- பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான நீதிமன்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றுவருவது கண்டனத்துக்குரியது.
- 2002 குஜராத் கலவரத்தின்போது, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கொலைசெய்த வழக்கில், 11 பேருக்கு 2008இல் மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. குஜராத் அரசு தனது தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசின் ஒப்புதலுடன் ஆகஸ்ட் 2022இல் இந்தக் குற்றவாளிகளை விடுவித்தது.
- இதற்கு எதிராக பில்கிஸ் பானுவும் வேறு சிலரும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி பேலா எம்.திரிவேதி வழக்கு விசாரணையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதை அடுத்து, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வுக்கு மாற்றப்பட்டு, மார்ச் 2023இல் விசாரணை தொடங்கியது.
- ஆனால், விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் சிலரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், தமது கட்சிக்காரருக்கு நீதிமன்ற விசாரணை குறித்த அறிவிப்பு கிடைக்கவில்லை என்று தொடக்கம் முதலே கூறிவருகின்றனர்.
- மே 2இல் நடைபெற்ற விசாரணையின்போது இந்த வழக்கு தன்னால் விசாரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகக் குற்றவாளிகள் திட்டமிட்டுக் காலம் தாழ்த்துவது தெளிவாகியிருப்பதாக நீதிபதி கே.எம்.ஜோசப் கூறியிருக்கிறார். நீதிபதி ஜோசப் ஜூன் 16 அன்று ஓய்வுபெறுகிறார் என்றாலும் மே 19 அன்று நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் காலம் தொடங்குகிறது.
- இதனால் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டு, ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதை அடுத்து, நீதிபதி ஜோசப் இந்த வழக்கை விசாரிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
- விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு மட்டும் வழக்கு விசாரணை குறித்த அறிவிப்பு சென்று சேரவில்லை என்றும் அவருடைய வீடு பூட்டப்பட்டிருப்பதாகவும் அவருடைய சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் அவர் சார்பில் அறிக்கையைப் பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் மே 9 அன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை குறித்த அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- நீதிமன்ற விசாரணை குறித்த அறிவிப்பு, வழக்குடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பப்பட வேண்டும் என்கிற நடைமுறையை நீதிமன்றம் மீற இயலாது. ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை அறிவிப்பைப் பெறத் தவறுவதன் மூலம் நீதிமன்ற விசாரணையைத் தவிர்க்கும் உத்தியைப் பிரதிவாதிகள் பயன்படுத்துவதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
- எவ்வளவு கொடிய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டவரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- இப்படி விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் அது தொடர்பான நீதிமன்ற விசாரணையைத் தவிர்ப்பதற்கும் தாமதப்படுத்துவதற்கும் அனுமதிப்பது நீதித் துறையின் அதிகாரத்தையும், சட்டம் மீதான மக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கிவிடும். ஆகவே, பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்ற விசாரணைக்கு முறையான, முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதை உறுதிசெய்வது அரசு - காவல் துறையின் கடமை.
நன்றி: தி இந்து (11 – 05 – 2023)