TNPSC Thervupettagam

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்

November 26 , 2023 413 days 283 0
  • நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளையில் நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.
  • சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய் வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்தவும் முடியாது. அதே வேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும்.

காரணம் என்ன

  • நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு (Myocardial Infarction). இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால், உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
  • ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தம் கொண்டு செல்லும் கொரோனரி தமனிக் குழாய்களில் (Coronary Arteries) கொலஸ்ட்ரால் படிந்து அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும் இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.
  • இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவு கிடைக்காமால் அழியத் தொடங்கும். அந்தநேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகின்ற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.

இதய வலி - அறிகுறிகள்

  • மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு - அறிகுறிகள்

  • சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத்திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).

இதய வலியைத் தூண்டும் சூழல்கள்

  • இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் உதவுகின்றன. அவை: பரம்பரை. அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை. அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு. குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது. உயரமான இடங்களுக்குச் செல்வது. (எ.க) மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது. மன அழுத்தம். அதிகமாக உணர்ச்சிவசப்படுவது. (எ.க) கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை.

யாருக்கு அதிக வாய்ப்பு

  • புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகுக் கொழுப்பு, சர்க்கரை நோய், இதயத் தசை அழற்சி நோய் போன்ற நோயுள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றி கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர்கள் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இப்போது இந்தப் பட்டியலில் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.

நன்றி: அருஞ்சொல் (26 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்