TNPSC Thervupettagam

நீங்கள் எந்த வகை ‘விக்கிபீடியா’ பயனர்?

November 5 , 2024 67 days 90 0

நீங்கள் எந்த வகை ‘விக்கிபீடியா’ பயனர்?

  • கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவை உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பயனரின் பங்களிப்பால் இயங்கும் விக்கிபீடியாவை இணையவாசிகள் அணுகும் விதத்தையும் அதன் தாக்கத்தையும் அறிந்து கொள்வதற்காகப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, விக்கிபீடியா பயனர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில், விக்கிபீடியாவின் கட்டுரைகளைப் பயனர்கள் வாசிக்கும் விதம் தொடர்பாக ஆய்வு நடத்தியது.
  • இந்த ஆய்வில், விக்கி பயனர்கள் இரண்டு வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. ‘வேட்டைக்காரர்கள்’, ‘முந்திரிக்கொட்டை தன்மை கொண்டவர்கள்’ என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டனர். ‘வேட்டைக்காரர்கள்’ எனில், ஒரு இலக்குடன் விக்கி பக்கங்களை அணுகித் தகவல்களைத் தேடுபவர்கள். மாறாக ‘Busybodies’ எனச் சொல்லப்படும் இரண்டாவது பிரிவினர். ஒரு கருப்பொருளில் இருந்து இன்னொரு கருப்பொருளுக்குத் தாவியபடி விக்கி கட்டுரைகளை அணுகுபவர்கள் என விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளைச் செய்ய இரண்டாவது முறையாக இக்குழு பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்போது, 50 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பயனர்கள் இதில் பங்கேற்றனர்.
  • இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் முதல் இரண்டு பிரிவுகளைத் தவிர மூன்றாவதாக, ‘நடனக்கலைஞர்கள்’ எனும் பிரிவு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. விக்கிபீடியா கட்டுரைகளின் பொதுவான அமைப்பு உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். கட்டுரைகள் அறிமுகம், துணைத்தலைப்புகளுடன் தகவல் இடம்பெற்றிருக்கும். இடையே, தேவையான இடங்களில் இணைப்புகளுக்கான ‘ஹைபர்லிங்க்’ வசதி இருப்பதோடு கட்டுரையின் இறுதியில் ஆதாரங்களுக்கான பட்டியல் இணைக்கப்பட்டிருக்கும். ஆக, ஒரு கட்டுரையில் இருந்து நூல் பிடித்து பல திசைகளில் பயணிக்கலாம்.
  • மூன்று வகையைச் சேர்ந்தவரும் அவரவருக்கான தனித்தன்மை கொண்டிருப்பதோடு, ஒவ்வொருவரின் ஆர்வமும், அதற்கானத் தேடலும் மாறுபடுகிறது. உதாரணமாக, ‘வேட்டைக்காரர்கள்’ - இலக்கு சார்ந்த தேடலுடன், பிரச்சினைக்குத் தீர்வு காணும் தகவல்களை நாடுவர். இரண்டாம் பிரிவினர் - புதுமையானத் தகவல்களைத் தேடிச் செல்கின்றனர். மூன்றாம் பிரிவினர், ஒரு கருப்பொருளில் இருந்து எங்கோ இருக்கும் இன்னொரு கருப்பொருளுக்குத் தாவியபடி தகவல்களைத் தேடலாம். விக்கிபீடியாவைப் பயன்படுத்தும் இந்த வகைப் பழக்கம் நாடுகளிடையே வேறுபடுவதையும், கலாச்சார தன்மையின் தாக்கம் கொண்டிருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பாலின சமத்துவமின்மை, கல்வி வழங்குவதில் ஏற்றத்தாழ்வு மிக்க நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் எனில், பெரும்பாலும் இலக்கு மீதான கவனத்துடன் கட்டுரைகளை அணுகுகின்றனர். அதே நேரத்தில் ஏற்றத்தாழ்வு அதிகம் இல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் சற்று சுதந்திர உணர்வோடு பலவகையான கட்டுரைகளைத் தேடிச்செல்கின்றனர். இந்த வேறுபாட்டுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது தொடர்பான சில முக்கிய உள்ளுணர்வுகளைப் பெற முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக விக்கிபீடியாவை நாடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பணக்கார நாடுகளைச் சேர்ந்த பயனாளிகள் பொழுதுபோக்குக்காகப் பிரதானமாக விக்கிபீடியாவை அணுகலாம்.
  • டேனி பெஸ்ட் (Dani Bassett) உள்ளிட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் விரிவான அறிக்கை ‘சயின்ஸ் அட்வாஸ்’ ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்