TNPSC Thervupettagam

நிலைமை கைமீறவில்லை

November 28 , 2022 708 days 397 0
  • நிதி அமைச்சகம் அண்மையில் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. வரும் மாதங்களில் பணவீக்க அழுத்தங்கள் குறையும் என்று கூறப்பட்டாலும், அது எந்த அளவுக்கு சாத்தியமாக இருக்கும் என்பது போக போகத்தான் தெரியவரும். 
  • மிதமான, விறுவிறுப்பான வளர்ச்சி விகிதம் மற்றும் உள் மதிப்பீடுகள் இந்த நிதியாண்டில் 6.3% ஆகக் குறைக்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. இது மத்திய வங்கியால் கணிக்கப்பட்ட 7%இல் இருந்து சற்று குறைந்துள்ளது.
  • உக்ரைன் -ரஷியா மோதல் இதற்கு காரணமாக, 2008 நிதி நெருக்கடியின் போது இருந்ததைப் போலவே அடுத்த ஆண்டும் பொருளாதாரம் பலவீனமாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் முக்கியப் பிரச்னைகள், சவால்கள் தலை தூக்கும் போது உள்நாட்டுப் பொருளாதாரம் மந்த நிலைக்குத் தள்ளப்படுவது இயற்கை. அடுத்த சில மாதங்களிலோ ஆண்டுகளிலோ  மீண்டு எழுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • பத்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல், வட்டி விகிதத்தை உயர்த்தியது. இது உலக அளவில் பெரும்பாலான நாடுகளின் நிதிச் சந்தைகளைப் புரட்டிப்போட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரியத் தொடங்கியது. ஏழு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பருவமழை சராசரியை விட மிகவும் குறைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து பணவீக்கம் வெகுவாக உயர்வதற்கு வழி வகுத்தது.
  • ஆறு ஆண்டுகளுக்கு முன் "பிரெக்ஸிட்' வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான இறுதி ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். இது உலகளாவிய அளவில் பேசப்பட்டதுடன் நிதிச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 
  • நான்கு ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, இந்தியாவில் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. இதன் தாக்கம் நிதிச் சந்தைகளில் எதிரொலிக்காமல் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் வங்கிகளின் வாராக் கடன், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு விவகாரங்கள் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு சவாலாக அமைந்தன.
  • கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொவைட் ஒட்டு மொத்த உலகத்தையும் செயலிழக்கச் செய்தது. அதை சமாளிக்க அரசுகள் கடும் சவால்களை எதிர்கொண்ட நிலையில், ஓராண்டுக்கு முன் அதே கொவைட் இரண்டாவது அலை தாக்கியது. இதன் தாக்கமும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. 
  • தற்போது உக்ரைன் -ரஷியா மோதல் அனைத்து நாடுகளையும் பாதித்தாலும்கூட, சில தடுமாற்றங்கள் இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற நாடுகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகவில்லை. 
  • இதற்கிடையே, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் அண்மையில் வட்டியை 0.75% உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, உலகளவில் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு தள்ளப்பட்டன.
  • இவை "எதிர்கால ஆபத்து'க்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் தாக்கமாக நிறுவனப் பங்கு விலைகள், ரூபாய் மதிப்பு மற்றும் பத்திர வருவாயை சீர்குலைக்கும். மேலும் அதிகக் கடன் செலவுகளுக்கு வழிவகுக்கும். இது அதிக விலை மற்றும் வட்டி விகிதங்களை எதிர்த்துப் போராடுவதால், குடும்பங்களுக்கும் தொழில்துறைக்கும் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துகிறது.
  • இந்தப் பின்னணியில், தொடர்ந்து 37 மாதங்களுக்கு 4% இலக்கை விட அதிகமாக இருந்த பணவீக்கம் இறுதியாக குளிர்ச்சியடைவதற்கான அறிகுறிகள் இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
  • ஆனால், மேக்ரோ பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, எதிர்பாராத அதிர்ச்சிகள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதற்கில்லை என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா சுட்டிக் காட்டியுள்ளது கவனிக்க வேண்டிய முக்கியச் செய்தியாகும். 
  • எனவே, பணவியல் கொள்கை வகுப்பாளர்கள் நிச்சயமற்ற எதிர்காலப் பாதையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆர்பிஐ கவனத்தில் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
  • இவ்வளவு இடர்ப்பாடுகள் தொடர்ந்திருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன் 15,000 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், தற்போது 62,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை அளவில் நிற்கிறது. உலக அளவில் "ரிஸஷன்' வந்துவிட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவில் அண்மையில் "பிளாக் ஃப்ரைடே ஆன்லைன் சேல்ஸ்' அன்று ஒரு நாள் ஆன்லைன் பொருள்கள் விற்பனை, இந்த ஆண்டு 9 பில்லியன் டாலராக (சுமார் ரூ.72,000 கோடி) உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் மொத்த முதலீடு தற்போது ரூ.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் முதலீடு மொத்தம் ரூ.16.4 லட்சம் கோடியாகும். இது தேசியத் தலைநகர் தில்லியில் ரூ.3.3 லட்சம் கோடியாகவும், குஜராத் மற்றும் கர்நாடகத்தில் ரூ.2.80 லட்சம் கோடியாகவும், தமிழகத்தில் ரூ.2.8 லட்சம் கோடியாகவும் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
  • பொருளாதார மந்தநிலையும், இடர்ப்பாடுகளும் இருந்தாலும், முதலீடுகள் வழக்கம்போல தொடர்வது வரவேற்புக்குரிய அறிகுறி.

நன்றி: தினமணி (28-11-2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்