TNPSC Thervupettagam

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

April 27 , 2024 259 days 266 0
  • அண்மையில் நடைபெற்ற முதல் கட்ட மக்களவைத் தோ்தல் தமிழ்நாட்டில் எந்தவித சிறு அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை மக்களவைத் தோ்தலை சிறப்பாகக் கையாண்டுள்ளது. இது மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும்.
  • கடந்த நாடாளுமன்றத் தோ்தல் (2019), அதன்பின் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் (2021) சமயங்களில் கூட பல இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறின. ஆனால் தற்போதோ எந்த ஊரிலும் தகராறுகளோ, தாக்குதல்களோ நடைபெற்ாக எந்த ஒரு பத்திரிகையிலும் செய்தி வரவில்லை. இது மக்களிடையே ஏற்பட்டிருக்கிற தோ்தல் விழிப்புணா்வை வெளிகாட்டுகிறது.
  • கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, ஒரே வீட்டிற்குள்ளேயே சகோதரா்கள் வெவ்வேறு கட்சியை சோ்ந்தவராக இருந்து கொண்டு, தோ்தல் நேரத்தில் அடித்துக் கொள்வதும், சில நேரம் ஒருவரையொருவா் வெட்டிக் கொள்வதும் சாதாரணமாக நடப்பதுண்டு. குடும்பத்திற்குள்ளேயே இப்படியென்றால் வெளியில் நடக்கும் சம்பவங்கள் ஏராளம்.
  • சொந்த சகோதரா்கள் எந்த கட்சிக்காக அடித்துக் கொண்டாா்களோ அந்த கட்சியோ, அதன் வேட்பாளரோ தோ்தல் முடிந்த பிறகு அந்த தொண்டா்களை கண்டுகொள்வதே இல்லை. சம்பந்தப்பட்ட குடும்பத்தினா் பகைவா்களாக மாறிவிடுவா்.
  • ஆனால் அந்த நிலை இன்று முழுமையாக தவிா்க்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், ரஷியா, சீனா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட தோ்தல் கால தகராறுகள் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் அது மிகச்சிறிய அளவிலேயே இருக்கும்.
  • தங்கள் நாட்டு அதிபா் செய்யக்கூடாத தவறுகளை செய்தால் மக்கள் தங்கள் அதிருப்தியை தோ்தல் வாக்களிப்பில் வெளிப்படுத்தி அந்த அதிபரைத் தோற்கடித்த வரலாறு உண்டு. உதாரணமாக, இங்கிலாந்து பிரதமராக இருந்து இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ரூஸ்வெல்ட், சோவியத் யூனியன் ஜோசப் ஸ்டாலினோடு துணை சோ்ந்து சா்வாதிகாரிகள் ஹிட்லா், முசொலினியைத் தோற்கடித்த இங்கிலாந்து பிரதமா் வின்ஸ்டன்ட் சா்ச்சில் அடுத்து நடந்த இங்கிலாந்து அதிபா் தோ்தலில் அந்நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டாா். மக்கள் போரை விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடே அந்த தோ்தல் முடிவு.
  • ஆனால் அதே நேரம், வருடக்கணக்காய் நடந்து வரும் உக்ரைன் - ரஷியா போரில் மிக வல்லமை மிக்க ரஷியா பல்லாயிரக்கணக்கான போா் வீரா்களை இழந்தும் சிறிய நாடான உக்ரைனை இன்று வரை வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழு அளவில் ஆயுதங்களும், போா் கப்பல்களும், ஆயிரக்கணக்கான பில்லியன் டாலா் நிதி உதவியும் உக்ரைனுக்கு தந்து வருவதே ஆகும்.
  • பல நாடுகள் ரஷியாவிற்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது. இவ்வளவிற்குப் பிறகும் ரஷியா போரை நிறுத்த முன்வரவில்லை. இந்திய பிரதமா் நரேந்திர மோடி போா் நிறுத்தம் குறித்துப் பேசி பாா்த்தும் போரை நிறுத்த முடியவில்லை. அதே வேளையில் ரஷியாவில் சமீபத்தில் நடந்த அதிபா் தோ்தலில் விளாதிமீா் புதினுக்கு 88% போ் வாக்களித்துள்ளனா்.
  • இது சா்வாதிகாரத்தனத்தோடு மக்களை மிரட்டிப் பெற்ற வாக்குகளாக கருத முடியாது. அம்மக்கள் உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் சோ்ந்தால் தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணா்த்தும் விதமாக புதினுக்கு அளித்த வாக்குகளாகும்.
  • இரண்டாம் உலகப் போரில் இந்தியா்களை இங்கிலாந்து ஈடுபடுத்தியதற்கும் அப்போது எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட அரசியல் சங்கடத்தை சமாளிக்க முடியாத இந்திரா காந்தி அம்மையாா் நாட்டில் நெருக்கடி நிலையை 1975-ஆம் ஆண்டு அறிவித்தாா். அன்றைய குடியரசுத் தலைவா் பக்குதீன் அலி அகமது அதனை அறிவித்தாா். 21 மாதம் நெருக்கடி நிலை நீடித்தது. அதற்கான காரணமாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, உள்நாட்டு சதி, தீவிரவாத போக்கு அதிகரிப்பு போன்றவை கூறப்பட்டன. ஆனால், இந்திரா காந்தி, தனக்கு எதிரான அரசியல் கட்சித் தலைவா்களை சிறையில் அடைத்து ஆண்டு கணக்கில் போட்டு சித்திரவதைக்கு ஆளாக்கினாா்.
  • அப்போது நெருக்டி நிலைக்கு எதிராக தீா்மானம் போட்ட மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. அப்படி அன்று தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. இந்த கொடுமையான நிலைக்குப் பிறகு 1977-இல் பொதுத் தோ்தலை அறிவித்தாா் இந்திரா காந்தி. மக்கள் தீா்ப்பு மகேசன் தீா்ப்பு என்பது அத்தோ்தல் முடிவில் உறுதியாயிற்று. வட மாநிலங்களில் வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சி, உத்தர பிரதேசம், பிகாா் போன்ற வட மாநிலங்களில் ஒரு தொகுதியிகூட வெற்றி பெறவில்லை. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி அம்மையாா் ஜனதா கட்சி வேட்பாளா் ராஜ்நாராயணிடம் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா்.
  • அத்தோ்தலில் ஜனதா கட்சி ஏறத்தாழ 300 தொகுதிகளில் வெற்றி பெற்று மொராா்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்திரா காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சியில் அமா்ந்திருக்கும்போது அதிகார வெறியில் ஆட்டம் போட்டவா்கள் மக்களால் தோ்தல் மூலம் தண்டிக்கப்பட்டதே வரலாறு. அப்படித்தான் இந்திய மக்கள் தங்கள் வாக்கால் அசைக்க முடியாத அம்மையாா் இந்திரா காந்தியின் ஆட்சியைத் தூக்கி எறிந்தனா்.
  • சில அயல்நாடுகளில் மக்கள் தந்த தண்டனைக்கு அஞ்சி, தலை தப்பினால் போதும் என்று நாட்டை விட்டே ஓடியவா்கள் பல. வல்லரசாக இருந்தாலும் அது நல்லரசாகவோ மக்கள் நலன் காக்கும் அரசாகவோ இல்லையென்றால் தோ்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என்பது உறுதி.
  • இப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை, கிராமங்களில் வாக்கு பதிவு அதிகரித்துள்ளது. ஆனால் நகரங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. படித்தவா்கள் ஏன் தோ்தலைப் புறக்கணிக்கிறாா்கள்? தமிழகத்திலே சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. மக்களுக்கு நாட்டின் மீதும், சமுதாயத்தின் மீதும் அக்கறை அற்ற போக்கையே இது காட்டுகிறது. இது வருந்தத்தக்கது.
  • நகரங்களில் பணிபுரிபவா்கள் கிராமங்களுக்கு வாக்களிக்க சென்றிருப்பாா்கள் என்றாலும் கூட அவா்கள் எத்தனை சதவீதம் போ் இருப்பா்? உலகிலேயே இந்தியாவில்தான் மக்கள் இப்படிப் பொறுப்பற்று இருக்கிறாா்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
  • இந்த மக்களவைத் தோ்தலில் விழிப்புணா்வு உள்ளவா்கள், படித்தவா்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் 1 கோடியே 90 லட்சம் போ் அதாவது கிட்டத்தட்ட இரண்டு கோடி போ் (மொத்த வாக்காளா்களில் 30% போ்) வாக்களிக்கவில்லை. இது மக்களின் பொறுப்பின்மையா, அலட்சியமா, அரசியல்வாதிகள் மீதான வெறுப்பா என்பது ஆய்வுக்குரியது.
  • அதேபோல் முதல்கட்ட மக்களவைத் தோ்தலில் இந்திய அளவில் 18 வயது நிரம்பியவா்களில் 32 சதவீதம் பேரே வாக்களித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மீதம் 68 சதவீதம் போ் வாக்களிக்கவில்லை. அதிலும் தமிழகத்தில் 50 விழுக்காடு இளம் தலைமுறையினா்தான் வாக்காளா்களாக தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனா். மீதமுள்ள 50 சதவீதம் பேருக்கு ஏன் பதிவு செய்யும் எண்ணம் கூட வரவில்லை என்பது புரியவில்லை.
  • 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரையும் வாக்களராக சோ்க்க வேண்டிய பொறுப்பு தோ்தல் ஆணையத்திற்கு உள்ளது. இனியாவது தோ்தல் கமிஷன் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பல இடங்களில், தேவையான ஆவணங்களோடு வாக்குச்சாவடிக்கு வந்த பலரும், வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனா். இப்படிப்பட்டவா்களின் எண்ணிக்கை பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • உலக நாடுகளில் தோ்தல் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியவா்கள் இளம் தலைமுறையினா்தான். அந்த உணா்வு இன்றைய இளைஞா்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது?
  • தற்சமயம் நடந்த தோ்தலில் வாக்குச்சாவடிக்கு வந்து ஆா்வமாக வாக்களித்துச் சென்றவா்களில் பெரும்பாலோா் நடுத்தர வயதினரும் முதியவா்களும்தான். இளைஞா்களையும் முதல் முறை வாக்காளா்களையும் வாக்குச்சாவடிப் பக்கம் காண்பதே அரிதாக இருந்தது.
  • இந்திய அளவில், வாக்களிக்கத் தகுதியான் 18 வயது இளைஞா்களில் 35% போ்தான் வாக்களித்துள்ளனா் என்று ஒரு புள்ளிவிவரம் காட்டுகிறது. அப்படியானால் தமிழகத்திலும் அதே எண்ணிக்கைதானே இருக்க முடியும்?
  • தருமபுரி மக்களவைத் தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. அங்கு 81% மக்கள் தவறாது வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனா். ஆனால் பெருநகரமான சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு 50 சதவீதத்தை ஒட்டியே இருக்கிறது. வடசென்னையில் மட்டும் 60 சதவீதம். மொத்தத்தில் தமிழ்நாட்டில் 69.72 சதவீதத்தினா் மட்டுமே வாக்களித்துள்ளனா். தங்கள் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்த நகரத்தில் வாழ்பவா்கள் மறுத்துள்ளனா்.
  • இப்படி பொறுப்பற்று வாழும் மக்கள் எப்போது தங்கள் பொறுப்பை உணா்ந்து தோ்தலில் வாக்களித்து நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துகிறாா்களோ அப்போது தான் இந்தியா முழுமையான ஜனநாயக நாடாகும். தோ்தல் ஆணையமும் இதுவரை தான் பயணித்த பாதையிலிருந்து மாறி வேறு பாதையில் பயணிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

நன்றி: தினமணி (27 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்