TNPSC Thervupettagam

நுகர்வோர் நலன் காத்தால்...

December 24 , 2019 1846 days 956 0
  • எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் வாடிக்கையாளரே அடித்தளம் ஆவார். எந்த ஒரு நிறுவனத்தின்  முதன்மை நோக்கங்களில் ஒன்று நுகர்வோரின் தேவைகளை அடையாளம் கண்டு நிறைவேற்றுவது ஆகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு உற்பத்தி, வணிக நிறுவனத்துக்கும் பெரிய சந்தை உருவாகியிருக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்பு

  • நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி கொண்டுவந்தார். நுகர்வோர் பாதுகாப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை 1985-ஆம் ஆண்டு ஐ.நா. சபை நிறைவேற்றியது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தேவையான கொள்கை மாற்றங்கள், சட்டத்திருத்தங்களைச் செய்து நுகர்வோர் பாதுகாப்பை ஊக்குவிக்குமாறு உறுப்பு நாடுகளை ஐ.நா. சபையின் தலைமைச் செயலர்  கேட்டுக் கொண்டார். அது முதல் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய சட்டங்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
  • இந்தியாவின் நுகர்வோர் இயக்கத்தின் முக்கிய மைல்கல், டிசம்பர் 24, 1986-இல் கொண்டு வரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமாகும். நுகர்வோர் உரிமைகளைச் சிறப்பாகவும், விரைவாகவும் பாதுகாப்பதற்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது.
  • நுகர்வோரின் குறைகளை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம், தேசிய நுகர்வோர் ஆணையம் ஆகிய மூன்றடுக்கு அமைப்புகளின் மூலம் அதிக செலவின்றித் தீர்ப்பதற்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது. இந்தியாவின் கிராமப்புறங்களில் 70 சதவீத மக்கள் வாழ்கின்றனர். பல்லாண்டுகளாக அவர்கள் இந்தியாவின் மொத்த பொருள்கள் பயன்பாட்டில் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். வேகமான நகரமயமாக்கலும், இடம்பெயர்தலும் ஏற்பட்டுள்ள நிலையிலும் 2025-ஆம் ஆண்டு வாக்கில் கிராமப்புறங்களில் 63 சதவீத மக்கள் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களின் பங்களிப்பு

  • எனவே, இந்தியப் பொருளாதாரத்துக்கு கிராமப்புறங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமாக இருக்கும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல்,  தனியார் மயமாக்கலால் இந்தியப் பொருளாதாரத்தில் நுகர்வோர் சந்தை வேகமாக வளர்ந்து மிகவும் துடிப்பு மிக்கதாக உள்ளது.  இதன் விளைவாக சந்தையில் புதுப்புது பொருள்களும், சேவைகளும் குவிந்து மக்களின் நுகர்வுத் தன்மை பெரிதும் மாறியுள்ளது.  
  • முன்பெல்லாம் கிராமப்புற சந்தைகளைப் புறக்கணித்த பன்னாட்டு நிறுவனங்கள், அங்கு மிகுந்த வாய்ப்புள்ளதை இப்போது உணர்கிறார்கள். மக்களின் செலவு செய்யக்கூடிய அணுகுமுறை அதிகரித்துள்ள நிலையில் பல உற்பத்தி நிறுவனங்கள் புதிய பொருள்கள், சேவைகளோடு கிராமப்புறங்களில் நுழைகிறார்கள்.
  • கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். அங்கே பெருமளவு வேலைவாய்ப்பின்மையும், குறைந்த படிப்பறிவும், மிகக் குறைந்த நுகர்வோர் விழிப்புணர்வும் உள்ளன. நுகர்வோர் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு பொருள்களையோ, சேவையையோ பெறும் ஒருவர் யாரிடமிருந்து என்ன பெறுகிறோம் என்பதற்கான ஒப்புதல் கடிதம், அறிவிப்பு ரசீது ஆகியவற்றைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
    டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், இணையதளம், மின் வணிகத்தின் அதிவேக ஊடுருவல் ஆகியவற்றின் வருகை காரணமாக இந்திய நுகர்வோர் சந்தை கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகள்

  • நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலிலும், மிகக் குறைந்த தொகையை இழப்பீடாகப் பெறும் வழக்குகளில்கூட, நுகர்வோருக்கு விரைவான நீதி வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலும், நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்க புதிய சட்டத்தை இயற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன்படி 2019-ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அதற்குப் பெறப்பட்டது.
  • நுகர்வோரைப் பாதுகாத்தல், மின்னல் வேகத்தில் மாற்றுவழிகளைத் தெரிவிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கச் செய்தல் ஆகிய தீர்வுகளை இந்தப் புதிய சட்டம் வழங்குகிறது. நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் விசாரிக்கப்படும் பண மதிப்பு குறித்த உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1 கோடி வரை மதிப்புள்ள வழக்குகளை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றமும், ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி மதிப்புள்ள வழக்குகளை மாநில நுகர்வோர் குறைதீர் மன்றமும்,  ரூ.10 கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள வழக்குகளை தேசிய நுகர்வோர் ஆணையமும் விசாரிக்க முடியும்.
  • 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட நடைமுறை என்பது, நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் முதலில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிறகு பயிற்சி பெறும் நிலையிலேயே உள்ளனர்.

காரணங்கள்

  • இது அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு முக்கியக் காரணியாக அமைந்து விடுகிறது. நுகர்வோர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில்  4,26,894, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில்  1,10,339, தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் 18,522 எனப் புகார்கள் நிலுவையில் உள்ளன.
  • நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் பணியாளர்களில் பெரும்பான்மையினர் பிற அரசுத் துறைகளில் இருந்து அயல் பணியில்  அனுப்பப்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு குறைதீர் மன்ற நடைமுறைகள் குறித்த அனுபவங்கள் எதுவும் இல்லை.
  • நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு முதலில் நுகர்வோர் நீதிப் பரிபாலனம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பிறகே அவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (24-12-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்