- என்னுடைய பெயர் கான், ஆனால் நான் பயங்கரவாதி இல்லை!
- சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவியேற்கத் தகுதியுள்ளவர்கள் பட்டியலில் இருந்து தன்னுடைய பெயர் நீக்கப்பட்டுவிட்டதை அறிந்த மதுரை நகர மூத்த வழக்கறிஞர்தான், இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டார். அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர், கானுடைய பெயரை நியமனத்துக்குப் பரிந்துரைத்திருந்தார்; உளவுத் துறையிடம் இருந்து கான் தொடர்பாக வந்திருந்த அறிக்கையைக் காட்டிய ஒன்றிய அரசு, எதிர்க் கருத்துகளை முன்வைத்தது. இதனால் பரிந்துரையிலிருந்து அவருடைய பெயரை, உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு (கொலீஜியம்) நீக்கிவிட்டது, அதையடுத்தே அந்த மூத்த வழக்கறிஞர் அப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
- நீதிபதியாக நியமிக்கலாம் என்று உயர் நீதிமன்றத் தேர்வுக் குழு (கொலீஜியம்) சில பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழுவானது தங்களுடைய குழுவில் இருக்கும் அம்மாநிலத்தைச் சேர்ந்த சக நீதிபதியிடம் அவர் பற்றி ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஒன்றிய அரசு உளவுத் துறையிடம் இருந்து பெறும் அறிக்கையைப் பரிசீலிக்கும். எதிர்மறையாகவோ, ஐயத்தை ஏற்படுத்தும் வகையிலோ ஏதேனும் இருந்தால் அதை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழுவின் கவனத்துக்கு இது கொண்டுசெல்லப்படும்.
- வழக்கறிஞரான கான் பல்வேறு மதறஸாக்களுக்கும் மசூதிக் குழுக்களுக்கும் தன்னுடைய வருவாயிலிருந்து ஜகாத் (நன்கொடை) அளிப்பதாகவும், இதன் பொருட்டு அவர் ஒரு மதத் தீவிரவாதியாக இருக்கலாம் என்றும், அவருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்றும் அறிக்கை அளித்திருந்தார் உளவுத் துறை இன்ஸ்பெக்டர். கூடவே, வாக்காளர் பட்டியலில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களையும் அச்சிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுநல வழக்கையும் அந்த மூத்த வழக்கறிஞர் தன் பெயரிலேயே தொடுத்திருக்கிறார்’ என்றும் அறிக்கையில் இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டிருந்தார்.
- இப்படி ஒரு மனு உயர் நீதிமன்றம் வந்தது; அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது உண்மை. ஆனால், அந்த மனுவைத் தாக்கல் செய்த வழக்கறிஞரின் பெயரும், உயர் நீதிமன்றம் நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்தவரின் பெயரும் ஒன்றுபோல இருந்ததாலேயே உளவுத் துறை இன்ஸ்பெக்டர் இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பது இன்னோர் உண்மை. விளைவு உளவுத் துறை இன்ஸ்பெக்டரின் துல்லியமற்ற அறிக்கையால், பரிந்துரைக்கப்பட்ட பிறகும் ஒரு மூத்த வழக்கறிஞருக்கு நீதிபதி பதவி கிடைக்காமல் போய்விட்டது.
பார்வையில் படாதது
- நீதிபதிகள் நியமனம் தொடர்பான மூன்றாவது வழக்கில் (1998), தலைமை நீதிபதி தலைமையில் இதர மூத்த நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக்குழு (கொலீஜியம்) மூலம் தகுதியுள்ளவர்களை அடையாளம் காண்பதும் அது தொடர்பாக ஒன்றிய அரசுடன் ஆலோசனை கலப்பதும் நடைமுறையானது. அவசியப்படும்போது உளவுத் துறை மூலம் தகவல்கள் திரட்டப்படவும் வழி செய்யப்பட்டது.
- நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் தொடர்பாக நீதித் துறையிடம் உள்ள குறிப்புகள் தவிர வேறு தகவல்கள் இல்லையென்பதால், அவர்களைப் பற்றிய விவரங்களுக்காக உளவுத் துறையின் அறிக்கையைப் பரிசீலிக்கும் நடைமுறை ஏற்கப்பட்டது. இந்த உதாரணத்தில், உயர் நீதிமன்றக் குழு ஒருமனதாகப் பரிந்துரை செய்திருந்தும், தவறான உளவுத் துறை அறிக்கை காரணமாக அந்த வாய்ப்பை மூத்த வழக்கறிஞர் இழந்துவிட்டார். ஆதாரமற்ற புகார்கள், வதந்தி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுள்ளவர்களுக்கு இப்படி வாய்ப்புகள் கிடைக்காமல் போவது அது முதல் முறையும் அல்ல.
யாரெல்லாம் பலிகடாக்கள்?
- சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்துக்கொண்டிருந்த விஜயா கமலேஷ் தஹில்ரமானி, 2019 ஆகஸ்டில் திடீரென்று மேகாலய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடம் மாற்றப்பட்டார். அது ஏன் என்று யாருக்கும் அப்போது தெரியவில்லை. ‘டிராபிக்’ ராமஸ்வாமி என்ற சமூக சேவகரிடமிருந்து வந்த மனு அடிப்படையில்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பின்னாளில், அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த ரஞ்சன் கோகோய் தனது தன்வரலாற்று நூலில் எழுதியதில் இருந்துதான் அறிந்துகொள்ள முடிந்தது.
- அந்த இடமாறுதலை ஏற்க மறுத்த தஹில்ரமானி, தலைமை நீதிபதி பதவியிலிருந்தே விலகிவிட்டார். இதற்கிடையே ராமஸ்வாமியின் புகார் மனுவை சிபிஐ விசாரணைக்கு நீதித் துறை அனுப்பிவைத்தது. அந்தப் புகாருக்கு ஆதாரம் ஏதுமில்லை என்று விசாரணைக்குப் பிறகு சிபிஐ அறிக்கை தந்தது. ஆனால், தவறான அந்தப் புகாரின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பலிகடாவானது யார்?
மூடுமந்திரமான தேர்வு முறை
- உளவுத் துறை தரும் தகவல்கள் உண்மையானவையா, அவற்றின் பேரில் நடவடிக்கை எடுப்பது சரியா என்பதை மூத்த நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழுதான் தீர்மானிக்க வேண்டும். நிராகரிப்பது ஏன் என்று அவர்கள்தான் காரணம் கூற வேண்டும். தேர்வுக் குழுவின் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தின் இணையத்தில் வெளியிடும் வழக்கத்தை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தொடக்கிவைத்தார். மற்றொரு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அதை நிறுத்திவிட்டார். நியமனம் தொடர்பான தகவல்கள் மட்டுமே இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன.
- தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்ஜேஏசி) வழக்கில் நீதிபதி ஜே.சலமேஸ்வர் மாறுபட்ட தனது தீர்ப்பில் கூறியது சுவாரஸ்யமானது: “தேர்வுக் குழு (கொலீஜியம்) முறையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறத் தொடங்கிய கடந்த 20 ஆண்டுகளில், உயர் நீதிமன்றங்களின் தேர்வுக் குழுக்கள் பரிந்துரைத்த பல பெயர்கள் உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன; உயர் நீதிமன்றத் தேர்வுக் குழு செய்த பரிந்துரையில் சிலதை நிராகரித்துவிட்டு, பிறகு அதே வேகத்தில் மீண்டும் பரிசீலித்து, அதே பெயர்களை ஏற்ற நிகழ்வுகளும் நடந்துள்ளன. இப்படித் திடீர் மனமாற்றம் ஏற்படக் காரணம் என்னவாக இருக்கும் என்று பல்வேறு ஊகங்களுக்கும் அவை வழிவகுத்தன. சில நிகழ்வுகளில் இதை நியாயப்படுத்தலாம், பலதில் அப்படி நியாயப்படுத்தவும் முடியாது. இப்படிப்பட்ட விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு யாருமே பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை!”
வெளிப்படைத்தன்மையில் தேர்வுக் குழுவுக்குள்ள உரிமை
- தீர விசாரிக்கப்படாத – அல்லது ஆதாரமற்ற உளவுத் துறை அறிக்கைகளால் நீதிபதி ஆகக்கூடியவர்களின் பெயர்கள் நிராகரிக்கப்படும் என்றால் – அப்படிப் பெறப்படும் அறிக்கைகளைச் சரி பார்க்கத் தங்களிடம் அமைப்போ – வசதியோ தேர்வுக் குழுவுக்கு இல்லையென்றால், மேலும் பலர் இப்படி நிராகரிக்கப்படவும், அவர்களுடைய தரப்பு கேட்கப்படாமலேயே போகவும்தான் வாய்ப்புகள் உள்ளன. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளாகத் தகுதியுள்ளவர்களுக்கு இந்த நடைமுறை அநீதியானதாகவே தொடரும்.
- சோமசேகர் சுந்தரேசன், ஆர்.ஜான் சத்யன், சௌரவ் கிர்பால் ஆகியோரை அரசியல் தொடர்பு காரணத்துக்காக நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது என்று ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்தபோது, அதை நிராகரித்த உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு அதை இணையதளத்திலும் வெளியிட்டு அரிய சேவையை ஆற்றியது.
- பொதுவான சேவைக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறையின் அடிப்படை கொள்கையையும் பின்வருமாறு வலியுறுத்தியது: “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(அ) கூறின்படி இந்தியக் குடிமக்கள் அனைவருக்குமே பேச்சுரிமையும் கருத்து தெரிவிக்கும் உரிமையும் இருக்கிறது. நேர்மையும் தகுதியும் திறமையும் உள்ளவரை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கும்போது, அரசியல் தொடர்பாக அவர் என்ன கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்பதற்காகவே அவர் தகுதி இழந்துவிட மாட்டார்!”
- நீதிபதி சின்னப்ப ரெட்டியின் கருத்தும் இதையே எதிரொலிக்கிறது: “அரசியல் என்பது குற்றச்செயல் அல்ல; ஆளுங்கட்சியின் அரசியல் கருத்துகளில் விசுவாசமாக இருக்கிறவர்களை மட்டும்தான் பொதுப் பணியில் நியமிக்க வேண்டுமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மெக்கார்த்தியிஸத்துக்கு இடமே இல்லை!”
- (அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக ஜோசப் மெக்கார்த்தி 1950-54 பதவி வகித்தார்; அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் கம்யூனிஸ சிந்தனை உள்ளவர்களுக்கும் அமெரிக்க அரசில் எந்தப் பதவியும் கொடுக்கப்படக் கூடாது என்று பிரச்சாரம் செய்தார். அதனால், கம்யூனிஸ்ட்டுகளாக அல்லாதவர்கள் உள்பட பலர், சந்தேகத்தின் பேரிலேயே பதவிகளை இழந்தனர்.)
நன்றி: அருஞ்சொல் (19 – 02 – 2023)