TNPSC Thervupettagam

நுகர்வோர் நலனே முக்கியம்

June 1 , 2023 543 days 352 0
  • குஜராத்தைச் சேர்ந்த பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து பால் விற்பனையில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியிருப்பது அரசியல்ரீதியான சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில், அமுல் நிறுவனம் செயல்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
  • தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது; இது தவிர, சில தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. ஆனால், லிட்டருக்கு ரூ.20 வரை குறைவான விலையில் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.
  • இந்நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட தன்னுடைய தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்துவந்த அமுல், இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் குளிரூட்டும் மையங்களையும் பதப்படுத்தும் ஆலைகளையும் நிறுவியுள்ளது.
  • அதோடு கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் விவசாய அமைப்புகள், சுய உதவிக் குழுக்களிடமிருந்து பால் கொள்முதல் செய்வதற்கான திட்டங்களையும் தொடங்கியுள்ளது. இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் நேரடியாக இதில் தலையிட்டுள்ளார்.
  • தனியார் நிறுவனங்களைப் போல் அமுல் நிறுவனத்தையும் பால் விற்பனை செய்ய அனுமதிப்பதால் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது என்கிற கேள்வி எழுவது இயல்புதான். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலில் ஒரு பகுதியை மட்டுமே ஆவின் நிறுவனம் வாங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • ஏற்கெனவே நாட்டில் பால் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், அமுல் நிறுவனம் கூடுதல் கொள்முதல் விலையில் பாலை வாங்கினால், ஆவின் பால் கொள்முதல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்கிற அச்சமும் நியாயமானதே.
  • மேலும், இன்னொரு மாநிலத்தின் கூட்டுறவு நிறுவனம் தமிழ்நாட்டில் கால்பதிப்பது ‘ஆரோக்கியமற்ற போட்டி’க்கு வழிவகுத்து, கூட்டுறவு மனப்பான்மையுடன் இயங்கிவரும் தமிழ்நாடு பால் கூட்டுறவுச் சங்கங்களின் நலனைப் பாதிக்கும் என்றும் இது ‘வெண்மைப் புரட்சி’யின் நோக்கங்களுக்கு எதிரானது என்றும் தமிழக முதலமைச்சர் சுட்டிக் காட்டியிருப்பது புறக்கணிக்கத்தக்கது அல்ல. அதேநேரம், இந்த வணிகப் போட்டி மாநிலங்களுக்கு இடையிலான பூசலை வளர்த்துவிடக் கூடாது. மத்திய அரசு இந்தப் பிரச்சினையை மிகுந்த கவனத்துடன் கையாண்டு தீர்வு காண வேண்டும்.
  • நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் பால் கொள்முதலை நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டராக அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அத்துடன் குளிரூட்டும், பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட ஆவின் பால் கொள்முதல், விற்பனைச் சங்கிலியின் பிற கண்ணிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.
  • பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகபட்ச லாபமும் நுகர்வோருக்கு மிகத் தரமான பாலும் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதுதான் வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!

நன்றி: தி இந்து (01 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்