TNPSC Thervupettagam

நீதி கிடைப்பதை எளிதாக்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றம்

July 9 , 2021 1119 days 482 0
  • குடிமக்களாகிய நாம் அனைவரும் பல்வேறு பொதுப் பயன்பாட்டு சேவைகளை (Public Utility Services) இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.
  • நவீன யுகத்தில் இவை நம் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்களாகிவிட்டன. அதே நேரம் நாம் ஒவ்வொருவரும் இந்த சேவைகளில் பல்வேறு குறைகள், பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்போம்.
  • பேசித் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் சட்டத்தின் தலையீடு அவசியமாகிறது.
  • இதுபோன்ற பிரச்சினைகளில் மக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய ஏற்பாடாக 'நிரந்தர மக்கள் நீதிமன்றம்' (Permanent Lok Adalat) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • சட்டப் பணிகள் ஆணைக்குழுச் சட்டம் 1987 (திருத்தச் சட்டம்), 2002-ன் படி, இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொதுப் பயன்பாட்டு சேவைகள்) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
  • மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதி தலைவராக இருப்பார். பொதுப் பயன்பாட்டு சேவைகளில் அனுபவம் உள்ள இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டிருப்பார்கள்.
  • பொதுப் பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய பிரச்சினைகள் (Pre-Litigation), இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப் படுகின்றன.

எவையெல்லாம் பொதுப் பயன்பாட்டு சேவைகள்?

  • சட்டப் பணிகள் ஆணைக்குழுச் சட்டத்தின்படி கீழ்க்கண்ட பணிகள் பொதுப் பயன்பாட்டு சேவைகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன:

1. விமானம், சாலை அல்லது நீர்வழிப் பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவைகள்.

2. அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை.

3. எந்தவொரு நிறுவனத்தினாலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் அல்லது நீர் வழங்கும் சேவை.

4. பொதுப் பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு.

5. மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் சேவை. (Service in Hospital or Dispensary)

6. காப்பீட்டு சேவைகள்.

7. கல்வி அல்லது கல்வி நிறுவனங்கள்.

8. வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை.

  • மேலும், மத்திய - மாநில அரசின் அறிவிப்பின் மூலம் அவ்வப்போது சேர்க்கப்படும் மற்ற சேவைகள் தொடர்பாகவும் வழக்கு தாக்கல் செய்யலாம்.

எளிய நடைமுறை

  • நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் (பொதுப் பயன்பாட்டு சேவைகள்) வழக்கு தாக்கல் செய்வது மிகவும் சுலபம்.
  • பொதுப் பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்குகளை, பொதுப் பயன்பாட்டு சேவைகளுக்கான நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் / மாவட்ட நீதிபதி முன் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் இன்றி சாதாரண காகிதத்தில் தாக்கல் செய்யலாம்.
  • நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பண ஆள்வரை ரூ.1 கோடி. அதாவது, ரூ.1 கோடி மதிப்புள்ள தீர்வுகளுக்கான வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மேலும் பல சிறப்புகள்

  • இவற்றைத் தாண்டி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
  • இந்த நீதிமன்றத்தில் வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டுத் தீர்வு கிடைத்துவிடும்; வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முடிவு உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பாணைக்குச் சமமானது.
  • நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது.
  • கடுமையான நடைமுறைகள் இன்றி ஏழை - எளிய மக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தும் வகையில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் குறித்துப் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்