பேரவைத் தலைவரின் இருக்கை
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொலிவுக்கு அணிசெய்யும் பேரவைத் தலைவரின் இருக்கை, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள பேரவைத் தலைவரின் இருக்கையின் வடிவமைப்பு போன்றது. இங்கிலாந்து நாடாளுமன்ற அவைத்தலைவராக இருந்தவர் ‘ஸ்பீக்கர்’ பிராண்ட். அவருடைய பேரனான லார்டு வில்லிங்டன் சென்னை மாகாண கவர்னராக இருந்தார். அவரும், அவரது மனைவியும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு அளித்த அன்புப் பரிசே இந்த இருக்கையாகும். 1922, மார்ச் மாதம் அவ்வாறு பரிசளிக்கப்பட்ட அழகான கலை நுணுக்கம் மிக்க இருக்கைதான் பேரவைத் தலைவரின் இருக்கையாகும்.
அதிமுகவின் ஆதிக்கம்
- சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் சேர்த்துக் கணக்கிட்டால், தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்ட கட்சி அதிமுகதான். காபந்து அரசாங்கத்தையும் சேர்த்து 11,117 நாட்கள், அதாவது 30 ஆண்டுகளுக்கும் சற்று அதிகம். அடுத்த இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. 1937-லிருந்து 1967 வரை மொத்தம் 10,827 நாட்கள், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள், காங்கிரஸ் ஆண்டிருக்கிறது.
முதல்வர் நாவலர்
- மிகக் குறைவான நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தவர் இரா.நெடுஞ்செழியன். இரண்டு முறையும் சேர்த்து மொத்தம் 21 நாட்களே அவர் முதல்வராக இருந்திருக்கிறார்.
அவைத்தலைவர் கட்சி சார்பற்றவர்
- அண்ணா முதலமைச்சராக இருந்த நேரத்தில் சி.பா.ஆதித்தனார் 5 மாதக் காலம்தான் பேரவைத் தலைவராக இருந்தார். தென்காசி இடைத்தேர்தலில் - பேரவைத் தலைவராக இருக்கும்போதே - தேர்தல் பணிகளிலே ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக அன்றைய முதலமைச்சர் அண்ணா, ஆதித்தனாரைப் பதவியிலிருந்து விலகச் சொன்னார்.
கணவன் - மனைவி
- பத்தாவது பேரவையில் பொன்னேரி தொகுதி உறுப்பினராக இருந்த ரவிக்குமாரும் திண்டுக்கல் தொகுதி உறுப்பினராக இருந்த நிர்மலாவும் தங்கள் பதவிக்காலத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். ஒரே பேரவையில் கணவன் - மனைவி இருவரும் உறுப்பினர்களாக இருந்தது இதுவே முதல் முறையாகும்.
பேரவைத் தலைவரை ஆளுநரே தேர்ந்தெடுத்தார்
- 1921-ல் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவானாலும், அமைச்சர்களை ஆளுநரே நியமித்தார். முதல் நான்கு ஆண்டுகளுக்கு சட்டமன்றத்தின் தலைவரையும் ஆளுநரே நியமித்தார். அதன் பிறகே, சட்டமன்றமே தன் தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று ஆயிற்று
கருணாநிதி – ஜெயலலிதா சாதனைகள்
- அதிக முறை முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா, மொத்தம் ஆறு முறை அவர் முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால், அதிக நாட்கள் முதல்வராக இருந்த சாதனை கருணாநிதியுடையது. அவர் 6,864 நாட்கள் முதல்வராக இருந்திருக்கிறார். அடுத்த இடத்தில் ஜெயலலிதா இருக்கிறார். அவர் 5,267 நாட்கள் முதல்வராக இருந்திருக்கிறார்.
இதுவரை…
- சுப்பராயலு ரெட்டியாரில் ஆரம்பித்து, தற்போது மு.க.ஸ்டாலின் வரை 22 முதல்வர்களைத் தமிழ்நாடு கண்டிருக்கிறது.
காலி மைதானத்தில் சிலம்பம்
- நாணயத்தின் ஒரு பக்கம் சேதமடைந்திருந்தாலும் அது செல்லாது. அது போன்றே எதிர்க்கட்சி இல்லாவிட்டாலும் ஜனநாயகம் இருக்காது. காலி மைதானத்தில் சிலம்பம் ஆடுவதற்கு ஒப்பாகிவிடும். முதலமைச்சருக்கு எந்த அளவுக்குப் பொறுப்பும் முக்கியத்துவமும் இருக்கிறதோ, அதைப் போன்றே எதிர்க்கட்சித் தலைவருக்கும் இருக்கிறது.
நானும் அண்ணாவும்
- அண்ணாதுரை சிறந்த பேச்சாளர். சிறந்த கருத்துகளை எடுத்துவைக்கும் ஆற்றல் படைத்தவர். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில், காங்கிரஸ் கட்சியையும் அதன் கொள்கைகளையும் தாக்கிப் பேசுவார். அதையும் பண்புள்ள முறையில் விளக்குவார்… இவ்வாறு விவாதங்கள் நடத்தினாலும், நானும் அண்ணாதுரையும் நெருங்கிய சினேகிதர்களாகவே இருந்துவந்தோம். அண்ணா உயிருள்ள வரையில், அந்த உறவு நீடித்தது. ஆகவே, அமைச்சரவை - நிர்வாகம் செயல்பட்ட விதமும், பேரவையில் நடந்த விவாதங்களும் இன்றைய சமுதாயத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
கண்ணியம் காத்த தலைவர்கள்
- எவ்வளவுதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் புரட்சித் தலைவரும் கலைஞரும் சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பதில் ஒரே கருத்துடையவர்களாக இருந்தனர். என்னுடைய பணிக்காலத்தில் ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், ஒருமுறை சட்டமன்றத்தில் சுப்பு, துரைமுருகன், இரகுமான்கான் மூவரும் எனக்கு அடங்காமல் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
- நான் உடனே, ‘உங்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சலிப்புடன் கூறினேன். உடனே கலைஞர் எழுந்து, ‘ஆண்டவன் நான் இருக்கிறேன், உங்களைக் காப்பாற்றுகிறேன்’ என்று கூறி அவர்களைக் கண்டித்தார். அவர் ஆண்டவன் என்று சொன்னது அவர் தமிழகத்தை ஆண்டதை, இதேபோல ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்த திரு.சவுந்திரபாண்டியன் ஒரு பிரச்சினையில் தலைவருக்கு அடங்காமல் பேசிக்கொண்டே போனார். அவரை நான் கடுமையாக விமர்சித்து அமரவைத்தேன். இதற்காக புரட்சித்தலைவர் அவர்கள் என்னைப் பாராட்டினார். அந்த அளவிற்கு புரட்சித் தலைவரும் கலைஞரும் சபை கண்ணியத்தைக் காப்பதில் ஒற்றுமையாயிருந்தனர்.
நன்றி: தி இந்து (02 – 08 – 2021)