TNPSC Thervupettagam

நீதிபதிகள் நியமனத்தில் அதிகாரம் யாருக்கு

February 15 , 2023 544 days 356 0
  • வலிமையான ஜனநாயகத்தின் அடையாளங்களாகக் கருதப்படுபவை, சுதந்திரமான நீதித் துறை, நம்பகமான ஊடகங்கள், தனித்து இயங்கும் தேர்தல் ஆணையம், அசைக்க முடியாத நாடாளுமன்றம், அறிவுப்பூர்வமான நிர்வாக முறை ஆகியவை. மக்களின் குடியுரிமையையும் அடிப்படை சுதந்திரத்தையும் காக்க உறுதி பூண்டவை இந்த அமைப்புகள்.
  • அண்மையில் குடியரசு துணைத் தலைவரும், மத்திய சட்ட அமைச்சரும் நீதித்துறை மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதை இங்கு கவனிக்க வேண்டும். அதிலும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், நீதிபதிகள் நியமனத்தில் நாடாளுமன்றத்தின் பங்களிப்பு இல்லாதிருப்பதைக் கடுமையாக சாடி இருக்கிறார். "அரசியலமைப்பைத் திருத்தும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யாரேனும் கேள்வி எழுப்பினால், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்வது கடினமாகப் போய்விடும்' என்றார் அவர்.
  • அவரைத் தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சரும் நீதிபதிகள் நியமனத்தில் உள்ள முரண்களைப் பேசி வருகிறார். உச்சநீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளை கொலீஜியம் முறையில் நீதித்துறையே நியமனம் செய்துகொள்வதை அவர் கடுமையாகத் தாக்கி வருகிறார்.
  • உச்சநீதிமன்றமும் கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட கொலீஜியம் பரிந்துரைகளை வெளியிட்டு, தனது நீதிபதி நியமனப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தியது.
  • குறிப்பாக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியம் பரிந்துரைத்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர் செளரப் கிர்பாலை மத்திய அரசு நிராகரித்ததற்கு, அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதே காரணம் என்று நீதித்துறை குற்றம் சாட்டியது. அவரது வாழ்க்கைத் துணையாக ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் இருப்பதால், வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டவரை உயர் பதவியில் நியமிக்கக் கூடாது என்று மத்திய வெளிநாட்டு உளவு அமைப்பான "ரா' அளித்த பரிந்துரையையும் வெளியிட்டது உச்சநீதிமன்ற கொலீஜியம்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் 124 (2) பிரிவு, நீதிபதிகள் நியமனம் குறித்த நடைமுறைகளை வரையறுத்துள்ளது. அதில் "உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தவிர்த்து, பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அரசு ஆலோசிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே 1950 முதல் 1993 வரை, தலைமை நீதிபதியுடன் ஆலோசிக்கப்பட்டு, மத்திய அரசால் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
  • ஆயினும் நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதியின் ஆலோசனை தேவை என்ற கருத்து, தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக, 1981-இல் அரசுக்கு எதிராக எஸ்பி. குப்தா தொடுத்த வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு 5- 2 என்ற பெரும்பான்மையுடன் அளித்த தீர்ப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இவ்வழக்கு "முதல் நீதிபதிகள் வழக்கு' என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த வழக்கில்தான் முதல் முதலாக "ஆலோசனை' என்பதும், "ஒப்புதல்' என்பதும் ஒன்றல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வழங்கும் ஆலோசனையை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் உரிமை அரசுக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து மிகவும் அரிதான நிகழ்வுகளில் மட்டுமே நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், அப்படி நிராகரிக்கப்பட்டால் அதை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் முதல் நீதிபதிகள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1993-இல் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் அந்தத் தீர்ப்புக்கு எதிராக வழக்குத் தொடுத்தது. "இரண்டாவது நீதிபதிகள் வழக்கு' என்று அழைக்கப்படும் அந்த வழக்கில், முதல் நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு நிராகரிக்கப்பட்டது. அரசியல் சாசனப் பிரிவுகள் 124 மற்றும் 217-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் "ஆலோசனை' என்கின்ற வார்த்தை "ஒப்புதல்' என்றுதான் கருதப்பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனைதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • இரண்டாவது நீதிபதிகள் வழக்கில்தான் கொலீஜியம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதியின் தனிப்பட்ட ஆலோசனை அல்லது ஒப்புதல் மட்டும் போதுமானது அல்ல என்றும், இந்த முடிவு ஒருங்கிணைந்து எடுக்கப்படும் நீதித்துறை முடிவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்தின் கலந்தாலோசனை அடிப்படையில் நீதிபதிகளின் நியமனங்களும், நீதிபதி பணியிட மாற்றங்களும் தீர்மானிக்கப்படும் என்பதை இரண்டாவது நீதிபதிகள் வழக்கு உருவாக்கியது.
  • 1998-இல் "கொலீஜியம்' முறை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் இருந்து கேட்கப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில், நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டது. "மூன்றாவது நீதிபதிகள் வழக்கு' என்று அழைக்கப்படும் அந்த வழக்கின் அமர்வில், 9 நீதிபதிகள் இருந்தனர்.
  • அரசியல் சாசனப் பிரிவு 124 மற்றும் 217-இல் காணப்படும் "ஆலோசனை' என்பது கொலீஜியத்தின் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவாக இருக்குமே தவிர, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தாக மட்டுமே இருக்காது என்று அந்த அமர்வு தெளிவுபடுத்தியது. உச்சநீதிமன்ற "கொலீஜியம்' என்பது, தலைமை நீதிபதியுடன் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கியதாகவும், உயர்நீதிமன்ற "கொலீஜியம்' தலைமை நீதிபதியுடன் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கியதாகவும் இருக்கும் என்பதையும் அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியது.
  • 2010-இல் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில், நீதித்துறையே நீதிபதிகளை நியமனம் செய்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் நீதித்துறை தரநிலைகள் மற்றும் பொறுப்புணர்வு மசோதா (ஜேஎஸ்ஏபி- 2010) நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆயினும் கடைசி நேரத்தில் அந்த மசோதாவை அரசு கைவிட்டது.
  • எனவே நீதிபதிகள் நியமனத்தில் முந்தைய நடைமுறையே 2014 ஆகஸ்டு வரை நீடித்தது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், நீதித்துறையில் சீர்திருத்தம் செய்ய பாஜக முயன்றது. அப்போதைய சட்ட அமைச்சர், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்கும் வகையில் (என்ஜேஏசி- 2014) 121வது அரசியல் சாசனத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்கப்பட்டு இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.
  • அதனை ஆதரித்து 16 மாநில சட்டப்பேரவைகளும் தீர்மானங்களை நிறைவேற்றின. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாகவும் இது மாறியது. இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் "நான்காவது நீதிபதிகள் வழக்கு' நடைபெற்று, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை நிராகரித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
  • 2015 அக்டோபரில் நடைபெற்ற அவ்வழக்கில், ஐந்து நீதிபதிகள் அமர்வில் 4-1 என்ற பெரும்பான்மையுடன் அரசின் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ரத்து செய்யப்பட்டது. நீதிபதிகள் நியமனத்தில் அரசைச் சார்ந்திருப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று அதற்குக் காரணமும் கூறப்பட்டது. இத்தீர்ப்பு ஆயிரம் பக்கங்களுக்கு நீண்டது.
  • 1981 முதல் 2015 வரையிலான மேற்கண்ட நிகழ்வுகளையும் நான்காவது நீதிபதிகள் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் முழுப் பொருண்மையையும் தற்போதைய மத்திய சட்ட அமைச்சர் அறிந்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஏனெனில் கொலீஜியம் முறையில் நிர்வாகத் தரப்பின் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
  • நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தப்படி (எம்ஓபி) கொலீஜியத்தை மறுசீரமைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருக்கிரார். இந்தக் கடிதம் தற்போது நிலுவையில் இருக்கிறது.
  • அப்படியானால் நீதிபதிகளை நியமனம் செய்வது எப்படி? நீதித்துறை சுதந்திரம் பற்றி என்னதான் பேசினாலும், நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்வதை ஏற்பது சரியானதா? சமச்சீரான நடைமுறையை வலுப்படுத்தும் அரசியல் சாசன நெறிமுறைகளை மீறுவதான இந்த நியமன முறை தொடரலாமா?
  • ஜனநாயகத்தில் மக்களால் தேர்வாகும் பிரதிநிதிகளின்அவையே இறையாண்மை மிக்கது. இங்கு முரண் என்னவென்றால், நீதிபதிகள் நியமனத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. நீதிபதி ஒருவரை நீக்க வேண்டுமானாலும் கூட, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தில் நீதிபதி மீது குற்றச்சாட்டை முன்வைத்து பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அது மட்டுமல்ல, நீதிபதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதையும் அரசியல் சாசனம் தடை செய்திருக்கிறது.
  • தற்போதைய நிலையில் இந்த விவகாரத்துக்கு நேர்த்தியான தீர்வு என்பது, கொலீஜியம் அளிக்கும் நீதிபதி நியமனப் பரிந்துரைகளைப் பரிசீலித்து உறுதிப்படுத்துவதில் நாடாளுமன்றத்துக்கு வாய்ப்பளிப்பதே.
  • இதற்காக நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களால் நீதித்துறை குழு அமைக்கப்பட வேண்டும். அதற்கு உகந்த வகையில், போதிய அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இக்குழுவில் மாநில சட்டப்பேரவைகளின் தலைவர்களும், மக்களவைத் தலைவரும், இரு அவைகளிலிருந்தும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளின் இரு பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். இந்தக் குழுவின் தலைவர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் வாக்களித்துத் தேர்வு செய்யப்பட வேண்டும். இது அனைவரும் ஏற்கத்தக்க இடைக்கால ஏற்பாடாக இருக்கக் கூடும்.
  • இக்குழு கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்து நீதிபதி நியமனங்களை அங்கீகரிக்க வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் நேரிட்டால் மட்டுமே குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்.
  • ஐ.மு. கூட்டணி அரசால் கைவிடப்பட்ட ஜேஎஸ்ஏபி -2010 மசோதாவில் உள்ள சில முக்கிய அம்சங்களை இந்த நீதித்துறைக் குழு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக, நீதிபதிகள் நியமனத்தில் நிர்வாகத்தின் பங்களிப்பும் நாடாளுமன்றத்தின் உரிமையும் நிலைநாட்டப்படும்; நீதிபதிகள் நியமனத்தில் நம்பகத்தன்மையும் உருவாகும்.

நன்றி: தினமணி (15 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்