- நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி அடங்குவதற்குள் கருணை மதிப்பெண் வழங்குவதிலும் முரண்பாடுகள் இருப்பதாக இன்னொரு சர்ச்சை இறக்கை கட்டிப் பறக்கிறது. மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமையை வலியுறுத்தி சுமார் 2,000 மாணவர்கள் கையொப்பமிட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில் பிகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாருடன், கருணை மதிப்பெண் வழங்குவதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
- மேலும், இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதே சந்தேகத்துக்குரியதாக அமைந்திருக்கிறது. ஆகவேதான் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தங்களின் எதிர்காலம் குறித்தான விடைகள் தெரியாமல் மாணவர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை ஆகியவை இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்திருக்கின்றன.
- நீட் தேர்வில் கருணை அடிப்படையில் பலர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் 650 மதிப்பெண் பெற்றால்கூட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களில் 67 பேர் முழு மதிப்பெண் (720-க்கு 720) பெற்றுள்ளனர். 2021-இல் இதே போன்று 3 பேரும் 2022-இல் ஒருவரும் 2023-இல் இரண்டு பேரும் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருப்பது நீட் தேர்வின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
- இதில், ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்த 7 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த 7 பேரின் வரிசை எண்களும் தொடர்ச்சியாக உள்ளது.
- நீட் தேர்வுக்கான மொத்த வினாக்கள் 180. ஒவ்வொரு சரியான வினாவுக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதில்களுக்கு 5 மதிப்பெண் குறைக்கப்படுகிறது. இதன்படி 720 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகி உள்ள தேர்வுப் பட்டியலில் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் வரை வழங்கப்பட்டுள்ளன.
- அதன் அடிப்படையில், ஒரு கேள்விக்குப் பதில் அளிக்காமல் இருந்தால் 716 மதிப்பெண்கள் வழங்கி இருக்க வேண்டும்; தவறான பதில் அளித்திருந்தால் 715 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட்டன என்று சந்தேகக் கேள்விகள் எழுகின்றன. இதனால்தான் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்திருப்பதாக கல்வியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இதற்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்குவதாக விளக்கம் அளிக்கின்றனர்.
- கருணை மதிப்பெண் வழங்கும் முறை எப்போது தொடங்கப்பட்டது, யாருக்கெல்லாம் இவ்வாறெல்லாம் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியே வழங்கப்படுவதாக கூறுகின்றனர்.
- நேரப் பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிடவில்லை. நீட் தேர்வு எழுதிய 23.33 லட்சம் பேரில் எத்தனை பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என்று கூறாமல் இருப்பது சந்தேகத்துக்கு இடமளிக்கக் கூடிய ஒன்றாகும்.
- தேர்வு முடிவுக்கு முன்பே ஓஎம்ஆர் ஷீட் மற்றும் வினாக்களுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவு வெளியிட்டபோது ஓஎம்ஆர் ஷீட்டுடன் ஒப்பிடும்போது மாறுபட்ட மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக பல புகார்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வில் எந்தக் குளறுபடியும் இல்லை, நேர்மையான முறையில் நடத்தப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
- முன்னதாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுவது குறித்து தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்றும், நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
- இந்த நிலையில்தான் 2024-2025 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில், 13 மொழிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை 10,29,154 ஆண்கள், 13,76,831 பெண்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 24,06,079 பேர் எழுத விண்ணப்பித்தனர்; இது கடந்த ஆண்டைவிட 16.85% அதிகம்.
- நீட் தேர்வில் 5,47,036 ஆண்கள், 7,69,222 பெண்கள், 10 திருநங்கைகள் என மொத்தம் 13,16,262 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 56.4% பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
- நீட் தேர்வை அதிகபட்சமாக ஆங்கில மொழியில் 18,92,355 பேர் எழுதினர்; ஹிந்தியில் 3,57,908 பேர் எழுதினர்; தமிழில் எழுத 36 ஆயிரத்து 333 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். தமிழில் தேர்வு பெறும் தேர்வர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
- இவ்வாறான கடும் போட்டிகளுக்கு இடையிலான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் மாணவர்களின் ஆயிரம் கனவுகளை வினாத்தாள் கசிவதன் மூலம் அரை விநாடியில் அழித்துவிட முயற்சி செய்வது வெட்கக்கேடான ஒன்றாகும். ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதும், வானம் நோக்கிப் பறக்க ஆசைப்படும் பறவைகளின் சிறகுகளை முறிப்பதும் ஒன்றுதான்.
- ஆகவேதான், நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக மண்ணில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. நீட் தேர்வு குறித்தான சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கிற நிலையில் நீட் தேர்வு வேண்டாம் என்றும் அதற்கான போராட்டங்களை மக்கள் நடத்தினாலும் நீட் தேர்வு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கான பயிற்சி வகுப்புகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இதில் பாதிக்கப்படுவது ஏழை மாணவர்கள்தான்.
- நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் சோதனை என்ற பெயரில் கடுமையாக நடந்து கொள்வதால் அவர்களுக்கு பெரும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதே மனநிலையுடன் தேர்வு எழுதச் செல்வதும், பதற்றத்துடன் தேர்வு எழுதுகிற அணுகுமுறையும் வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.
- தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடுவது என்று தொடங்கிய இந்த நீட் தேர்வின் போக்கு இப்போது வெளிப்படைத்தன்மை இல்லாத கருணை மதிப்பெண்களும் வினாத்தாள் கசிகின்ற நிலை வரை வந்து முடிந்திருக்கிறது. இது எந்த நிலைக்குச் செல்லும் என்பதை ஊகித்துப் பார்க்க முடியவில்லை.
- ஏனெனில், பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகள் மருத்துவராக வேண்டும் என்ற கனவை எல்கேஜி நிலையிலேயே சுமத்தி விடுகின்றனர். இதனால் பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற முடியாத தவிப்பும் பதற்றமும் தற்சார்பு நிலையின்மையும் மனவேதனையும் கலந்து மாணவர்கள் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதன் நீட்சிதான் தற்கொலையில் போய் முடிகிறது.
- எந்த வகையிலும் சாத்தியமற்ற முறையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இரைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாகும். இதனால்தான் மீண்டும் மீண்டும் கேள்வி எழுகிறது. நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அதற்கான நோக்கங்கள் முழுமை அடையவில்லை என்றும் அதற்கான எண்ணங்கள் நிறைவடையவில்லை என்றும் வலுவான கருத்து வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.
- மாணவர்களின் சந்தேகத்திற்கு தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம் போதிய திருப்தி அளிக்காத ஒன்றாகும். நீட் தேர்வில் நேர இழப்பு ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் புகார் வந்ததாகவும், அதனால் சிலர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், அத்தகைய மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவிக்கிறது.
- அதேபோல, ஒரு வினாவிற்கு இரு சரியான விடைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த இரு விடைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என்று தெரிவித்திருப்பதும் ஏற்புடைய கருத்து அல்ல.
- கருணை மதிப்பெண் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது என்கிற விளக்கத்தை தேர்வு முகமை தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நேர இழப்புக்கான கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கும், தேர்வு முகமைக்கு மனு அளித்தவர்களுக்கும் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்குவது என்பது ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பதைப் போலத்தான். சமநிலை நோக்குகிற சமூக நீதிக்கு எதிரான செயல் அல்லவா இது?
- இதனால் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண் (கட் ஆஃப் ) 570-க்கு குறைவாக பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
- தேசிய தேர்வு முகமை செய்த தவறுக்காக அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? இவற்றை மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது அழகல்ல.
நன்றி: தினமணி (13 – 06 – 2024)