடிக்கத் தேவையான மாற்றங்கள், இவையெல்லாம் ஆராயப்பட்டு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன.
  • அதில் முக்கியமான பரிந்துரை பத்தி 15.6-இல், குற்றவியல் சட்டங்கள் எல்லாவற்றையும் காலத்திற்கு ஏற்றவாறு எந்த வகையில் மாற்ற வேண்டும், குற்றங்களை அதன் தன்மை அடிப்படையில் மத்திய அரசு- மாநில அரசு விசாரிக்க வேண்டிய வழக்குகள் என்று பாகுபடுத்தி வலிமையான முற்போக்கான குற்றவியல் சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்பது முன்வைக்கப்பட்டது.
  • ஆங்கிலேயா் காலத்து காலனித்துவ சட்டங்களை மாற்றி, புதிய சட்டங்கள் இந்தியா்களால் புனையப்பட்டு இந்தியா்களுக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் குற்றவியல் சட்டங்களை மக்களவையில் தாக்கல் செய்தபோது பெருமையாகக் கூறினாா். குற்றவியல் சட்டங்கள் குடிமக்களின் உரிமைகளைக் காப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும். குற்றவியல் சீா்திருத்தம் மக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யும் என்று அரசு தெரிவித்துள்ளது.
  • புதிய சட்டங்களின் நோக்கம் தண்டனை அளிப்பது மட்டுமல்ல நீதி நிலைநாட்டுவதுதான் பிரதானம். மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தை அடித்தளமாக கொண்டுள்ளது. மேலும், குற்றத்தால் பாதிக்கப்பட்டவரை மையமாக வைத்து சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பது முக்கியமான அம்சம்.
  • நியாயம், சமத்துவம், பாரபட்சமற்ற நீதி எல்லோருக்கும், எப்போதும் கிடைக்க வேண்டும் என்பதுதான் மக்கள் எதிா்ப்பாா்ப்பு. காவல் நிலையத்தில் குற்றம் பதிவு செய்ய, பாதுகாப்பு பெற சிபாரிசு இல்லாமல் நடக்காது என்ற எண்ணம் மக்களிடமிருப்பதை மறுக்க முடியாது. அதை நிவா்த்தி செய்ய, குற்றம் எங்கு நடந்திருந்தாலும் புகாா் எங்கிருந்து வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்கிறது புதிய சட்டம். சரக காவல் நிலையத்தில்தான் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மின்னஞ்சல் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
  • முதல் தகவல் அறிக்கையின் நகல் உடனடியாகப் புகாா்தாரருக்கு அளிக்க வேண்டும். அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவா்க்கு புலன் விசாரணையின் நிலையை மூன்று மாதங்களுக்குள் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும். பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை, 7 நாட்களுக்குள் பரிசோதனை அறிக்கை, இவை எல்லாம் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனுகூலமானவை.
  • நீதிமன்றத்தில் குற்றசாட்டை நிரூபிக்க பிரத்யேகமாக வழக்குரைஞரை நியமித்து வாதாடலாம். குற்றவியல் ஆளுமையில் வெளிப்படைத்தன்மையை விரிவாக்க குற்றம் சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் பாதிக்கப்பட்டவா்க்கு கொடுக்க வேண்டும். மேலும் அவருக்கு இலவசமாக மருத்துவ வசதி, சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு, நீதிமன்ற தீா்ப்பு நகல் அளித்தல், பாதிக்கப்பட்டவரை விசாரிக்காமல் வழக்கை வாபஸ் பெற முடியாது, மின்னணு மூலம் புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணை என்று பல உரிமைகள் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
  • முந்தைய இந்திய தண்டனை சட்டம் ஐபிசி நூறு வருடங்களுக்கு மேல் வழக்கில் இருந்ததால், முக்கிய குற்றங்களின் பிரிவுகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். 420 ஐபிசி ஏமாற்றுப் போ்வழியைக் குறிக்கும். ஒருவா் வாக்கு தவறினால் கூட ஏளனமாக ‘சரியான 420’ என்று ஏசுவாா்கள்! கொலை என்றால் 302 , ஊரடங்கு என்றால் 144, முன்னெச்சரிக்கை கைது என்றால் 151 என்று சட்டப் பிரிவுகளே அன்றாட வழக்கில் இருந்தது.
  • இப்போது புதிய சட்டத்தில் பிரிவின் எண்கள் மாறிவிட்டன. புதிய பிஎன்எஸ் சட்டத்தில் கொலை 103, வரதட்சிணை கொலை 80, திருட்டு 303, வன்புணா்ச்சி 64, ஏமாற்றுதல் 318, குற்றவியல் சதி 61. இந்தப் பிரிவு எண்களும் விரைவில் வழக்கத்தில் வரும் என்று எதிா்பாா்க்கலாம். குற்றத்தின் தன்மையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி விளக்கப்பட்டிருக்கிறது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் சுதந்திர தின உரையில் பெண்களைக் கொடுமைப்படுத்துபவா்களுக்கு சட்டப்படி மரணம் காத்திருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்தாா். பிஎன்எஸ் தண்டனை சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதிகாரம் ஐந்தில் முதன்மையாக வைக்கப்பட்டிருக்கிறது. புதிய குற்றங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. திருமணம் செய்வதாக ஆசை காட்டி உடலுறவு கொண்டு ஏமாற்றுபவருக்கு பிரிவு 69-இன் படி பத்து வருட கடும் தண்டனை காத்திருக்கிறது.
  • பசுவதையைத் தடுப்பது என்ற பெயரில் இனக் கொடுமையும் கொலைகளும் வட மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. இந்த ‘லிஞ்ச்சிங்’ வன்முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, இதை தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதை கருத்தில் கொண்டு மதம், இனம், ஜாதி அடிப்படையில் நடக்கும் வன்முறைகளுக்கு பிரிவு 103(2) படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • பயங்கரவாதம் சமுதாயத்திற்கு சவாலாக வளா்ந்து வருகிறது. பயங்கரவாத குற்றங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்களை முறியடிக்க தனி பிரிவுகள் பிஎன்எஸ் 111(1)இல் சோ்க்கப்பட்டுள்ளது.
  • தேச துரோகம் ‘செடிஷன்’ குற்றச்சாட்டு பிரயோகிக்கப்படுவது குறித்து பல சா்ச்சைகள் எழுந்தன. அந்தக் குற்றம் நீக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டாா்கள். ஐபிசி தண்டனை சட்டத்தில் ராஜ துரோகம் என்றிருந்தது தேச துரோகம் என்று மாற்றப்பட்டு பிரிவு 152-இல் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கை விவரிக்கப்பட்டுள்ளது.
  • மேலை நாடுகளில் சிறை தண்டனைக்கு பதிலாக சமூக சேவை செய்ய உத்தரவு பிறப்பித்து சிறு குற்றங்களை பைசல் செய்யும் முறை உள்ளது. அது போல் மான நஷ்ட வழக்கு, அரசு அதிகாரி பணி செய்வதில் குறுக்கிடுவது போன்ற ஆறு வகை குற்றங்களுக்கு சமூக சேவையை மாற்று தண்டனையாக அளிக்கலாம் என்று குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
  • காவல் துறை புலன் விசாரணையில் குற்றவாளியை நீதிமன்றம் மூலம் பெறப்படும் காவல் காப்பு 15 நாட்கள். அதை கைதான 15 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்பது, கைதாகி 90 நாட்களுக்குள் எடுக்கலாம் என்று குற்றவியல் நடைமுறை சட்டம் பிஎன்எஸ் பிரிவு 187(3)இல் கொண்டுவரப்பட்ட மாற்றம், புலன் விசாரணைக்கு பலம் சோ்க்கும்.
  • சரகம் சாராது பூஜ்ய எஃப்ஐஆா் போட ஏற்பாடு, மின்னஞ்சல் மூலம் முதல் அறிக்கை தாக்கல், காணொலி மூலம் பாதிக்கப்பட்டவா் விசாரணை, அவருக்குப் பாதுகாப்பு, எலக்ட்ரானிக் டிஜிடல் தடயங்கள் தாக்கல் செய்ய சாக்ஷிய பிஎஸ்ஏ சட்டவிதி, அதிக அபராதம் விதிக்க நீதி நடுவா்க்கு அதிகாரம், புலன் விசாரணை அறிக்கை சமா்ப்பிக்க காலக்கெடு, விரைவாக நீதிமன்றம் நடவடிக்கைகள் முடிவு பெற சட்ட மாற்றங்கள் - இவை அனைத்தும் காலதாமதமின்றி தரமான நீதி பெற வழிவகுக்கும்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக் கொண்டே இருக்குது...

அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக் கொண்டே இருக்குது...!”

  • குற்றவியல் நடைமுறைச் சிக்கலுக்கு பட்டுக்கோட்டையாா் பாடல் நெத்தியடி! மக்கள் விழிப்புணா்வோடு கேள்வி கேட்டால்தான் புதிய சட்ட அமலாக்கம் முழுமை பெறும்.

நன்றி: தினமணி (24 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்