TNPSC Thervupettagam

நிலவு: மனித குலத்தின் அறிவியல் ஆய்வகம்

July 23 , 2023 546 days 624 0
  • நிலவு வெறுமனே கவிதை பாடவும், குழந்தைகளுக்கு சோறூட்டவும் மட்டுமல்ல மனித குலத்தின் அறிவியல் வளர்ச்சிக்குப் பல்வேறு வகை களில் மிகப்பெரிய அளவில் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சில நூற்றாண்டுகளில் நிஜப் பாட்டி அங்கே வடை சுட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பெற்றோர்கள் அங்கேயே சென்று குழந்தை களுக்குச் சோறு ஊட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
  • 1969 ஜூலை 20ஆம் நாள். மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான நாள். பூமியைத் தாண்டி இன்னொரு நிலப்பரப்பில் மனிதன் காலடி எடுத்து வைத்த நாள் அது. நிலவில் மனிதன் காலடி வைத்தது, அறிவியல் வரலாற்றில் ஒரு மணி மகுடம். அரிஸ்டாட்டில் முதல் ஆரியபட்டர், கலிலியோ, நியூட்டன் வழியாக ஐன்ஸ்டைன் வரை பல நூற்றாண்டு அறிஞர்களுக்கு அதில் பங்கிருக்கிறது. ஜூலை 14ஆம் நாள் இஸ்ரோவால் ஏவப்பட்ட சந்திரயான்-3 தற்போது நிலவை நோக்கிச் சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், சீனா என உலகின் முன்னணி நாடுகள் நிலவு சார்ந்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நிலவில் அறிவியல்

  • நிலவைப் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி ஏதோ இந்த நூற்றாண்டில் ஆரம்பித்தது அல்ல. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே நிலவைக் குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வந்திருக்கிறது. பல்வேறு சமூகங்கள் நிலவில் பார்த்தவற்றை கோட்டோவியங்களாக பாறைகளிலும் குகைகளிலும் வரைந்திருக்கின்றன. முற்காலத்தில் காலக்கணக்கீடும் நிலவின் சுழற்சியை வைத்தே கணக்கிடப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச் பகுதியில் உள்ள கல்தூண்கள் நிலவின் சுழற்சியை வைத்து அமைக்கப்பட்டிருக்கின்றன.
  • இன்று நம்மிடம் இருக்கின்ற அறியப்பட்ட வரலாற்றுத்தரவுகளை வைத்துப் பார்க்கும்பொழுது நிலவு சார்ந்து முதலில் ஆராய்ச்சி நடத்தியவர் அரிஸ்டாட்டில். சந்திர கிரகணம் நிகழும்போது பூமியின் நிழல் நிலவில் வட்ட வடிவத்தில் விழுவதைக் கண்டு பூமியின் வடிவம் தட்டை அல்ல உருண்டைதான் என முதன்முதலாக அவர் கணித்தார்.
  • அடுத்து ஒரு சில நூற்றாண்டுகளில் ஹிப்பார்கஸ் என்கிற வானியல் அறிஞர் பூமி - நிலவுக்கு இடையிலான தொலைவு பூமியின் ஆரத்தைப் போல 60 மடங்கு என்று கண்டறிந்தார். இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞர் ஆரியபட்டர் நிலவில் வெளிப்படும் ஒளி தானே ஒளிர்வதல்ல, சூரிய ஒளியின் பிரதிபலிப்புதான் என்று கண்டறிந்தார். அதேபோல் சந்திர கிரகணம் நிகழும்போது பூமியின் நிழலில் நிலவு எவ்வளவு நேரம் பயணிக்கும் என்றும் துல்லியமாகக் கணக்கிட்டார்.
  • நிலவைப் பற்றிய ஆராய்ச்சியில் அடுத்தகட்ட பாய்ச்சல் கலிலியோவால் நிகழ்த்தப்பட்டது. அதுவரை வெறும் கண்களால் நிலவைப் பார்த்துவந்த மனிதனுக்கு முதன்முதலாக தொலைநோக்கியால் நிலவின் கிண்ணக்குழிகளையும் (craters) மேடு பள்ளங்களையும் (mountains, valleys) தனது தொலைநோக்கி மூலம் கலிலியோ அறிமுகப்படுத்தினார். அதுவரை நிலவு மிக அழகான, அப்பழுக்கிலாத ஒரு விண் பொருள் என்று நினைத்திருந்த மனிதர்களுக்கு பூமிபோல நிலவும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒரு நிலப்பரப்புதான் என்று உணர்த்தினார்.

கலிலியோ வரைந்த படங்கள்

  • பல இரவுகள் நிலவின் பல்வேறு பகுதிகளைத் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து தன் கையால் வரைந்தார் கலிலியோ. அங்குள்ள மலைகளின் உயரத்தை பூமியிலிருந்து துல்லியமாகக் கணக்கிட்டார்.
  • கலிலியோவுக்குப் பிறகு பல்வேறு வானியல் அறிஞர்கள் இன்னும் திறன் வாய்ந்த தொலைநோக்கிகளை வடிவமைத்து நிலவை ஆராய்ந்தனர். நிலவுக்கு வரைபடம் தயாரித்தனர். 19ஆம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்து வந்தது. வெறும் கண்களால் நிலவைப் புரிந்துகொண்டதைவிட, தொலைநோக்கியால் நமக்குக் கிடைத்த நிலவைப் பற்றிய புரிதல் ஆழப்பட்டது.
  • நிலவு பற்றிய ஆராய்ச்சியில் அடுத்தகட்டப் பாய்ச்சல் இருபதாம் நூற்றாண்டில் அணுவைப் பற்றிய அறிவு வந்த பிறகு நடைபெற்றது. 1950களில் பூமியிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை அனுப்பி நிலவைச் சுற்றி வரச்செய்து இன்னும் துல்லியமாக நிலவு படம்பிடிக்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாகத்தான் நிலவில் மனிதனைத் தரையிறக்கும் சாதனை நிகழ்ந்தது. நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் இரு கூட்டாளிகள் இந்த மகத்தான சாதனையைச் செய்து முடித்தனர். இதுவரை 12 பேர் நிலவில் கால்பதித்துள்ளனர். இந்தியா ககன்யான் திட்டம் மூலம் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது.

பூமியின் புவியியல் காலக்கண்ணாடி

  • நிலவு இயற்கை நமக்கு வழங்கிய ஓர் அறிவியல் ஆய்வுக்கூடம். கிட்டத்தட்ட 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவானது என்று அறிவியல் கூறுகிறது. அக்காலகட்டத்தில்தான் பூமியும், பூமியிலிருந்து நிலவும் உருவாகின. இந்தக் காலகட்டத்தில் எத்தனையோ விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் பூமியின் மீதும் நிலவின் மீதும் மோதின. நிலவில் இருக்கும் கிண்ணக்குழிகள், மலைகள் அப்போது உருவானவைதான்.
  • ஆனால், பூமியின் வளிமண்டலம், கடல் நீரால் இந்தத் தடயங்கள் அழிந்துவிட்டன. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் இத்தடயங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன. நீல் ஆம்ஸ்ட்ராங் காலடித்தடம் 54 ஆண்டுகள் கழித்தும் இன்னமும் அழியாமல் இருப்பது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
  • பூமியில் தண்ணீர், உயிர் உருவாகத் தேவையான கரிம மூலக்கூறுகள் விண்கற்கள் மூலமோ, வால் நட்சத்திரங்கள் மூலமோ வந்திருக்கலாம் என்று கணிக்கிறோம். எனவே, பூமியில் உயிர் எவ்வாறு தோன்றி யிருக்கக் கூடும் என்னும் கேள்விக்கான விடை நிலவில்தான் இருக்கிறது. அறிவியல் அறிஞர்கள் கூற்றுப்படி ‘நிலவு பூமியின் புவியியல் காலக்கண்ணாடி (Geological time piece)'. நாம் நிலவைப் பார்க்கும்போது 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவி எப்படி இருந்திருக்கும் என்பதைத்தான் பார்க்கிறோம்.
  • பூமியைப் போல் அல்லாமல் நிலவில் எந்த கண்டத்தட்டுகளும் நகராததால் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் மையக்கரு என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலையில்தான் இன்னமும் இருக்கிறது. எனவே, நிலவின் மையக்கருவை ஆராய்ந்தால் பூமி உருவாகும்போது அதன் மையக்கரு எவ்வாறு இருந்திருக்கும் என்பது பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகள் நமக்குத் தெரியவரும்.

நிலவில் நீர்

  • இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து 2008இல் சந்திரயான்-1 செயற்கைக்கோள் மூலம் நிலவின் தென்துருவத்தில் 600 பில்லியன் கிலோ கிராம் அளவுக்கு பனிக்கட்டியாக நீர் இருப்பதைக் கண்டறிந்தன. இந்தப் பனிக்கட்டி வடிவிலான நீரை ஆக்சிஜனாகவும் ஹைட்ரஜனாகவும் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டால், இன்னும் சில பத்தாண்டுகளில் மனிதன் நிலவிலேயே நிரந்தரமாகத் தங்கி மிகத் தொலைவில் உள்ள விண்பொருள்களை ஆராய முடியும். அதேபோல் பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜனை ராக்கெட் எரிபொருளாக மாற்ற முடியும். அதேபோல் நிலவின் ஈர்ப்பு விசை மிகவும் குறைவாக இருப்பதால் பூமியிலிருந்து ராக்கெட் ஏவுவதற்கு ஆகும் எரிபொருளை விட நிலவிலிருந்து ஏவினால் செலவாகும் எரிபொருள் குறைவு.

ரேடியோ அலை வானியல்

  • 2020இல் சீனாவின் சாங்-4 என்கிற விண்கலம் முதன்முதலில் நிலவின் மறுபக்கத்தில் தரை இறங்கியது. நிலவின் மறுபக்கம் எப்போதும் பூமியின் பார்வைக்கு மறைந்து இருப்பதால் அங்கே ரேடியோ அலை தொலைநோக்கிகளை அமைக்கும்போது புவியின் ரேடியோ அலைக் குறுக்கீடுகளைத் தவிர்க்க முடியும். இதன் மூலம் ரேடியோ அலை வானியல் துறையில் பல சாதனைகளைச் செய்ய முடியும்.

நிலவில் இருக்கும் கனிமங்கள்

  • இதுவரை 400 கிலோவுக்கு மேல் பாறைக்கட்டிகள், மண்மாதிரிகள் நிலவில் இருந்து பூமிக்கு எடுத்து வரப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பூமியில் அரிதாகக் கிடைக்கக்கூடிய பல்வேறு தனிமங்கள் நிலவில் மிக அதிகமாக இருக்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு வகைகளில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு இது வழிவகுக்கும்.

செவ்வாய்க்கு மனிதன்

  • மனிதகுலத்தின் அடுத்த கட்ட இலக்கு செவ்வாய்க் கோளில் காலடி எடுத்துவைப்பது. அதற்கான சோதனைகள் நிலவில்தான் நடைபெற வேண்டும். எவ்வாறு மனிதன் விண்வெளியிலிருந்து வரும் கதிர்வீச்சுகளை எதிர்கொள்ள வேண்டும், மனித உடல் எவ்வாறு இதை எதிர்கொள்ளும் என்பன போன்ற பல்வேறு ஆராய்ச்சிகள் நடப்பதற்கு நிலவு ஒரு சோதனைக்களம். பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (International Space Station) மனிதன் மாதக்கணக்கில் தங்கி ஆராய்வதுபோல் நிலவைச் சுற்றி மனிதர்களைக் கொண்ட விண்கலம் ‘கேட் வே லூனார் ஆர்பிட்டர் மிஷன்' (Gateway lunar orbitor mission) இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவால் ஏவப்பட இருக்கிறது.
  • அதற்கு முன் ஆர்டிமிஸ் என்கிற திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த இருக்கிறது. இதன் மூலம் நிலவில் முதன்முதலாக ஒரு பெண், வெள்ளையரல்லாத ஒரு மனிதர் கால்வைக்கப் போகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று நாள்கள் தங்கி ஆய்வு நடத்தப்போகிறார்கள். விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு மைல்கல் இது.

நன்றி: தி இந்து (23 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்