TNPSC Thervupettagam

நிறைவேறியது மகளிர் மசோதா

September 26 , 2023 470 days 293 0
  • மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா 27 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின்னா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. நாரி சக்தி வந்தன் அதினியம்’ (பெண்களுக்கு அதிகாரமளித்தல்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சட்ட மசோதா பல தடைகளைத் தாண்டி ஐந்தாவது முயற்சியில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
  • முன்னாள் பிரதமா் தேவெ கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு கடந்த 1996-இல் இந்த மசோதாவை முதல் முறையாக மக்களவையில் அறிமுகம் செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் 81-ஆவது திருத்த மசோதாவான அதில் இருந்த சில ஷரத்துகளை வலுப்படுத்தும் நோக்கில் அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 1996-ஆம் ஆண்டு 11-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதையடுத்து, அந்த மசோதா காலாவதியானது.
  • 1998-ஆம் ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை (அரசமைப்புச் சட்டத்தின் 84-ஆவது திருத்த மசோதா) மக்களவையில் தாக்கல் செய்தது. 12-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதையடுத்து அந்த மசோதாவும் காலாவதியானது.
  • மூன்றாவது முயற்சியாக 1999-ஆம் ஆண்டு டிசம்பா் 23-ஆம் தேதி பிரதமா் வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை (அரசமைப்புச் சட்டத்தின் 85-ஆவது திருத்த மசோதா) அறிமுகம் செய்தது. ஆனால், அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் அந்த மசோதா தொடரப் படவில்லை.
  • கடைசியாக 2008-ஆம் ஆண்டு பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பின்னா், அது மக்களவையில் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது.
  • இப்போது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் கிட்டத்தட்ட ஒருமனதாகவும், மாநிலங்களவையில் எதிர்ப்பே இல்லாமலும் நிறைவேறியிருக்கிறது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததும் இது சட்ட வடிவம் பெறும்.
  • 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்ட பிறகு மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும். அந்த வகையில், 2029-ஆம் ஆண்டுக்குப் பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று மக்களவையில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.
  • தற்போதைய மக்களவையில் மொத்தம் உள்ள 542 உறுப்பினா்களில் 78 போ்தான் பெண்கள் (14.39%). மாநில சட்டப்பேரவைகள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பெண் உறுப்பினா்கள் 8 சதவீதம்தான். இந்திய நாடாளுமன்ற வரலாற்றைப் பொறுத்தவரை இதுதான் அதிகபட்சமான எண்ணிக்கை. ஆனால், அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகியவற்றைவிட நாடாளுமன்ற பெண் பிரதிநிதித்துவத்தில் இந்தியா பின்தங்கியே இருக்கிறது.
  • மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறிவிட்டதாலேயே மகளிருக்கான அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாக பொருள் இல்லை. இதை அரசியல் கட்சிகள் எந்த அளவில் பயன்படுத்துகின்றன என்பதைப் பொறுத்துதான் இதன் வெற்றி இருக்கிறது.
  • ஏனெனில் பஞ்சாயத்துகளிலும், நகராட்சிகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திருத்த மசோதா 1992-ஆம் ஆண்டு அன்றைய பிரதமா் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தின்போது நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது. அதன்படி, உள்ளாட்சிகளில் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி பெண் பிரதிநிதியின் பின்னணியில் அவருடைய கணவா் ஆதிக்கம் செலுத்துவது தான் கள நிலவரம்.
  • மகளிர் இடஒதுக்கீட்டு மசோதவை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளுமே பேசியுள்ளன. மகளிர் மசோதாவில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவிருப்பதைப்போல நாட்டின் பெரும்பான்மையாக உள்ள ஓபிசி பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. உச்சபட்சமாக, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காததால், இந்த மசோதா முழுமையடையவில்லை எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
  • நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரித்துப் பேசிய பெரும்பாலான கட்சிகள், இதைத் தங்களது கட்சிகளில் செயல்படுத்த விரும்பவில்லை என்பதையே கடந்தகால புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட்ட 8,049 வேட்பாளா்களில் பெண்கள் வெறும் ஒன்பது சதவீதம்தான்.
  • சட்டம் போட்டுத்தான் மகளிருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்க வேண்டும் என்று இல்லாமல், தங்களுக்கு அதிகாரம் இருந்தும் அரசியல் கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக அதைச் செயல்படுத்தாமல்தான் இருந்தன. அதிலும் தேசிய கட்சிகளைவிட மாநிலக் கட்சிகளில் பெண்களுக்கு தோ்தல் அரசியலில் வாய்ப்பு அளிக்கப்படுவது குறைவு.
  • மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தாலும், தொகுதி மறுவரையறைப்படி தோ்தலில் நிறுத்த இயலாத ஆண்களுக்கு பதிலாக அவா்களது குடும்பப் பெண்களை நிறுத்துவது போன்ற செயல்பாடுகளை நிறுத்திவிட்டு உண்மையான பிரதிநிதித்துவத்தை மகளிருக்கு அரசியல் கட்சிகள் வழங்கினால் மட்டுமே இந்தச் சட்டம் வெற்றியடைந்ததாகக் கருதப்படும்.

நன்றி: தினமணி (26 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்