TNPSC Thervupettagam

நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு நல்லதொரு தொடக்கம்

July 26 , 2021 1102 days 473 0
  • குஜராத் உயர் நீதிமன்றத்தில் இணையவழி நேரடி ஒளிபரப்பை முறையாகத் தொடங்கி வைத்துள்ளார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
  • அவர் அளித்திருக்கும் அறிவுரைகள், நீதிமன்ற விசாரணைகளை அறிந்துகொள்வதில் குடிமக்களுக்கு உள்ள அரசமைப்பு உரிமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
  • உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புவது பற்றி அவ்வப்போது விவாதிக்கப்பட்டுவந்தாலும் அதன் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்த கேள்விகளும் இருந்துவந்தன.
  • கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதும் முடங்கிப்போயிருக்கும் சூழலில், முக்கிய வழக்குகளின் விசாரணைகள் இணையவழியில் நடத்தப்பட்டதன் அனுபவங்கள், இனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்புக்கு வெற்றிகரமான முன்னோட்டங்களாக அமைந்துவிட்டன என்று சொல்லலாம்.
  • இணையவழி விசாரணையில், வழக்கறிஞர்கள் தங்களது அலுவலகத்திலிருந்தே வாதிடவும் வழக்காடிகள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அவற்றைக் காணவும் வாய்ப்புகள் உருவாகின.
  • இணையத்தின் வழி இணைகிறபோதே கணினியின் கேமரா, மைக் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளும் தற்போது வழங்கப்படுகின்றன.
  • தற்போதுள்ள இந்த இணையவழி விசாரணை முறையின் சாத்தியங்களை, இனி வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்புக்கும் நீட்டித்துக்கொள்ளலாம்.
  • 2018-ல் ஸ்வப்னில் த்ரிபாதி வழக்கின் தீர்ப்பில், நீதிமன்ற விசாரணைகளை அறிந்துகொள்வது ஒவ்வொரு குடிநபரின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் அரசமைப்பின் அடிப்படையிலான வழக்குகளின் விசாரணை நடக்கிறபோது அவற்றைப் பரிசோதனை அடிப்படையில் நீதிமன்றத்தின் வெளியேயும் ஒளிபரப்புவதற்கு அவ்வழக்கில் உத்தரவிட்டபோதிலும், இப்போது தான் அதற்கு வேளை வந்திருக்கிறது.
  • கடந்த ஜூன் மாதத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனஞ்ஜெய ஒய்.சந்திரசூட் தலைமையிலான இ-கமிட்டி, நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது, அவற்றைப் பதிவுசெய்வது குறித்த விதிமுறைகளின் வரைவு மீது யோசனைகளை அளிக்குமாறு நாட்டிலுள்ள 24 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
  • உயர் நீதிமன்றங்கள் மட்டுமல்லாது விசாரணை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியவற்றின் நடைமுறைகளும் அடுத்தடுத்து இணையவழி ஒளிபரப்பில் இணையவிருக்கின்றன.
  • சட்ட அறியாமை எப்போதுமே எதிர்வாதமாக நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்பதால், குடிமக்களுக்குச் சட்டங்கள் குறித்த அறிமுகத்துடன் நீதிமன்ற விசாரணைகளைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியமாக இருக்கிறது.
  • அதே நேரத்தில், நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பை இருபுறமும் கூர்மைகொண்ட வாளுடன் ஒப்பிட்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்சரித்துள்ளதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
  • பாதிக்கப்பட்டவர்களின், சாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கும். வழக்கறிஞர்கள் இதைத் தங்களது பிரபல்யத்துக்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொண்டுவிடக் கூடாது.
  • எது எப்படியிருப்பினும், விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதித் துறையின் வெளிப்படைத் தன்மையை மட்டுமல்ல, பொறுப்புணர்வையும் அதிகப்படுத்தவே செய்யும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்