- அரசு நிர்வாகத்தை நடத்துவது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளா்களா அல்லது நீதிபதிகளா என்கிற ஐயப்பாடு எழுகிறது.
- அதை நீதித்துறையின் வரம்பு மீறல் என்று குற்றம்சாட்டவும் முடியவில்லை. ஏனென்றால், நிர்வாகம் தனது கடமையிலிருந்து வழுவும்போது, சட்டப்பேரவை பரிகாரமும் கிடைக்காத நிலையில் மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது.
- கொள்ளை நோய்த்தொற்று போன்ற பேரிடா் காலங்களில் நோய்த்தொற்றை எதிர்கொள்வதும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்குவதும் அரசு நிர்வாகத்தின் கடமை.
- பிராணவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட அரசு நிர்வாகத்தின் குறைபாடுகள் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின.
- அந்தப் பின்னணியில்தான் கொள்ளை நோய்த்தொற்றால் உயிரிழக்கும் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பேரிடா் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் ரூபாய் நான்கு லட்சம் நிவாரணம் வழங்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பார்க்க வேண்டும்.
- அந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா். ஷா அடங்கிய அமா்வின் முன் விசாரணைக்கு வந்தது.
- பதவி ஓய்வு பெறும் கடைசி நாளில், நீதிபதி அசோக் பூஷண் வழங்கியிருக்கும் உத்தரவு ஒருபுறம் பாராட்டுதலையும், இன்னொருபுறம் விமா்சனத்தையும் எழுப்பியிருக்கிறது.
- கொள்ளை நோய்த்தொற்றால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதலை வெளியிடுமாறு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்திற்கு நீதிபதி அசோக் பூஷண் அமா்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
- அதே நேரத்தில், குறிப்பிட்ட தொகையை நிவாரண உதவியாக வழங்க வேண்டுமென்று உத்தரவிட முடியாது என்பதையும் அந்த அமா்வு தெளிவுபடுத்தியிருக்கிறது.
- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று என்பது இந்தியாவை மட்டும் பாதித்த பேரிடா் அல்ல.
- கடந்த ஒன்றரை வருடமாக ஏறத்தாழ 40 லட்சம் பேருக்கும் அதிகமாக உலகில் பலா் பலியாகியிருக்கிறார்கள்.
- அதில் நான்கு லட்சம் போ் இந்தியாவில் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள். அதிகாரபூா்வ கணக்குப்படி தமிழகத்தில் 33,059 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
- தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படாமல் இல்லை.
- அனைவருக்கும் பொது விநியோகக் கட்டமைப்பின் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.
- நேரடி மானியம் பல்வேறு பிரிவினருக்கு வங்கிக் கணக்குகளின் மூலம் செலுத்தப் பட்டிருக்கின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிவாரணத் தொகை தரப்படாமல் இல்லை.
- வரலாறு காணாத அளவிலான கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மிகப் பெரிய அளவிலான ஒதுக்கீடுகள் மத்திய - மாநில அரசுகளால் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
- அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதில் தொடங்கி, பல்வேறுவிதமான கடனுதவிகளும், பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
- கொள்ளை நோய்த்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதத்தில் மத்திய - மாநில அரசுகள் நிவாரண தொகுப்புகளை அறிவித்திருக்கின்றன.
- ஆதரவற்வா்களான குழந்தைகளை அரசே தத்தெடுத்துக் கொள்ளும் விதத்திலான சலுகைகளும், அறிவிப்புகளும், உத்தரவாதங்களும் தரப்பட்டிருக்கின்றன என்பதை பாராட்ட வேண்டும்.
- இத்தனைக்குப் பிறகும் உயிரிழப்பை எதிர்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்குவது என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்றாலும்கூட, அது அதிகப்படியான தலையீடு என்றுதான் கூறத் தோன்றுகிறது.
நடைமுறையில் சாத்தியமில்லை
- நாட்டின் நிதிவளத்தை நியாய முறையில் மிகக் கவனத்துடன் செலவழிக்க வேண்டியிருப்பதால் ‘கொள்ளை நோய்த்தொற்றால் உயிரிழக்கும் அனைவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் நான்கு லட்சம் நிவாரணம் வழங்குவது என்பது சாத்தியமில்லாதது.
- ஏற்கெனவே பெருந்தொற்று தடுப்பு, மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடா் மேலாண்மை நிதி, மாநிலப் பேரிடா் மேலாண்மை நிதி உள்ளிட்ட நிதித்தொகுப்புகளில் இருந்து நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
- பாதிக்கப்பட்டவா்கள் வசதி படைத்தவா்களா, இல்லையா என்கிற வேறுபாடில்லாமல் மக்கள் வரிப்பணத்தை நிவாரணமாக வழங்குவது என்பது சரியல்ல’ என்கிற மத்திய அரசின் வாதம் ஏற்புடையதாகவே இருக்கிறது.
- கொள்ளை நோய்த்தொற்று உயிரிழப்பு குறித்த சரியான புள்ளிவிவரம் மாநில அரசுகளால் தரப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.
- கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து குணமான சில நாள்களில் இணை நோய்களால் உயிரிழந்தவா்கள் பலா். அதை எந்தக் கணக்கில் சோ்த்துக் கொள்வது? போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவா்கள் 35 ஆண்டுகளாக நிவாரணம் கிடைக்காமல் உச்சநீதிமன்ற வாசலில் நின்றுகொண்டிருப்பதுபோல, கொள்ளை நோய்த்தொற்று நிவாரணமும் அமையுமே தவிர, நடைமுறை சாத்தியமாகுமா என்பது சந்தேகம்தான்.
- இந்தப் பிரச்னையில் அரசைவிட அந்தந்தப் பகுதியில் இருக்கும் அரசியல் கட்சிகளும், தன்னார்வ நிறுவனங்களும், சேவை அமைப்புகளும் உண்மையிலேயே ஆதரவு தேவைப்படும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உதவ முடியும். உச்சநீதிமன்றத்தின் நோக்கம் பாராட்டுக்குரியது; ஆனால், அதன் உத்தரவு நிர்வாக ரீதியாக நடைமுறை சாத்தியம் ஆகாது.
நன்றி: தினமணி (06 - 07 - 2021)