TNPSC Thervupettagam

நிலைதடுமாறும் நீதி!

December 14 , 2019 1667 days 988 0
  • தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி. உதட்டளவு ஆதங்கமாக இது தொடர்கிறதே தவிர, நடைமுறையில் செயல்படாமல் இருப்பதால்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  சிறைச்சாலைகள் விசாரணைக் கைதிகளால் நிரம்பி வழிகின்றன. 
  • விரைந்து நீதி வழங்குவதற்கு காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, விரைந்து விசாரணையை முடித்து வழக்குகளை நீதிமன்றத்தின் பொறுப்பில் விடுவது அடிப்படைத்  தேவை. அதேபோல, நீதிமன்றங்களும் தங்கள் முன்னால் வரும் வழக்குகளில் விரைந்து விசாரணையை நடத்தித் தீர்ப்பை வழங்குவது அத்தியாவசியம்.

காவலர்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை

  • காவல் துறையில் சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையும் இல்லை, நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை நிரப்பப்படுவதுமில்லை. இந்தப் பின்னணியில் "தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி' என்கிற கூற்று போலித்தனமாக காட்சி அளிக்கிறது. 
  • உச்சநீதிமன்றம் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் நீதிபதி பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது உச்சநீதிமன்றத்துக்கு மட்டுமல்ல, நீதி நிர்வாகத்துக்கே சவாலான குறைபாடு. 
  • இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கும் 213 பெயர்கள் அரசின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன. டிசம்பர் 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, அனுமதிக்கப்பட்டிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில் 38% நிரப்பப்படாமல் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்டிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை பலத்தில் பாதியளவுகூட இல்லாமல், ஆந்திரம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில உயர்நீதிமன்றங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

தேங்கிக் கிடக்கும் வழக்குகள்

  • இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்து கடந்த அக்டோபர் மாதம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்து மூலம் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்திருந்தார். அதன்படி, இந்தியாவின் 25 உயர்நீதிமன்றங்களில் 43.55 லட்சம்  வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. அவற்றில் 18.75 லட்சம் வழக்குகள் குடிமை (சிவில்) வழக்குகள். 12.15 லட்சம் வழக்குகள் குற்ற (கிரிமினல்) வழக்குகள். 
  • தீர்ப்புக்குக் காத்திருக்கும் 43 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளில் 8 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேங்கிக் கிடப்பவை. 8.35 லட்சம் வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, 10 ஆண்டுகளுக்கும் குறைவாக விசாரணையில் இருப்பவை. ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக விசாரணையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 26.76 லட்சம். 
  • கடந்த செப்டம்பர் மாத நீதிபதிகள் நியமனத்துடன், உச்சநீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட முழுமையான அளவு எண்ணிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவிலுள்ள 25 உயர்நீதிமன்றங்களிலும் காலியாக இருக்கும் நீதிபதி பணியிடங்கள், கடந்த ஓராண்டாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் 399, ஜூலையில் 403, ஆகஸ்டில் 409, செப்டம்பரில் 414, அக்டோபரில் 420 என்று நிரப்பப்படாத உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

கொலீஜியம்

  • உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான நபர்களின் பெயர்களை மூன்று பேர் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கிறது. உயர்நீதிமன்றங்களிலுள்ள கொலீஜியங்கள் தங்களது நீதிமன்றங்களில் நியமிப்பதற்கான நபர்களின் பெயர்களை சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கின்றன. உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கும் நபர்களின் பின்னணியை சட்ட  அமைச்சகம் ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பி வைக்கிறது. 
  • உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்றங்கள், அரசு ஆகியவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இணைந்து செயல்பட்டாக வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு ஆறு மாத காலவரம்பை உச்சநீதிமன்றம் நிர்ணயித்திருக்கிறது. 
  • பிரதமர் (மத்திய அமைச்சரவை), குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்ட நீதிபதியின் பெயர் செல்வதற்கு முன்னால் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. காலிப் பணியிடம் ஏற்படுவதற்குக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னால் நியமனத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்று நடைமுறை விதிமுறைகள் கூறுகின்றன. 

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம்

  • தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 2015-இல்  நாடாளுமன்றம் நிறைவேற்றிய அந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
  • உச்சநீதிமன்ற கொலீஜியம் முறை தொடர வேண்டும் என்கிற நீதித் துறையின் பிடிவாதமும், நீதித் துறை தனக்குத்தானே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் ஒருதலைப்பட்ச அதிகாரம் தவறானது என்கிற அரசின் நிலைப்பாடும் நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையேயான பனிப்போரை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. 
  • நீதித் துறையின் உயர் அடுக்குகளில் காணப்படும் காலிப் பணியிடங்கள் நீதி நிர்வாகத்தை வலுவிழக்கச் செய்திருக்கிறது. உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதித் துறை எதிர்பார்ப்பதுதான் நியமனங்கள் தாமதமாவதற்குக் காரணம்.

நன்றி: தினமணி (14-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்