- ‘என்டே பூமி’ என்ற பெயரில் கேரள அரசு நடத்தி வரும் ‘மின்னணு மறு அளவைப் பணி’ (டிஜிட்டல் ரீ சா்வே), 14 மாவட்டங்களிலுள்ள 200 கிராமங்களில் நடந்து வருகிறது. இதற்காக 4,700 ஊழியா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக கேரள எல்லையோர தமிழக மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- தமிழக - கேரள எல்லை 822 கிலோ மீட்டா் நீளம் கொண்டது. இதில், தமிழகத்தை ஒட்டியிருக்கும் கேரளத்தின் ஏழு மாவட்டங்களிலுள்ள, 15 தாலுகாக்களில் வசிக்கும் மக்கள், கேரள அரசின் ‘மின்னணு மறு அளவைப் பணி’யால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனா்.
- கட்டக்கடை, நெய்யாற்றின்கரா, நெடுமங்காடு, புனலூா், கோன்னி, தேவிகுளம், பீா்மேடு, உடும்பன்சோலை, பாலக்காடு, மன்னாா்காடு, சித்தூா், நிலம்பூா், வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய 15 தாலுகாக்களில் நடக்கும் மறு அளவைப் பணியை நிறுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட விவசாயிகளும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினரும் குரல் கொடுத்து வருகின்றனா்.
- ஏனென்றால், அந்த 15 தாலுகாக்களில் பட்டா நிலம் வைத்திருக்கும் தமிழ் விவசாயிகளை விரட்டியடிப்பதற்கு கேரள அதிகாரிகள் முனைப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் நிலம் அதிகம் வைத்திருக்கும், தமிழ் விவசாயிகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது (இடுக்கி மாவட்டத்திற்கு உள்பட்ட தேவிகுளம், பீா்மேடு தாலுகாக்களில் வசிக்கும் 90 விழுக்காட்டினா் தமிழா்கள்தான்).
- 1905-இல் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பதிவேடுகளையோ, 1966-இல் நடத்தப்பட்ட மறு அளவீட்டில் எடுக்கப்பட்ட குறிப்புகளையோ கேரள அரசு பொருட்படுத்தவே இல்லை.
- நவம்பா் 1-ஆம் தேதி ‘மின்னணு மறு அளவைப் பணி’ தொடங்கப்போவதாக கேரள அரசு அறிவித்தது. ஆனால் அப்போது தமிழக அரசு இந்த அறிவிப்பைக் கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் 7-ஆ ம் தேதி தொடுபுழா சா்வே அலுவலகத்திலிருந்து, தேனி மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
- தேனி மாவட்டத்திலிருந்து எந்தத் தகவலும் வராத நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த மாதம் 1-ஆம் தேதி கேரள அரசு அளவைப் பணியை தொடங்கிவிட்டது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் தமிழக அரசு மெளனமாகவே இருக்கிறது.
- உயா்மட்டக் குழு அமைத்து, மத்திய பாா்வையாளா்கள் முன்னிலையில் நடக்க வேண்டிய மின்னணு மறு அளவைப் பணியை, கேரள அரசு தன்னிச்சையாகச் செய்கிறது. எங்களைக் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக மறு அளவுப் பணி செய்வதை உடனடியாக நிறுத்துங்கள், என தமிழக அரசு ஏன் ஆட்சேபிக்கவில்லை? மத்திய அரசும் மெளனமாக இருப்பது ஏனோ?
- எல்லையோரம் உள்ள தமிழகப் பகுதிகளை கேரளம் ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்துங்கள், மின்னணு மறு அளவைப் பணியை நிறுத்துங்கள் என வருவாய்த்துறை அமைச்சரை இரண்டு முறை நேரில் சந்தித்து முறையிட்டும் எதுவுமே நடக்கவில்லை என்று வேதனை பொங்கக் கூறுகிறாா்கள் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.
- இதன் விளைவு, மூணாற்றில் இருந்து மாட்டுப்பட்டி செல்லும் வழியில் இக்கா நகரில் உள்ள 60 தமிழா்களின் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று தேவிகுளம் வருவாய்த்துறையினா் நோட்டீஸ் வழங்கி உள்ளனா்.
- ஆனைக்கல்-பாப்பம்பாறை பகுதி தங்களுக்குச் சொந்தமானது என கடந்த மாதம் 17-ஆம் தேதி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைத்தது. தேவாரம் கிராமத்துக்கு உட்பட்ட 80 ஏக்கருக்கும் அதிகமான நிலம், தங்களது மாநிலத்துக்குச் சொந்தமானது என கேரள அரசு அறிவித்துள்ளது.
- 1956-இல் ஏற்பட்ட மொழிவாரி மாநில பிரிவினையின்போது சுமாா் 1,400 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு நிலத்தை கேரளத்திடம் இழந்தது தமிழகம் . அதேபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. தற்போதைய மின்னணு மறு அளவைப் பணியால் சுமாா் 1,000 சதுர கிலோ மீட்டா் நிலப்பரப்பை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் வருவாய் ஆவணம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கேரள அரசு எதிா்ப்பின்றி நிலங்களை அபகரிக்கிறது. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் போன்ற பல அமைப்புகளின் எதிா்ப்புக் குரல்கள், கேரள அரசின் செவிகளில் ஏனோ விழவில்லை.
- இதுஒருபுறமிருக்க, சிலப்பதிகார நாயகி கண்ணகியை, கேரளத்தவா்கள் சொந்தம் கொண்டாடுகின்றனா். தேனி மாவட்டம் கூடலூா் அருகே விண்ணேற்றப்பாறை மலை உச்சியில் தமிழக எல்லைக்குள் இருக்கும் மங்கலதேவி கண்ணகி கோயிலை, 1976-ஆம் ஆண்டு முதல் கேரளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.
- ‘மின்னணு மறு அளவைப் பணி’ மூலம் கண்ணகி கோயிலையும் அபகரிக்க முனைப்பு காட்டும் கேரளம், அதில் முதல்கட்ட வெற்றியையும் பெற்றுவிட்டது. அளவைப் பணிக்குப் பிறகு, 1,800 ஆண்டுகள் பழைமையான மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் கேரளத்தில் இருப்பதாக கூகுள் மேப் காட்டுகிறது.
- கண்ணகி கோயிலை சீரமைத்துத்தர கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு, 2014-ஆம் ஆண்டு, கண்ணகி கோயில் அறக்கட்டளை, கேரள மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. வழக்கு விசாரணைக்குப் பிறகு, ஒரு கோடி ரூபாய் செலவில் மங்கலதேவி கண்ணகி கோயிலை கேரள மாநில அரசு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று 2108-இல் கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- தமிழக எல்லைக்குள் வரும் பழமை வாய்ந்த ஒரு கோவில் தொடா்பான வழக்கை கேரள உயா் நீதிமன்றம் எவ்வாறு விசாரணைக்கு ஏற்றது என்பது புரியாத புதிா்.
- மருத்துவக் கழிவுகளையும், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டும் குப்பைத் தொட்டியாக தமிழகத்தை கருதும் கேரளம், தற்போது தமிழக நிலப்பரப்பை அபகரிக்க முடிவு செய்து விட்டது. தமிழக - கேரள எல்லையோரம் இருக்கும், தமிழக வருவாய் நிலங்களையும், வனப் பகுதிகளையும் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்.
நன்றி: தினமணி (13 – 12 – 2022)