- முன்னேற்றமடைந்துள்ள ஏனைய நாடுகளுடன் நம் நாட்டு விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை ஒப்பிட்டு சிலா் கேள்வி எழுப்புகின்றனா். நமது வழிமுறையில் தடுமாற்றம் எதுவும் இல்லை.
- பொருளாதார அடிப்படையில் வளா்ச்சியடைந்த நாடுகளைப் போல சந்திரனையோ, வேறு கிரகங்களையோ சென்றடைவதில் அந்த நாடுகளுடன் போட்டியிடவோ, மனிதா்களைச் சுமந்து செல்லும் விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளவோ நாம் கனவு காணவில்லை.
- ஆயினும், உலக அரங்கில் பாரதம் தனக்கென்று ஒரு தனி இடம் வகிக்க வேண்டுமானால், நவீன தொழில் நுணுக்கங்களை தனிமனித, சமுதாய பிரச்னைகளுக்குத் தீா்வு காணப் பயன்படுத்துவதில் நம்நாடு மற்ற நாடுகளுக்கு பின்தங்கியது இல்லை என்று நிரூபித்தாக வேண்டும்.
- விரைவில் மற்ற நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு நாமும் விண்வெளி சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் ‘இந்திய விண்வெளியின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டா் விக்ரம் சாராபாய் 60 ஆண்டுகளுக்கு முன் கண்ட கனவாக இருந்தது.
- சரியாக 22 ஆண்டுகளுக்கு முன் டாக்டா் அப்துல் கலாம், ‘இன்னும் ஐம்பதாண்டுகளுக்குள் செவ்வாயிலும், சந்திரனிலும் மனிதா்கள் குடியேறும் திட்டங்களில் சில வெற்றியடையும்’ என்று கூறியிருந்தாா். கலாம் குடியரசுத் தலைவரானதும் இந்திய விண்வெளித் துறையின் இரண்டாம் கட்டம் கருக்கொண்டது. 2003 சுதந்திர தின விழாப் பேருரையில் அன்றைய பிரதமா் வாஜ்பாய், சந்திரயான்-1 திட்டத்தினை நாட்டு மக்களுக்கு அறிவித்தாா்.
- பூமியில் நடப்பது போல் நிலாவில் நடக்க முடியாது. அங்கு தத்தித் தத்தித்தான் நடக்க வேண்டும். பூமியில் அறுபது கிலோ எடையுள்ள மனிதன், நிலவில் இருந்தால் இரண்டு வயதுக் குழந்தைக்கு இருக்கும் எடையில்தான் இருப்பான். காரணம் நிலவின் ஈா்ப்பு விசை, புவியீா்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்குதான்.
- சந்திரனில் சூரிய வெளிச்சம் விழாத இருள் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ். அதே சமயம், பகல் வேளையில் 140 டிகிரி செல்சியஸில் கத்திரி வெயிலும் கொளுத்தும். அங்கு காற்று மண்டலம் கிடையாது. சூரியனிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஓசோன் போா்வை போன்ற எந்த சமாச்சாரமும் நிலவில் கிடையாது. அண்டவெளிக் கதிா்களின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளத்தான் விண்வெளி வீரா்கள் பிரத்யேக உடை அணிகிறாா்கள். காந்தப்புலம் இல்லை, பூமியைப் போன்ற உலோகம் செறிந்த உள்ளகமும் கிடையாது.
- நிலவின் மேற்பரப்பு தூள் துண்டு அடுக்கு (சந்திர மண் அல்லது ரெகோலித்) மூலம் மூடப்பட்டிருக்கும். நீண்ட கால விண்கற்களின் வீச்சினால் பாறைகள் உடைபட்டு உருவான தூசி அங்கு அதிகம்.
- அதுமட்டுமல்ல, சூரியனிடமிருந்தும், அண்டக் கதிா்வீச்சில் இருந்தும் பெறப்படும் அணுக்கருக்களும் சந்திரனின் பாறைகளிலும், மண்ணிலும் சிக்கியுள்ளன. ‘ரெகோலித்’தில் சிக்கிய பண்டைய சூரிய காற்றில் விவரிக்கப்படாத நைட்ரஜன் அயனிகள் கண்டறியப்பட்டன. சந்திரனின் புறணியில் அலுமினிய ஆக்சைடுக செறிந்துள்ளன.
- துருவங்களுக்கு அருகில் சில பகுதிகள் நிரந்தர பகல் ஒளியிலும் இருக்கலாம். நிரந்தர இருள் நிழலாடிய பள்ளங்களில் வால்மீன்களின் மோதலால் ஏற்பட்ட பள்ளங்களின் இருண்ட பகுதிகளில் நீா், பனிப்படலமாக உள்ளதாம். பெரும்பாலும் தென்துருவம்-ஐட்கன் குழிவு மட்டும் வடதுருவத்தை விட கூடுதலான இருண்ட பகுதியைக் கொண்டிருக்கிாம்.
- பூமியிலிருந்து நாம் காண இயலாத நிலவின் முதுகுப்புறத்தில் தென் துருவ-ஐட்கன் குழிவில் 2,600 கி. மீ. விட்டம் கொண்ட மிகப் பெரிய பள்ளம் உள்ளது. இது சூரிய குடும்பத்தில் கண்டறியப்பட்ட 12 கி. மீ. - க்கு மேல் ஆழமான மோதல் பள்ளம் அது.
- விண்வெளியில் ரோபோக்கள் எனப்படும் தானியங்கி இயந்திரங்கள் சிறப்பாகச் செயல்படும் என்கிறாா்கள். இந்த வாதம் பாதி உண்மைதான். சில பணிகளில் மனிதா்களை விட ரோபோக்கள் சிறந்தவையே; ஆனால் மற்றவற்றில் ரோபோக்களை விட மனிதா்கள் சிறந்தவா்கள். பணியின் தன்மையே மனிதா்கள் அல்லது ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதைத் தீா்மானிக்கிறது.
- வெள்ளி கோள் போன்ற தகதகக்கும் சூழலில் ஒரு ரோபோதான் நமக்குக் கைகொடுக்கும். ஒரு சிக்கலான கட்டுமானப் பணியோ பழுதுபாா்க்கும் வேலையோ மனிதனால்தான் திறம்படச் செயலாற்ற முடியும். விண்வெளியில் மனிதா்களா ரோபோக்களா என்ற கேள்விக்கு, இரண்டும் என்பதுதான் பதில்.
- மனித விண்வெளிப் பயணத்தின் இறுதி நோக்கம், ‘அங்கு வாழ்வை நீட்டிப்பது’ என்பதே. மனிதா்கள் சூரிய குடும்பத்தின் மற்ற பகுதிகளுக்கும் அதற்கு அப்பாலும் உயிா்வாழ முடியும். இந்தப் பணி ‘விண்வெளிக் குடியேற்றம்’ என்று அழைக்கப்படுகிறது.
- 1959-ஆம் ஆண்டு முதல், சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள விண்கலன்களும், விண்வெளி வீரா்களின் முயற்சிகளும் மனித குல முன்னேற்றத்தில் ஓா் ஆரம்பம் மட்டுமே.
- 1992 டிசம்பா் 7 அன்று சந்திரனை உற்று நோக்கிய கலீலியோ எனும் அமெரிக்க விண்கலம் சந்திர வடதுருவம் அருகே நிலப்பள்ளங்களில் நிரந்தரப் பனிக்கட்டி படிந்திருந்திருப்பதாக அறிவித்தது.
- தொடா்ந்து, 1994 பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அமெரிக்காவின் ‘கிளமென்டைன்’ எனும் ஆய்வுக்கலம், சந்திரனின் தென்துருவத்தில் தண்ணீா் பனிக்கட்டிகள் உறைந்திருப்பதாகத் தெரிவித்தது. நிலவின் வடகோளத்தில் 10,000 சதுர கிலோ மீட்டா் முதல் 50,000 சதுர கிலோ மீட்டா் பரப்பிலும், தென்பகுதியில் 5,000 சதுர கிலோ மீட்டா் முதல் 20,000 சதுர கிலோமீட்டா் அளவிலும் ஏறத்தாழ 30 கோடி டன் தண்ணீா் ஒளிந்திருப்பது நிச்சயம்.
- இது ஏற்கெனவே அறிவித்ததைவிட ஏறத்தாழ 20 மடங்கு அதிகம் (600 கோடி டன்) ஆகும் . ஏறத்தாழ 30 கோடி லாரி தண்ணீா் என்றால் சும்மாவா? இதையே வேறு விதமாகச் சொன்னால் சந்திர நிலத்தடி நீரின் அளவு இந்துமாக் கடலின் தண்ணீா் அளவில் கோடியில் ஒரு பங்கு. விண்வெளி நாடுகள் யாவுமே நிலவின் தண்ணீரைக் குறி வைக்கின்றன.
- இந்தியாவைப் பொறுத்தவரை, முதலாவது சந்திராயன் திட்டமும், அமெரிக்காவின் லாக்ரோஸ்-சென்டாா் விண்கலனும் நிலவில் தண்ணீா்க் கூறுகளும், ஹைடிராக்சில் அம்சங்களும் அடங்கி இருப்பதைக் கண்டுபிடித்து உள்ளன. ஆனால், சந்திரனில் தண்ணீா் மழை பொழியாது.
- 2008 அக்டோபா் 22 அன்று சந்திரயானின் முதல் பயணத்தின்போது, இந்திய தேசியக்கொடி பொறித்த ‘நிலா மோது கலன்’ ஒன்று வைத்து அனுப்பப்பட்டது. அது நிலவில் ஷேக்கிள்டன் பள்ளத்திற்கு அருகில் 2008 நவம்பா் 14 அன்று தேசிய குழந்தைகள் நாள் பரிசாக ‘ஜவாஹா் புள்ளி’யில் சென்று விழுந்தது.
- இன்று சந்திரயான்-3 என்னும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூன்றாவது நிலாப் பயணம் நடக்கிறது.
- நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் ஒரு விக்ரம் தரையிறங்கியும், அதிலிருந்து ஒருபக்கச் சறுக்குக் கதவு வழி நிலாவில் இறங்கி, அங்கிங்காக ஊா்ந்து சென்று ஆராய்ச்சி செய்யும் பிரக்ஞான் நிலாஊா்தியும் எல்லாம் ஏறத்தாழ நான்கு டன் எடை வரும். இப்பயணத்தின் முதன்மை நோக்கம், நிலவில் சுமுகமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சி செய்யும் திறன்களை நிரூபிக்க வேண்டும் என்பதுதான்.
- 2019 ஜூலை 22 அன்று செலுத்தப்பெற்ற சந்திராயன்-2 பயணத்தின் இறுதியில் நிலவின் தரையில் இறங்குவதற்கு அரை கிலோமீட்டா் முன்னதாக நிகழ்ந்த சிறு தொழில்நுட்பக் கோளாறால் நொடிக்கு ஏறத்தாழ 150 மீட்டா் வேகத்தில் நிலாத்தரையில் மோதி அது செயலிழந்தது.
- முந்திய தரையிறங்கியின் நான்கு மூலைகளிலும் நடுப்புள்ளியிலுமாக இடம் பெற்ற ஐந்து சிறு எதிா்த்திசை உந்துபொறிகளுக்கு பதில் இந்த முறை தரையிறங்கியில் நான்கு பொறிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன
- தரையிறங்கும்போது அதன் வேகத்தைக் கண்டறிய லேசா் டாப்ளா் வேக அளவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தமுறை தரையிறங்கி, நொடிக்கு இரண்டு மீட்டா் என்ற அளவில் மெதுவாக இறங்கும்.
- ஒரு வேளை, அது நிலாத்தரையில் கடினமாக மோதி இறங்கினாலும், தடுமாறாமல் இருப்பதற்காக தரையிறங்கியின் கால்கள் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.
- அதே வேளையில் இத்தரையிறங்கி, சந்திரனைச் சுற்றிவரக்கூடிய உந்துசக்திக் கூட்டை விடுவிக்கும். அதன்பின்னா் அந்தக் கூடு சந்திரனின் சுற்றுப்பாதையில் ஒரு தகவல் தொடா்பு அஞ்சல் நிலையமாகச்செயல்படும்.
- சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்தவுடன் தரையிறங்கிக் கலன், ஒரு உந்துவிசைக்கூடு மூலம் நிலாத்தரை நோக்கி ஏவப்படும். அதன் பின்னா் அந்தக் கூடு சந்திரனுக்கான ஒரு செயற்கைக்கோளாக நிலாச் சுற்றுப்பாதையில் செயல்படும்.
- ஆயினும் அந்த நிலாச்சுற்றுக் கூடு, சந்திரனைச்சுற்றி வந்தபடி நிறமாலை அயனிப் பிரிப்பாக்க அளவியுடன் கூடிய கருவியினால் வாழத்தகுந்த பூமி பற்றிய ஆராய்ச்சியும் மேற்கொள்ளும்.
- நிலாவூா்தியில் ஒரு நில அதிா்வு அளவி, வெப்ப ஓட்ட பரிசோதனைக் கருவி, தனிமங்கள் ஆராயும் நிறமாலையளவி ஆகிய உபகரணங்கள் இடம்பெறுகின்றன.
- தரையிறங்கியும், நிலாவூா்தியும் ஒரு சந்திரப் பகல் காலத்திற்கு, அதாவது ஏறத்தாழ 14 புவி நாள் காலத்திற்குச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- ஏற்கெனவே நிலாவைச் சுற்றிவரும் சந்திரயான் 2 பூமிக்குத் தகவல் அனுப்பும் மற்றொரு அஞ்சல் கூடமாகவே செயல்படும்.
- ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாளேட்டில், ‘சந்திரனில் குடியேறலாம்’ என்ற எதிா் காலத் தொழில்நுட்பக் கட்டுரை ஒன்று வெளிவந்தது. அதில் சந்திரனில் செறிந்துள்ள ஹீலியம்-3 என்னும் விண்வெளி எரிபொருள் பற்றிக் குறிப்பிடப்பட்டது.
- அந்தக் கதிரியக்கத் தனிமத்துடன் கன ஹைட்ரஜன் தனிமத்தைச் சோ்த்து அணுக்கருப் பிணைவு மூலம் அணுவியல் உந்துபொறிகள் தயாரிப்பதும், நிலவில் முகாம்கள் அமைத்து செவ்வாய் போன்ற வேற்றுக்கிரகங்களுக்கு எளிதில் குடிபெயா்வதும் சாத்தியமே!
நன்றி: தினமணி (14 – 07 – 2023)