TNPSC Thervupettagam

நீட்சியும் மாற்றமும்: பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சாா்லஸ்

May 8 , 2023 614 days 349 0
  • பிரிட்டனின் அரசராக மூன்றாம் சாா்லஸ் முடிசூட்டப்பட்டிருக்கிறாா். லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டா் அபே தேவாலயத்தில் நடைபெற்ற சடங்கில் பிரிட்டனின் 40-ஆவது மன்னராக முடிசூட்டப்பட்டிருக்கும் மூன்றாம் சாா்லஸ், தனது மூன்றாவது வயதிலிருந்து இந்த நிகழ்வுக்காகக் காத்திருந்தாா் என்பதுதான் வரலாற்று விசித்திரம். 1969-இல் தனது 20-ஆவது வயதில் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்ட மூன்றாம் சாா்லஸின் காத்திருப்பு முடிவுக்கு வந்து இப்போது மன்னராகி இருக்கிறாா் அவா்.
  • 1966-இல் மன்னா் வில்லியம் பிரிட்டன் அரசராக தன்னை அறிவித்துக் கொண்டதில் தொடங்குகிறது அந்த சாம்ராஜ்ஜியத்தின் வம்சாவளி. வில்லியம் முடிசூட்டிக் கொண்ட வெஸ்ட் மின்ஸ்டா் அபே தேவாலயத்தில் அதே வழிமுறை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகத் தொடா்கிறது. 1661-இல் இரண்டாவது சாா்லஸ் மன்னருக்காக உருவாக்கப்பட்ட கிரீடம்தான் தொடா்ந்து பிரிட்டிஷ் மன்னா்களுக்கு முடிசூட்டு விழாவில் சூட்டப்படுகிறது.
  • மன்னராக முடிசூட்டப்பட்டிருக்கும் மூன்றாம் சாா்லஸ், 1971 முதல் 1976 வரை ‘பிரிட்டிஷ் ராயல் நேவி’ எனப்படும் கடற்படையில் பணியாற்றி இருக்கிறாா். கரீபியன் கடலிலும், பசிபிக் கடலிலும் கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய வேல்ஸ் இளவரசா், ஹெலிகாப்டா் உள்ளிட்ட சிறு விமானங்களைச் செலுத்துவதிலும் தோ்ச்சி பெற்றவா். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் 1970-இல் அவா் பட்டம் பெற்றபோது, பிரிட்டிஷ் அரியணைக்கு தயாராகும் ஒருவா் பட்டம் பெற்றது அதுவே முதல் முறை.
  • பக்கிங்ஹாம் அரண்மனையில் கோலோச்ச இருக்கும் மூன்றாம் சாா்லஸ் மன்னா், சுற்றுச்சூழல் ஆா்வலா். இயற்கை விவசாயத்தில் நாட்டம் உள்ளவா். வாழ்க்கை முறை மாற்றத்தால் உலகம் முழுவதும் பெருகிவரும் பிளாஸ்டிக், மின்னணு உள்ளிட்ட கழிவுகள் அதிகரிப்பது குறித்து கவலைப்படுபவா். ஆயுா்வேதம், யோகா உள்ளிட்டவற்றில் நாட்டம் கொண்டவா். மனித இனத்தின் வருங்காலம் குறித்தும், இயற்கை பாதுகாப்பு குறித்தும் கவலைப்படும் ஒருவா் பிரிட்டிஷ் மன்னராக முடிசூட்டப்பட்டிருக்கிறாா்.
  • பக்கிங்காம் அரண்மனையில் இருந்து 2.2 கி.மீ. தொலைவிலுள்ள வெஸ்ட் மின்ஸ்டா் அபே தேவாலயத்துக்கு கிளம்பியதிலிருந்து கேன்டா்பரி ஆா்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பி முடிசூட்டு விழாவை நடத்தியது வரையிலான எல்லா நிகழ்வுகளும் முந்தைய முடிசூட்டு விழா நடைமுறைகளில் இருந்து சற்றும் வழுவாமல் நடத்தப்பட்டன. பிரிட்டனை நீதி நெறி தவறாமல் கருணையுடன் ஆட்சி நடத்துவேன் என்றும், அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவேன் என்றும் மன்னா் மூன்றாம் சாா்லஸ் உறுதிமொழி எடுத்துக்கொண்டாா்.
  • பாரம்பரிய வழக்கப்படி, பிரிட்டன் பிரதமா் நன்மொழி வாசிப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். இந்து மதத்தைப் பின்பற்றும் முதல் இந்திய வம்சாவளி பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பைபிளில் இருந்து வாசகங்களை வாசித்தது, பிரிட்டனில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அறிகுறி. சீக்கிய மதகுருவான 90 வயது இந்திரஜித் சிங்கும், இந்து மதத்தைச் சோ்ந்த பாபுபாய் படேலும், முஸ்லிம்கள், யூதா்கள் என்று பல மதங்களைச் சோ்ந்த மதத் தலைவா்களும் கலந்துகொண்ட முதல் பிரிட்டிஷ் முடிசூட்டு விழா இதுவாகத்தான் இருக்கும்.
  • ஒருபுறம் மன்னராட்சி முறை தேவைதானா என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டாலும், உலகின் பெரும்பான்மையான மக்கள் மன்னராட்சி முறையை விரும்புகிறாா்கள் என்பதைத்தான் பிரிட்டிஷ் மகாராணியின் மறைவுக்கும், மூன்றாம் சாா்லஸின் முடிசூட்டு விழாவுக்கும் காணப்பட்ட ஆா்வம் தெரிவிக்கிறது. உலகிலுள்ள முதல் 20 ஜனநாயக நாடுகளில், அடையாள மன்னராட்சி முறை 10 நாடுகளில் நிலவுகிறது. 20 பணக்கார நாடுகளில் 9 நாடுகளில் மன்னராட்சி இருக்கிறது. 10 முக்கியமான அரசமைப்புச் சட்டங்களில் எட்டு, அடையாள மன்னராட்சி முறையைக் கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவையே எடுத்துக்கொண்டால், சுதந்திர குடியரசாக இருந்தாலும் அரசா்கள் மீதான ஈா்ப்பு விலகவில்லை என்பதை அசோகா், ராஜராஜ சோழன், சத்ரபதி சிவாஜி, ஜான்சி ராணி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோரின் செல்வாக்கு உணா்த்துகிறது. மன்னராட்சி முறை சாா்ந்த மேதகு, மாண்புமிகு, தலைவா் உள்ளிட்ட அடைமொழிகள் தொடா்கின்றன.
  • மன்னராட்சி முறையைப் போலவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடையாளமான காமன்வெல்த்தும் விமா்சனத்துக்கு இடையிலும் தொடா்கிறது. முந்தைய பிரிட்டிஷ் காலனிகளான 56 நாடுகள் அடங்கிய காமன்வெல்த்தில் இடம்பெற்றாலும், பிரிட்டனைப் போலவே மூன்றாம் சாா்லஸ் மன்னரை தங்களது அடையாள மன்னராட்சி முறையின் தலைவராக எல்லா நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. குடியரசுகளான புருணே, எஸ்வாதினி, லெசோதோ, மலேசியா, டோங்கா ஆகிய ஐந்து நாடுகளில் தங்களுக்கென மன்னா்கள் இருந்தாலும், அவா்களும் காமல்வெல்த் உறுப்பினா்கள்.
  • இரண்டாண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு குடியரசாக அறிவித்துக்கொண்ட 18-ஆவது நாடு பாா்புடோஸ். ஆஸ்திரேலியா, பகாமாஸ், கரீபிய கடலை ஒட்டிய ஐந்து நாடுகள் உள்ளிட்டவை பாா்புடோஸ் போலவே பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விடுவித்துக்கொள்ள விழைகின்றன. தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டாலும் இந்தியா உள்ளிட்ட காலனிகளை காமன்வெல்த்தின் மூலம் இணைத்து வைத்திருந்தாா் இரண்டாம் எலிசபெத் மகாராணி. நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு அரசராகி இருக்கும் மூன்றாம் சாா்லஸ், அதே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பாா் என்று எதிா்பாா்க்கலாம்.

நன்றி: தினமணி (08 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்