TNPSC Thervupettagam

நிர்வாகம் யாருக்கானது?

January 7 , 2025 4 days 28 0

நிர்வாகம் யாருக்கானது?

  • கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, முன்பு காலனி ஆதிக்கம் செலுத்தப்பட்ட நாடுகளில் பேசுபொருளானது. ஒரு நாட்டில் அமைக்கப்படும் அரசுப் பொது நிறுவனங்களும் அதன் நிர்வாகக் கட்டமைப்புகளும் எவ்வாறு அந்நாட்டின் வளர்ச்சிக்கு அல்லது வீழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன என்பதை விளக்கும் ஆய்வுகளுக்காக டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ.ராபின்சன் ஆகியோருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
  • குறிப்பாக, காலனி ஆதிக்கக் காலத்தில் ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்த நாடுகளில் எவ்வாறான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள் என்பதை இந்த ஆய்வுகள் விளக்குகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் பூர்வகுடிகள் அதிகமாக இருக்கும்போது, நிர்வாக முறையினை ஒரு மாதிரியாகவும், பூர்வகுடிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் ஆக்கிரமிப்பாளர்கள் மீதான எதிர்ப்பு மிகக் குறைவாகவும் இருந்த நாடுகளில் நிர்வாக முறையினை வேறு மாதிரியாகவும் கட்டமைத்திருப்பதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
  • உதாரணமாக, இந்தியா​விலும் ஆப்ரிக்க நாடுகளிலும் பூர்வ குடிமக்கள் பெரும்​பான்​மை யாக இருந்​த​தால், அங்கு வளங்களைச் சுரண்​டுகிற நிர்வாக முறைகளை ஐரோப்பிய ஆக்கிரமிப்​பாளர்கள் ஏற்படுத்தி இருக்​கிறார்கள். அதற்கு நேர்மாறாக, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அவர்களுக்கு எதிர்ப்பு மிகக் குறைவாக இருந்​த​தால், அங்கு நீண்ட நாள்களுக்கான முன்னேற்​றத்தைத் திட்ட​மிட்டு அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக முறையினைக் கட்டமைத்​திருக்​கிறார்கள். இந்தியாவில் அவர்கள் ஏற்படுத்திய சுரண்டல் நிர்வாகக் கட்டமைப்​புக்கு நேர் எதிரானது இது.

சுதந்திர இந்தியாவில் பொது நிறுவனங்கள்:

  • ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டமைத்த குவிமய​மாக்​கப்​பட்ட, வளங்களைச் சுரண்​டுகிற நிர்வாக முறைகளின் / நிறுவனங்​களின் சில உதாரணங்களை நாம் பார்க்க வேண்டும். வைஸ்ரா​யிடம் குவிக்​கப்​பட்​டிருந்த அதிகாரங்கள், ஜமீன்தாரி முறை, மாவட்ட ஆட்சி​யருக்கு எல்லையற்ற அதிகாரம் உள்ளிட்டவை ஆங்கிலேயர்கள் திட்ட​மிட்டு நிறுவிய நிர்வாக முறைகள். இவற்றை மறுகட்​டமைப்பு செய்து, அதிகாரக் குவியலை மாற்றும் விதமாகச் சுதந்திர இந்தியாவில் நிறுவனங்கள் கட்டமைப்​ப​தற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவை முழுமையான முயற்சிகளாக இல்லை.
  • சுதந்​திரம் பெற்ற காலக்​கட்​டத்தில் தேசப் பிரிவினை, 500க்கும் மேற்பட்ட முடியாட்​சிகளைக் கொண்ட குறுநில மன்னர்கள் இருந்த சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வலுவான நாடாளுமன்ற ஜனநாயகம் கட்டமைக்​கப்​பட்டதை நாம் அறிவோம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, சுதந்திர இந்தியாவின் ஆரம்பக் காலத்தில் அமைக்​கப்பட்ட பொது நிறுவனங்​களில், மக்களுக்கு நெருக்கமாக, மக்கள் பங்கேற்க அதிக வாய்ப்புகள் கொண்ட உள்ளாட்​சிகள் இடம்பெற​வில்லை என்பதைத்​தான். காரணம், அரசமைப்புச் சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறையில் மட்டுமே உள்ளாட்​சிகள் இருந்தன.
  • மாநில அளவிலான, மாவட்ட அளவிலான நிறுவனங்கள் அதிக அதிகாரங்​களுடன் இருந்தன. மாறாக கிராம சபையோ, மகளிர், பட்டியல் சாதி - பட்டியல் பழங்குடி​யினருக்கான உரிய இடஒதுக்கீடு கொண்ட உள்ளாட்​சிகளோ இல்லை. மேலும், வனப் பகுதி​களின் நிர்வாகம் முழுக்க முழுக்க வன அலுவலர்​களின் கட்டுப்​பாட்டில் இருந்ததே தவிர, பல நூற்றாண்​டுகளாக வனங்களில் வாழும் மக்களின் அதிகாரங்களை அங்கீகரிக்கும் எந்தக் கட்டமைப்பும் ஏற்படுத்​தப்​பட​வில்லை.
  • வலுவான நாடாளு​மன்றம் அமைந்ததே தவிர, மக்களுக்கான உரிய அதிகாரங்கள் வழங்கப்​பட்​டனவா, அதற்கான பொது நிறுவனங்கள் அமைக்​கப்​பட்டனவா அல்லது ஆங்கிலேயர்கள் விட்டுச்​சென்ற அதே அதிகாரக் குவிப்பு நிறுவனங்கள் அமைக்​கப்​பட்டனவா என்று பார்த்​தால், பெரும்​பாலும் அதிகாரம் குவிக்​கப்பட்ட நிலையே இருந்​து​வந்ததை உணர்ந்​து​கொள்ள முடிகிறது.

சுதந்திர இந்தியாவில் நிர்வாகம்:

  • இந்நிலை​யில்தான் சுதந்திர இந்தியாவில் பல ஆண்டு​களுக்குப் பிறகு படிப்​படியாக மக்களை நோக்கிப் பொறுப்புகளை ஒப்படைக்கும் சட்டங்கள் வரத் தொடங்கின. அதில் முக்கிய​மானது உள்ளாட்​சிகளைத் தன்னாட்சி பெற்ற அரசுகளாக அங்கீகரிக்கும் 73, 74 அரசமைப்புச் சட்டத் திருத்​தங்கள்.
  • அதன் தொடர்ச்​சி​யாகத் தகவல் பெறும் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை நிறைவேற்​றப்​பட்டு, இந்திய மக்களை உள்ளடக்கிய நிறுவனங்களை அமைப்​ப​தற்கான வழிமுறைகள் வகுக்​கப்​பட்டன.
  • ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சுரண்டல் கட்டமைப்​பினைத் தளர்த்தி, மக்களை நோக்கிய ஜனநாயகத்தை வலுப்​படுத்தும் நிறுவனங்களாக மாற்றி அமைக்​கப்​பட்டன. ஆனால், நிறுவனங்கள் மாற்றி அமைக்​கப்​பட்​டாலும் பல நூறு ஆண்டுகளாக அதிகாரக் குவிப்பு நிறுவனங்களுள் இயங்கியவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படு​வதற்கு இன்னும் காலம் கனிந்​து​விட​வில்லை.
  • பல நேரம் ஓர் ஊராட்​சியின் அடிப்​படைத் தேவையை நிறைவேற்று​வதற்​குக்கூட மாவட்ட ஆட்சி​யரிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைதான் ஊராட்சி மக்களுக்கும் - ஊராட்சிப் பிரதி​நி​தி​களுக்கும் ஏற்பட்​டிருக்​கிறது. வன உரிமைச் சட்டம் கொண்டு​வரப்​பட்​டாலும் இன்னும் வனப் பகுதியில் வாழ்கிற மக்களின் நிலங்​களுக்கான அதிகாரங்களை வன கிராமசபைகள் அங்கீகரித்​தா​லும், அதனைச் செயல்​படுத்து​வதில் தமிழ்நாடு உள்படப் பல மாநிலங்கள் மிகவும் பின்தங்கியே இருக்​கின்றன.
  • வனப்பகு​தியில் சமூகப் பயன்பாட்டு நிலத்​துக்கான உரிமைகளை வழங்காமல் அலுவலர்கள் காலம் தாழ்த்​திவரு​வதைப் பார்க்க முடிகிறது. கிராமசபைக் கூட்டங்​களைப் பதிவுசெய்ய ஒரு செயலியை உருவாக்கி இருக்​கிறது தமிழ்நாடு அரசு. ஆனால், அலுவலர்​களின் முழுக் கட்டுப்​பாட்டில் இருக்கும் செயலியின் மூலம் கிராமசபை முடிவுகள் தீர்மானிக்​கப்​படு​கின்றன. இப்படித்தான் மக்களுக்கான நிறுவனங்களை மாநில அரசு ஆக்கிரமிக்​கிறது.
  • சட்டரீ​தியாக மக்களுக்குப் பொறுப்பு​களைப் பகிர்ந்​தளிக்கும் நிறுவனங்களான உள்ளாட்​சிகள் வன உரிமைச் சட்டம், கிராம சபை என மக்களுக்கான நிறுவனங்கள் அமைக்​கப்​பட்​டாலும் அதனை முழுமை​யாகச் செயல்​படுத்த மறுக்கும் ஆங்கிலேயர் கால மனோபாவத்தோடு இருக்கும் பலரின் அணுகு​முறை​யினால் மக்கள் பல இன்னல்​களைச் சந்தித்து​வரு​கிறார்கள். இன்றைக்கும் தமிழ்​நாட்டில் 2024 டிசம்பர் மாதத்தில் நடக்க வேண்டிய 27 மாவட்​டங்​களுக்கான ஊராட்சித் தேர்தல்கள், நடத்தப்​படுமா அல்லது நடத்தப்​ப​டாமல் ஒத்திவைக்​கப்​படுமா என்கிற குழப்பம் நீடிக்​கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம்:

  • இன்றைக்கும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சி​யரின் முடிவுதான் இறுதியாக இருக்​கிறது. கிராமசபை​யில், ஊராட்சி மன்றங்​களில் எடுக்​கப்​படும் முடிவுகள் நடைமுறைப்​படுத்​தப்​படுவது பெரும்​பாலும் ஆட்சி​யரின் கையில்தான் இருக்​கிறது. ஆங்கிலேயர்கள் உருவாக்கி இருந்த சுரண்டல் நிர்வாக முறைகளில் எப்போதெல்லாம் மக்கள் எழுச்சி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சில சமாதானங்கள் ஏற்படுத்​தப்​பட்டு, இறுதியில் வேறு வழியில்​லாமல்தான் நாட்டுக்குச் சுதந்​திரம் வழங்கப்​பட்டதை ஆய்வாளர்கள் சுட்டிக்​காட்டு​கிறார்கள்.
  • பொதுவாக, ஜனநாயக அமைப்பு​களில் நீண்ட நாள்களுக்குச் சுரண்டல் கட்டமைப்பு தாக்குப்​பிடிக்க முடியாது. எனவே, ஆங்கிலேயர் மனோபாவத்​திலிருந்து விடைபெற வேண்டும். மக்களுக்கான உள்ளூர் அமைப்பு​களும், கிராமசபைகளும், வன உரிமைச் சட்டங்​களும், கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்​படையிலான பள்ளி மேலாண்மைக் குழுக்​களும் வலுப்​படுத்​தப்பட வேண்டும்.
  • அனைவரையும் உள்ளடக்கிய பொது நிர்வாக நிறுவனங்கள் அமைக்​கப்​படும்​போதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது முன்னேற்றம் சாத்தி​ய​மாகும் என்பதை நோபல் பரிசுபெற்ற ஆய்வுகள் தெளிவாகச் சுட்டிக்​காட்டு​கின்றன. தமிழ்​நாட்டின் முன்னேற்றம், சென்னைத் தலைமைச் செயலகத்​திலிருந்து மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவல​கத்​திலிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு சிற்றூரிலிருந்தும் கட்டமைக்​கப்​படட்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்