- கடந்த காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் நாவல்கள் மானுடத்தின் எண்ணற்ற களங்களைக் கண்டுள்ளன. இவை யாவும் மானுட விடுதலை நோக்கிய முன்னெடுப்புகள். நாவல்களின் இலக்கு ஒன்றாயினும் படைப்புகள் பன்மயப்பட்டவை.
- சாதியம், சமூக நீதி தொடங்கி, பெண்ணியம், தலித்தியம், மூன்றாம் பாலினம் ஊடாகப் புலப்பெயர்வு, விளிம்பு நிலை, சூழலியல் வரை இவற்றின் களங்கள் பரந்துபட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான முப்பத்திமூன்று நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பற்றி இரா.காமராசு இந்நூலில் விவாதிக்கிறார்.
- குறிப்பாக, கடந்த அரை நூற்றாண்டு நாவல் பரப்பை நமக்குக் கவனப்படுத்துகிறார். ஏனெனில், இக்காலப் பகுதியில்தான் பேசாப் பொருள்கள் பல பேசப்பட்டுள்ளன. முகமற்றவர்களின் முகங்கள் காட்டப்பட்டுள்ளன. குரலற்றவர்களின் குரல்கள் ஒலிக்கப்பட்டுள்ளன. அடித்தள மக்களின் உரிமைகள் பேசப்பட்டுள்ளன.
- அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் ஒதுக்குதலும் குற்ற உணர்வுக்குரியவை என்று உணர்த்தப்பட்டுள்ளன. இவ்வகை நாவல்களைக் காமராசு ‘பண்பாட்டு எழுத்து’ எனும் வகையாக முன்னெடுக்கிறார். இந்த எழுத்து வகை மானுட விடுதலையையும் பண்பாட்டையும் பேசுகின்றது என வரையறுக்கிறார்.
- இந்த நூலில் காமராசு தேர்ந்தெடுத்துள்ள நாவலாசிரியர்களும் அவர்களின் கலாபூர்வமான எழுத்தும் மிக முக்கியமானவை. இவை தமிழகத்தின் வட்டாரப் பண்பாடுகளின் பன்முகங்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. கிளையாறுகள் ஒன்றிணைந்து ஜீவநதி ஆவதுபோல், பிரதேசங்களே தேசமாக உருவெடுக்கின்றன. தமிழகம் குறைந்தது ஆறு வட்டாரங்களைக் கொண்டுள்ளது. இந்த வட்டார நாவல்களின் கண பரிமாணங்களை இந்நூல் பண்பாட்டுரீதியில் பேசுகிறது.
- மானுட விடுதலை என்பது நீண்ட நெடுந் தொலைவில் எட்டாக் கனியாக உள்ளது. அதை நோக்கிய பயணம் எளிதல்ல. இச்சூழலில் இந்த நாவல்களின் முன்னெடுப்புகள் முக்கியமானவை. மற்ற படைப்புகளைக் காட்டிலும் நாவல்கள் விரிவும் முழுமையும் நோக்கியவை. கூடவே காலம், இடம், சமூகரீதியாகத் தமிழகத்தின் குறுக்கு நெடுக்கை இத்தொகுப்பில் மிகுந்த கவனத்தோடு காட்சிப்படுத்தியுள்ளார் காமராசு.
- தமிழ் நாவல் வரலாறு ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தில் (1879) தொடங்குகிறது. நூற்றி நாற்பத்தி நான்கு ஆண்டு கால வரலாற்றில் இறுதி 40-50 ஆண்டுகளே இத்தொகுப்பின் காலம். தமிழ் நாவல்கள் அண்மைக் காலத்தில் பேசாப் பொருள்களைப் பேசத் துணிந்ததற்குப் பின்காலனியச் சூழலும் ஒரு முக்கியக் காரணமாகிறது.
- தமிழ்ச் சமூகத்தை வரலாற்றுச் சூழலுக்குள் வைத்து வாழ்க்கைப் போராட்டத்தைப் பேசத் தொடங்கியது ‘பஞ்சும் பசியும்’ நாவல். யதார்த்தவாத நாவல்களைவிட மானுட சமத்துவத்தையும் விடுதலையையும் பேசும் நாவல்களையே காமராசு இங்கு கவனப்படுத்துகிறார்.
- இதனால், தமிழ் அழகியல் என்ற கடந்த காலக் கருத்து உடைக்கப்பட்டுச் சோஷலிச அழகியல், எதிர் அழகியல், விளிம்பு நிலை அழகியல், தலித் அழகியல், பழங்குடி அழகியல், பால்புதுமையர் அழகியல், நாட்டார் அழகியல் எனப் பன்மயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகை மாதிரிக்கும் குறைந்தது ஓரிரண்டு படைப்புகளைக் காட்டி விவாதிக்கிறார் காமராசு. காலம் நிகழ்த்தியுள்ள இந்த அழகியல் பன்மயங்கள் தமிழ் நாவல் வளர்ச்சியோடு ஒப்பு நோக்கத்தக்கவை.
- தமிழ் நாவல்களின் சமகால செல்நெறிகளின் திறவுகோலாகவும் இந்நூல் திகழ்கிறது. தமிழ் நாவல்களில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுவித முயற்சிகள் நிகழ்ந்துவருகின்றன. சமூக மெய்ம்மைகளை (social facts) முன்னிறுத்தும் இனவரைவியல் நாவல்கள் இந்தப் புதிய முயற்சிகளில் முக்கியமானவை.
- இத்தகு நாவல்களின் தனித்துவங்களைக் காமராசு துல்லியமாக அடையாளப்படுத்துகிறார். கூத்தாடிப் பெண்களை முன்னிறுத்திப் படைக்கப்பட்ட நாவலை விவாதிக்கும் முறைமை இனவரைவியலின் நுட்பங்களைக் காட்டுகிறது. இந்த வகைமையில் இன்னும் சில நாவல்களையும் காட்டுகிறார்.
- இந்தத் தொகுப்பில் காமராசு தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட எல்லா படைப்புகளையும் பண்பாட்டு நோக்கில் அணுகியுள்ளார். ஒவ்வொரு நாவலையும் பண்பாட்டுப் பனுவலாகக் காட்சிப்படுத்துதல் என்பது ஒரு புதிய இலக்கிய வரைவியலாகும். அந்த வகையில் இந்த நூல் ஒரு கண் திறப்பு எனலாம்.
- இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனை நாவல்களும் மிக முக்கியமானவை; மானுட விடுதலையைப் பேசுபவை. இதனைப் பல படைப்பாளிகள் சமூகரீதியில் அணுகியுள்ளனர். சமூகப் பிரக்ஞையின் தாக்கம் இவர்களிடம் இருந்துள்ளது. இன்னும் சிலர், பண்பாட்டுரீதியில் அணுகியுள்ளனர். இரண்டுமே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். இவை பரஸ்பரம் சார்ந்து நிற்பவை. சில படைப்பாளிகள் இரண்டு அணுகுமுறைகளையும் கலந்து எழுதியுள்ளனர். ஆனால், அனைத்து நாவல்களையும் பண்பாட்டுப் பனுவலாகக் காட்டுகிறார் காமராசு.
- தமிழின் மிக முக்கியமான இந்த நாவல்கள் காலத்தால் விளைந்தவை. மாறி வரும் வரலாற்றுச் சூழலை இவை தகவமைத்துள்ளன. மானுட வாழ்க்கை மேலும் மேலும் சமநிலை அடைய வேண்டும் என்பதற்கான புதிய தடங்களை இந்தத் தமிழ் நாவல்கள் காட்டுகின்றன. படைப்புகளில் நாவல் புதுமையான கலை. இதன் பன்மயத்தை இந்த நூல் பண்பாட்டு எழுத்தாகப் பேசுகிறது.
நன்றி: தி இந்து (15 – 07 – 2023)