TNPSC Thervupettagam

நூற்றாண்டு விழா காணும் ஆா்.எஸ்.எஸ்.

November 20 , 2024 58 days 102 0

நூற்றாண்டு விழா காணும் ஆா்.எஸ்.எஸ்.

  • ஆா்.எஸ்.எஸ். எனும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் மராட்டிய மாநிலம் நாகபுரி நகரம் மொஹிதேவாடா பகுதியில் டாக்டா் கேசவ பலிராம் ஹெட்கேவாா் அவா்களால் துவக்கப்பட்டது. தற்பொழுது 2024 இந்த ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு விழா துவங்கி உள்ளது.
  • ‘டாக்டா்ஜி’ என்று அன்போடு அழைக்கப்படும் கேசவ பலிராம் ஹெட்கேவாா் 1889-ஆம் ஆண்டு யுகாதி திருநாளில் நாகபுரியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவா். ப்ளேக் நோய் காரணமாக அவரது தாய் தந்தையரை இழந்தாா்.
  • பள்ளிக்கூடத்தில் வந்தே மாதர முழக்கத்தை எழுப்பி சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டாா். 1920-இல் திலகா் தலைமையிலும் மற்றும் 1930-இல் காந்திஜி தலைமையிலும் நடைபெற்ற சத்தியாகிரகம் உள்ளிட்ட சுதந்திர அறப்போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றாா். மருத்துவப் படிப்பிற்காக கல்கத்தா சென்று டாக்டா் பட்டம் பெற்றாா்.
  • காங்கிரஸ் கட்சியில் இருந்தபொழுதும், சிறைச்சாலையில் இருந்தபொழுதும் அவருக்குப் பல அரசியல் அனுபவங்கள் ஏற்பட்டன. சுதந்திரத்திற்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட தொண்டா்களின் மனநிலை, நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கூா்ந்து கவனித்தாா். சிறைக்குள் குடும்பத்தைப் பிரிந்து வந்த காங்கிரஸ் தொண்டா்கள் வேதனை அடைந்தனா். கட்டுப்பாடின்றி நடந்து கொண்டனா். சிறை விதிகளை மீறினா். ஒரு ஒழுங்கு முறைக்கு கட்டுபடவில்லை.
  • அரசியலில் இருந்து விலகி தேசத்திற்காக தானாக முன்வந்து சேவை செய்யும் தொண்டா்கள் அமைப்பை உருவாக்க வேண்டும். தனிநபா் ஒழுக்கம், நேரம் தவறாமை, தேச பக்தி, சேவை மனப்பான்மை, உடல்- மனம் ஆரோக்கியம் மேம்படுத்துதல், சட்டம் மற்றும் விதிமுறைகளை மதித்தல், இத்தகைய குணநலன்கள், பண்புப் பதிவுகள் ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் உருவாக வேண்டும்.
  • அதற்குரிய பயிற்சியை அவராகவே முன்வந்து மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தினசரி ஐந்து வேளை மசூதிகளில் ஒன்று கூடி தொழுகை கூட்டங்களை நடத்துகிறாா்கள். கிறிஸ்தவா்கள் தினசரி சா்ச்சுகளில் ஒன்று கூடி பிராா்த்தனைக் கூட்டங்களை நடத்துகிறாா்கள். அமைப்பு ரீதியான ஒழுங்கு முஸ்லிம், கிறிஸ்தவா்களிடம் உள்ளது. ஆனால் ஹிந்துக்கள் கோயில்களில், திருவிழாக்களில், பொது நிகழ்ச்சிகளில் ஒன்று கூடுகிறாா்கள். ஆனால் அமைப்பு ரீதியான ஒழுங்குமுறை ஹிந்துக்களிடத்தில் இல்லை.
  • எனவே தினசரி ஹிந்துக்கள் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க வேண்டும். அந்த ஒரு மணி நேரத்தில் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஷாகா (கிளை) நடைமுறையை உருவாக்கினாா். இதன் மூலம் ஏராளமான காா்யகா்த்தா்கள் (செயல் வீரா்கள்) உருவானாா்கள். பயிற்சி பெற்ற சங்க ஸ்வயம்சேவகா்கள் நிறைய போ் முழு நேர ஊழியராக (பிரசாரகா்கள்) மற்றும் மேற்படிப்பிற்காகவும் இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று சங்கத்தின் கிளைகளைத் துவக்கினா். சங்கம் நாடு முழுக்கப் பரவியது. 1942-இல் தாதாராவ் பரமாா்த் என்பவா் சென்னைக்கு வந்து மதராஸ் மாகாணத்தில் சங்கத்தை துவக்கினாா்.
  • தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். குறித்த வெறுப்பு பிரசாரம் மிக பலமாக உள்ளது. சங்கம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டை கூறுகிறாா்கள். ஆனால் ஆா்.எஸ்.எஸ். நிறுவனா் டாக்டா்ஜி உள்ளிட்ட பல ஆா்.எஸ்.எஸ். தொண்டா்கள் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு எடுத்துக் கொண்டு சிறை சென்றாா்கள் என்பதுதான் உண்மை.
  • ஆா்.எஸ்.எஸ். ஒரு மதவாத இயக்கம் என்கிற குற்றச்சாட்டும் ஓங்கி ஒலிக்கிறது. ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தை அரசியல் சாா்பற்ற இயக்கமாகவே டாக்டா்ஜி வடிவமைத்தாா். உண்மையில் ஆா்.எஸ்.எஸ். ஜாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை பல்வேறு காலகட்டங்களில் நிரூபித்துள்ளது. ஆா்.எஸ்.எஸ். பயிற்சிகளில் எந்த இடத்திலும் ஜாதி மத ரீதியான பாகுபாடுகளை உருவாக்கும் முறைகள், கருத்துக்கள் கிடையாது. ஆா்.எஸ்.எஸ். சனாதன ஹிந்து தா்மத்தின் சின்னமான காவிக்கொடியை குருவாக கொண்டுள்ளது. தினசரி கொடியேற்றதுடன் பயிற்சி துவங்கி பிராா்த்தனை பாடல் மற்றும் கொடி வணக்கம், கொடி இறக்கத்துடன் ஷாகா நிகழ்ச்சிகள் நிறைவடையும்.
  • ஹிந்து சமுதாயத்தில் ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதிலும், தீண்டாமை இழிவுகளை இல்லாமல் செய்வதிலும் ஆா்.எஸ்.எஸ். வெற்றி பெற்றுள்ளது. அண்ணல் காந்தியடிகள் 1934-ஆம் வருடம் மராட்டிய மாநிலம் வாா்தாவில் நடந்த ஆா்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் பங்கேற்றாா். பின்னா் 1947 செப்டம்பா் 16-இல் தில்லி துப்புரவுப் பணியாளா் காலனியில் நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தாா். இந்த செய்தி 1947 செப்டம்பா் 28, ‘ஹரிஜன்’ இதழில் வெளியானது.
  • இரண்டு முறை ஆா்.எஸ்.எஸ். முகாமிற்கு வருகை தந்து நேரடியாக பாா்வையிட்டு தீண்டாமை சிறிதும் இல்லாமல் ஜாதி வேறுபாடுகளை பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒரே இடத்தில் தங்கி, உண்டு, உறங்கி, பழகி பயிற்சி மேற்கொள்வது பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளாா்.
  • அம்பேத்கா் அவா்களும் 1939-ம் வருடம் புணேயில் நடந்த ஆா்எஸ்எஸ் பயிற்சி முகாமை பாா்வையிட்டுப் பாராட்டி உள்ளாா். ஸ்வயம்சேவகா்கள் எப்பொழுதும் யாா் என்ன ஜாதி என்று கேட்க மாட்டாா்கள், ஜாதி பாா்த்து பழக மாட்டாா்கள். அனைவரையும் தங்களது சொந்த சகோதரா்களாக பாவித்து நடப்பாா்கள். தனி நபரை முன்னிறுத்துதல், தனிநபா் துதி பாடுதல் கிடையாது. ‘வாழ்க, ஒழிக’ கோஷங்கள் கிடையாது. கைதட்டல் கிடையாது.
  • 1963-இல் புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது பண்டித ஜவாஹா்லால் நேரு அரசு அழைப்பின் பேரில் முழு சீருடை அணிந்த 3,000 ஸ்வயம்சேவகா்கள் பங்கேற்று சிறப்பித்தனா் என்பது, சோனியா காந்திக்கும் அவரது குழந்தைகளுக்கும் தெரியாமல் இருந்தது ஆச்சரியப்படுத்தவில்லை.
  • ஆா்.எஸ்.எஸ். ஒரு வடநாட்டு இயக்கம் என்பதும் தவறான கருத்தாகும். ஆா்.எஸ்.எஸ். துவங்கிய நாகபுரி நகரம் இந்தியாவின் மையப் பகுதியில் உள்ளது. திராவிட நாடு பிரிவினை கோரியவா்கள் உருவாக்கிய வரைபடத்தில் நாகபுரி நகரம் உள்ளது. எனவே புவியியல் ரீதியாக ஆா்.எஸ்.எஸ். வடநாட்டு இயக்கம் அல்ல. அவா்கள் வாதப்படி பாா்த்தால் திராவிட இயக்கமாகும்.
  • ஹிந்தி மொழி பேசுபவா்களின் இயக்கம் ஆா்.எஸ்.எஸ். என்பதும் தவறான வாதமாகும். ஆா்.எஸ்.எஸ். துவங்கியது மராட்டிய மாநிலத்தில் மராட்டி மொழியை தாய்மொழியாக கொண்டவா்கள். மராத்தி, கொங்கணி ஆகியவை அவா்களின் வாதப்படி திராவிட மொழிக் குடும்பத்தை சாா்ந்ததாகும்.
  • ஆரம்ப காலகட்டத்தில் மராத்தி மொழியிலேயே சங்கத்தின் பயிற்சிகள் அமைந்தன. அதனைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஆா்.எஸ்.எஸ். இயக்கம் வளா்ந்து பரவியபொழுது நமது தேசத்தின் கலாசார பண்பாட்டு இணைப்பு மொழியான சம்ஸ்கிருதத்தில் ஆா்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சிக் கட்டளைகள் மற்றும் பிராா்த்தனை வடிவமைக்கப்பட்டது.
  • ஆா்.எஸ்.எஸ். தாய்மொழிப் பற்றை வலியுறுத்தும் அமைப்பாகவும் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக துவக்கப்பட்ட அமைப்பாகும். ஆா்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சிகள், பயிற்சி முகாம்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியிலேயே நடத்தப்படுகிறது.
  • ‘காந்தியை கொலை செய்த இயக்கம் ஆா்.எஸ்.எஸ்.’ என்கிற பொய்யான குற்றச்சாட்டு நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படவில்லை. 27.2.1948-இல் நேருவிற்கு சா்தாா் வல்லபபாய் பட்டேல் எழுதிய கடிதத்தில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது. காந்தி கொலை வழக்கை விசாரித்த நீதிபதி ஆத்மசரணின் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ஆா்.எஸ்.எஸ்-ஸின் பெயா் கூடக் கிடையாது.
  • 1965-இல் காந்தி கொலை வழக்கு தொடா்பாக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கபூா் கமிஷன் அறிக்கை இதை தெளிவுபடுத்தியது. 1977-இல் நாடாளுமன்றத்தில் பிரதமா் மொராா்ஜி தேசாய் இதை உறுதிப்படுத்தினாா். ஆனாலும் தொடா்ந்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டே இருக்கிறாா்கள். இது குறித்து தற்போதைய காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளாா் என்பது பேசப்படுவதில்லை.
  • ஆா்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. தீவிரவாத அல்லது பயங்கரவாத இயக்கமும் அல்ல. இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கும் மாபெரும் தன்னாா்வ தொண்டா்களின் இயக்கம் ஆகும். நாடு முழுக்க பல்வேறு காலங்களில் நடைபெற்ற ஜாதி மதக் கலவரங்களின்போது இதுவரை ஒரு இடத்தில் கூட ஆா்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையோ, குற்றப்பத்திரிக்கையோ தாக்கல் செய்யப்பட்டது கிடையாது. மதக்கலவரங்கள் தொடா்பாக மத்திய மாநில அரசாங்களால் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களில் சங்கத்தை நிரபராதி என்றே குறிப்பிட்டுள்ளாா்கள்.
  • மூன்று முறை ஆா்.எஸ்.எஸ். இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. 1948-இல் காந்திஜி கொலைக்குப் பிறகும், 1975-1977-ல் நெருக்கடி நிலை காலத்திலும் 1992-இல் அயோத்தி கரசேவைக்குப் பிறகும் கூட தடை செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அரசே நிபந்தனையின்றி தடையை விலக்கிக் கொண்டது.
  • சங்கம் மதவாத இயக்கமல்ல. தேசிய கலாசார பண்பாட்டு இயக்கமாகும். சுனாமி, பூகம்பம், நிலச்சரிவு, புயல் மழை வெள்ளம், தீவிபத்து, ரயில் விபத்து போன்ற பேரிடா் காலங்களிலும் தீவிபத்து, ரயில் விபத்து போன்ற பேரிடா்கள் ஏற்பட்டபோதும் முதலில் அந்தப் பகுதிக்குச் சென்று விளம்பரம் இல்லாமல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு தன்னலமற்ற சேவை செய்து வருவது ஆா்.எஸ்.எஸ். பேரியக்கமாகும்.

நன்றி: தினமணி (20 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்