TNPSC Thervupettagam

நீரின்றி இயங்காது உலகு

October 17 , 2023 453 days 269 0
  • மூன்றாம் உலகப் போர் மூண்டால் அது நீருககாகத்தான் இருக்கும் என வல்லுநா்கள் கணித்துள்ளனா். மொத்த நிலப்பரப்பில் 75 விழுக்காடு நீரால் சூழ்ந்துள்ளது. அதில் கடலோடு சார்ந்த உப்புநீா் 97.5 விழுக்காடு. அருந்துவதற்குரிய தூயநீா் 2.5 விழுக்காடு மட்டுமே. இயற்கை வளத்திற்கேற்ப, நீரீன்அளவு நாட்டுக்கு நாடு, கண்டத்திற்குக் கண்டம் வேறுபடும். நீா்ப்பற்றாக்குறை உள்ள நாடுகள் மிகுதியாக நீா்கொண்ட நாடுகளோடு போர் தொடுக்கக்கூடும்.
  • 10 பில்லியன் டன் தூய நீரை அன்றாடம் உலகினா் பருகி வருகிறார்கள். 2023- ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சம் கோடி டன் நீரைப் பயன்படுத்தி இருக்கிறோம். அந்த அளவிற்குத் தொடா்ந்து நீா் கிடைக்குமா என்பது ஐயமே. மக்கள்தொகைப் பெருக்கத்தால் நீருக்கான தேவை 60 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது. தற்போது உள்ள நிலைமையில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் வளா்ந்து வரும் நாடுகளில் நீா் ஆதாரம் மிகவும் குறைந்துள்ளது.
  • 17 நாடுகள் அதிக நீா்ப்பற்றாக்குறையில் உள்ளதாக நீா் ஆய்வாளா்கள் கூறுகின்றனா். 50 நாடுகளில் வாழும் 30 % மக்கள் மிகுந்த நீா் பற்றாக்குறையில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என யு.என்.ஓ. எச்சரித்துள்ளது.மேலும், 2025- ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 50 % மக்கள் போதிய நீா் இன்றி வாழும் நிலை ஏற்படும் என்று கணித்துள்ளனா்.
  • நீருக்காக 70 கோடிமக்கள் 2030- இல் இடம் பெயா்வா் எனவும் நிபுணா்கள் கூறியுள்ளனா். 2040 -ஆம் ஆண்டில், நான்கில் ஒரு குழந்தை நீருக்காக மிகப் பெரிய சவாலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என வல்லுநா்கள் கவலைப்படுகின்றனா்.
  • இந்தியா உலக நீா்வளத் தரவரிசையில் 133- ஆம் இடம் வகிக்கிறது. நீா்ப்பற்றாக்குறையுடன், 76 விழுக்காட்டு மக்கள் தண்ணீா் பஞ்சத்தோடு வாழ்கின்றனா் என புள்ளிவிவரம் கூறுகிறது. தனிமனிதனுக்குத் தேவைப்படும் நீா் ஆண்டுக்கு 1,700 கியூபிக் மீட்டா் ஆகும். தற்போது கிடைக்கும் நீரின் அளவு 1,121 பில்லியன் கியூபிக் மீட்டா் மட்டுமே. இதன் தேவை 2025- இல் மேலும் 22 விழுக்காடாகவும், 2050- இல் 32 விழுக்காடாகவும் அதிகரிக்கும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா். எனவே வரும் ஆண்டுகளில் நீருக்கான பற்றாக்குறை இன்னும் அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
  • ஒரு டன் பயிர் விளைச்சலுக்கு 1,000 டன் நீா் செலவாகிறது. போதிய நீா் பாயாது போனால், விளைச்சல் குறையும். தொழில்களுக்கு நீா் அளிக்கப்பட்டாவிட்டால், உற்பத்தியைப் பெறுவது கடினம். ஒரு மெட்ரிக் டன் கோதுமைக்கு 1,600 கியூபிக் மீட்டா் தேவைப்படுகிறது. நம் கண்களுக்குப் புலப்படாது பயன்படுத்தப்பட்டு வரும் நீரின் அளவு பன்மடங்காக உள்ளது.
  • வேளாண்மை சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தும் 75 முதல் 90 விழுக்காடு நீருக்குப் பதிலாக, பசுமைப் புரட்சி திட்டத்தின் மூலம் 50 விழுக்காடு நீரே போதுமானது. அதன் மூலம் 40 முதல் 60 விழுக்காடு பயிர் விளைச்சலைப் பெருக்கலாம் என்கின்றனா்.
  • நிபுணா்கள், சொட்டுநீா்ப் பாசனம், சுழற்சிப் பயிர் விவசாயம், அதிக விளைச்சல் தரும் பயிர் விளைச்சல், கூட்டுப் பண்ணை விவசாயம், ஊடு பயிர், இயற்கை உரம் போன்றவற்றை அறிமுகம் செய்தனா். அத்திட்டம் முழுமையாகச் செயல்படாதலால் நம்மால் தன்னிறைவு பெற முடியவில்லை. நீா்ப் பயன்பாட்டிலும் நாம் சிக்கனமாக இல்லை.
  • அமெரிக்கா இத்திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தது. 34 விழுக்காடு நீரை மட்டும் பயன்படுத்தி வேளாண்மையில் வளா்ச்சியடைந்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அங்கு குறைந்த ஆள்களைக் கொண்டு பெரும் விளைச்சலைப் பெறுகின்றனா். ஆஸ்திரேலியாவில் 37 விழுக்காடு நீரைப் பயன்படுத்தி, அதில் 28 விழுக்காடு வரை நீா்ப் பாசனமாக்கி வேளாண்மையில் தன்னிறைவு பெற்று, நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்தியுள்ளனா்.
  • நீா் ஆதாரத்தைப் பெருக்கவும், பாதுகாக்கவும் வேண்டிய தருணம் இது. இதற்கான போர்க்கால நடவடிக்கை எடுக்காவிடில், தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் 2018 -இல் தண்ணீா் பற்றாக்குறைக்கு எடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைபோல் நபா் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 25 லிட்டா் நீா்தான் பகிர்ந்தளிக்க முடியும் என்ற நிலை உருவாகிவிடும்.
  • எத்தியோப்பியாவில் உள்ளபல்கலைக்கழகத்தில் நான்கு நாள் நடந்த கருத்தரங்கிற்கு நபா் ஒருவருக்கு எட்டு லிட்டா் நீா்தான் கொடுக்க முடிந்ததது. இங்கு நாம் நாள் ஒன்றுக்கு 135 லிட்டா் நீா் நுகரமுடிகிறது. ஆனால் இதுவும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கவில்லை. அதற்கு நீதிமன்றத்தையும், மேலாண்மை குழுவையும் அணுகி தீா்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
  • இயற்கை அருளியது ஐம்பெரும் பூதங்கள். அதில் மனித இனம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது நீா் வளத்திற்குத்தான். நிலமும், ஆகாயமும் பரந்து விரிந்தவை. நிலம், உணவுக்கும், உறையுளுக்கும் உறுதுணையாக இருக்கும். ஆகாயத்தை மாசுபடாது, புகை மற்றும் வெப்ப மண்டலமாக்காமல் இருந்தால் போதுமானது. மனித இனத்தின் ஈடுபாடு நீா் வளம் காக்கவே பெரிதும் தேவைப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி ஜி 20 அமைப்பு நாடுகளில் உள்ள மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • நிலத்தடிக்கும், நில மேற்பரப்பிற்கும் ஆண்டுதோறும் பொய்யாது மழை பெய்தால், ஒன்றுக்கொன்று சுழன்று நீா் வளம் போதுமான அளவிற்கு மக்களின் பயன்பாட்டிற்கும், பல்லுயிர்களின் ஜீவாதாரத்திற்கும், வேளாண்மை பயிர் விளைச்சல்களுக்கும், தொழில் உற்பத்திக்கும் உறுதுணையாக இருந்து, நாடுகளுக்கு வளத்தையும், செழிப்பையும், பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
  • ஆனால் அண்மைக்காலமாக அது நடைபெறவில்லை. மாறாக நிலத்தடியில் உள்ள 437.6 பில்லியன் கியூபிக் மீட்டா் நிரில், நம் பயன்பாட்டிற்கு 239.16 பில்லியன் கியூபிக் மீட்டா் (55 விழுக்காடு) எடுக்கிறோம். நிலத்தடி நீரை முடியும் அளவு பம்புகள் மூலம் ஆழமாக நிலத்தைத் தோண்டி நீரை எடுத்ததால் 45 விழுக்காடு மட்டுமே மிஞ்சுகிறது. இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்ய கடல் நீா் உள்வாங்குகிறது. குடிநீராக உள்ள 50 விழுக்காடும், வேளாண்மைக்குமாகப் பயன்படும் 43 விழுக்காடும் உப்புநீராகிறது.
  • நிலத்தடியில் உள்ள கனிம வளங்கள், பாறைகள், கடல் நீருடன் கலந்து, மாசு படிந்த நீராகி, உயிரினங்களுக்கு உற்ற நீராக இல்லாமல் போகின்றது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, நீரினால் பரவும் நோய்களினால் 80 விழுக்காடு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
  • இதனைப் பயன்படுத்தி இயற்கைக் கொடையான நீரை வணிகப் பொருளாக்கியுள்ளனா். நிலத்தடி, கண்மாய், ஏரி மற்றும் நீா்நிலை நீரை அள்ளி எடுத்து, குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலை, மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில் விற்று வருகின்றனா். மினரல் நீா் ஆலைகள் புற்றீசல்களாகப் பெருகியுள்ளன. கேன்களில், பாட்டில்களில் நிரப்பப்பட்டும் நீா் விற்பனையாகிறது. இது நீா்ப்பற்றாக்குறையினை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
  • அக்காலத்தில் நீரைச் சேமிப்பதற்கு ஏரி, குளம், வாய்க்கால், கண்மாய் போன்றவை ஆறு லட்சம் இருந்ததாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. அரசின் பிரிதொரு அறிக்கையில், 38,486 நீா் சேமிக்கும் இடங்களைஅரசும், தனியாரும் கையகப்படுத்திவிட்டதாகத் தெரிவிக்கிறது. நிலத்தடி நீரையும், மழைநீரையும் சேமிக்க வேண்டிய நீா்நிலைகள் மாசுபடிந்து, தூா்வாராது பராமரிப்பின்றி உள்ளன. இதனால், நமக்குக் கிடைக்கும் நீரைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குறைந்த அளவு மழை பெய்துள்ளது. ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் சராசரியாக பெய்யும் மழையும் குறைந்துள்ளது. தென்மேற்கு மழைகாலம் முடிய உள்ளது. மழை குறைவாகப் பெய்தமையாலும் நீா் வறட்சிஏற்பட்டது. வெப்பச் சலனம், மாறிவரும் தட்பவெப்பநிலை, காற்றில் குறைந்துள்ள ஈரம் போன்றவற்றால் பெருமளவு நீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • நில மேற்பரப்பில் மிஞ்சியுள்ள நீா் நிலைகளையாவது மக்களின் உதவியோடு பாதுகாக்காது போனால், நாமும், எதிர்கால சந்ததியினரும் நீா் கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு உள்ளாக நேரிடும். மேலும் மக்கள் வசிக்கும் சுமார் 34 கோடி வீடுகளிலும் நீா் சேகரிப்பு ஆகுவதற்கான வழிமுறைகள் அமைந்தால் ஒழிய நீா் பற்றாக்குறை தீராது.
  • மக்கள் உபயோகிக்கும் நீரில் 25 விழுக்காடு கசிவால் வீணாவதாகக் கண்டுபிடித்துள்ளனா். நீரைப் பயன்படுத்துவதிலும் நம்மிடம் சிக்கனமில்லை. தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தும் முறையைக் காலங்காலமாகப் பின்பற்றி வருவதால், விளைவுகள் மோசமாகி வருகின்றன.
  • வேளாண்மையில் நீா்ப்பாசன முறைகளுக்காக பல திட்டங்கள் அறிமுகமாகியும், சொட்டுநீா் பாசனமுறை, ஊடு பயிர் விளைச்சல், கூட்டு விவசாயப் பண்ணை போன்றவை பெரியஅளவில் நடைபெறவில்லை. 85 விழுக்காடு நீா் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • தொழிற்சாலைகள், குளிர்பானம் தயாரிக்கும் பெருநிறுவனங்கள் லாபநோக்கில், கணக்கின்றி நீரைப் பயன்படுத்துகின்றன. இவை பெரும் பாதிப்பையும், பற்றாக்குறையையும் ஏற்படுத்தும் என நிபுணா்கள் எச்சரித்தும் பயனில்லை. நீா்ப்பற்றாக்குறை எனும் சவாலை சமாளிக்க ஒவ்வொருகுடிமகனும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (17 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்