TNPSC Thervupettagam

நேதாஜி: தீரமிக்க வாழ்க்கை

January 22 , 2021 1461 days 724 0
  • நேதாஜியின் பிறந்த நாளைத் தேசிய வல்லமை தினமாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.
  • அடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கும் வங்க சட்டமன்றத் தேர்தலில், வங்காளிகளின் வாக்குகளை ஈர்ப்பதற்காகவே நேதாஜி இதுவரை இல்லாத அளவுக்கு ஒன்றிய அரசால் நினைவுகூரப்படுகிறார் என்றொரு விமர்சனமும் எழுந்துள்ளது.
  • 2016 சட்டமன்றத் தேர்தலையொட்டி நேதாஜி தொடர்பான ஆவணங்கள் ஒன்றிய அரசால் பொதுப் பார்வைக்கு வைக்கப்பட்டபோதும் இதே விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளில் அரசியல் கணக்குகளும் இருக்கலாம்.
  • தவறில்லை. ஆனால், தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் வாழ்க்கையைக் குறித்து அதிகாரபூர்வமான ஆவணங்கள் வெளிவருவதும், அவர் தேசத்தின் பெருமிதமாக நினைவுகூரப்படுவதும் எல்லா வகையிலும் மிகவும் பொருத்தமானது.
  • நேதாஜி வகுத்த போர் வியூகங்கள், அவற்றில் அவர் அடைந்த வெற்றி தோல்விகள் ஆகியவற்றைக் காட்டிலும் அவரது மரணம் குறித்த விசாரணை கமிஷன்களின் அறிக்கைகளும் அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளுமே இன்னும் முடிவடையாத விவாதங்களாக நீண்டுகொண்டிருக்கின்றன.
  • வரலாற்றின் புதிர் முடிச்சுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது அவரது மரணம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் தனது எழுத்திலும் பேச்சிலும் இந்தியாவுக்கு எத்தனையோ வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறார். அவற்றைப் பின்பற்றுவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

சாகச நாயகன்

  • நேதாஜி என்று அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், ஒரு சாசகக்காரர் என்பதற்காகவே பெரிதும் விரும்பப்படுகிறார்.
  • வீட்டுக் காவலிலிருந்து தப்பித்து ராணுவப் படைக்குத் தலைமையேற்று அவர் நடத்திய போர் வெற்றிபெறாமல் போயிருக்கலாம்.
  • ஆனால், அது கதைகளில் மட்டுமே நாம் சந்தித்துவந்த சாகசங்களை எல்லாம் உண்மையாக்கிவிட்டது.
  • லண்டன் சென்று படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற நிலையிலும் அந்தப் பணியைத் தூக்கியெறிந்துவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர் என்பதாலேயே அவர் தலைவராகிவிடவில்லை.
  • கல்லூரிப் பருவத்திலேயே வெள்ளையினத்தைச் சேர்ந்த பேராசிரியர்களின் நிறவாதப் போக்கை எதிர்த்து மாணவர்களை ஒன்றுதிரட்டியவர்.
  • காலரா பெருந்தொற்றுக் காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து களப்பணிகளில் ஈடுபட்டவர். இறந்தவர்களின் பிணங்களை நண்பர்களுடன் தூக்கிச்சென்று இறுதிச் சடங்குகளைச் செய்தவர்.
  • அதனால்தான் மிகவும் இளம் வயதிலேயே, அவர் கல்கத்தா மேயராகவும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  •  பார்வைக் குறைபாடு என்று ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அந்த இளைஞர் பின்பு ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தினார் என்பது தமது முயற்சிகளில் உளம் சோர்ந்த இளைஞர்களுக்கெல்லாம் உற்சாகமும் ஊக்கமும் தரும் அனுபவப் பாடம்.

தமிழர்களின் மனம்கவர்ந்தவர்

  • விவேகானந்தர், தாகூர், அரவிந்தர் போலவே நேதாஜியும் தமிழகத்தின் மனம்கவர்ந்த வங்க ஆளுமை. சென்னைச் சிறையில் சுபாஷ் அடைக்கப்பட்டது, பின்னாளில் இந்திய தேசிய ராணுவம் உருவாவதற்கு ஓர் வலுவான அடித்தளத்தை உருவாக்கியது.
  • காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட நேரத்தில், தான் தொடங்கிய பார்வர்டு பிளாக் கட்சிக்காக அவர் சென்னையிலும் மதுரையிலும் பேசியபோது மக்கள் வெள்ளம் கரைபுரண்டது வரலாற்று நிகழ்வு.
  • சிங்கப்பூரில் அவர் இந்திய தேசிய ராணுவத்துக்குத் தலைமையேற்றபோது ராணுவத்துக்காகத் தங்களது நகைகளைக் கழற்றிக் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்ப் பெண்கள். ராணுவத்தில் ஜான்சி ராணி பெயரிலான பெண்கள் படைப் பிரிவுக்குத் தலைமையேற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த லெட்சுமி.
  • காந்தியின் அகிம்சைப் போராட்ட முறைக்கு மாறான ஒரு வழிமுறையை சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்துகொண்டார். இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதில் இருவருக்கும் இடையே எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை.
  • அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழிமுறைகள் மட்டுமே வேறு வேறு. விடுதலை பெற்ற இந்தியாவில் வெவ்வேறு சமய நம்பிக்கைளைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றே இருவருமே மனதார விரும்பினார். நேதாஜியின் சிறைக் கடிதங்கள் இந்த சமய நல்லிணக்க உணர்வுக்கு ஆதாரமாக இருக்கின்றன.

இளைஞனின் கனவு

  • சிறைச்சாலைகளிலிருந்து நேதாஜி எழுதிய கடிதங்கள் சிறை இலக்கியங்களில் தவிர்க்கவியலாத இடத்தைப் பெறுபவை. தனது அரசியல் ஆசான் சித்தரஞ்சன் தாஸைக் குறித்து அவர் எழுதிய பகுதிகள், நேதாஜியின் மதச்சார்பற்ற கொள்கையை அறிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன. அவரது வார்த்தைகளிலேயே அதைப் பார்ப்போம்.
  • இந்தியாவிலுள்ள சமயங்கள், சம்பிரதாயங்கள், வகுப்புகள் யாவும் பரஸ்பரமாக ஒற்றுமைப்பட்டு, ஜாதி தர்மம், வகுப்பு இவற்றை மீறி இந்தியர் என்ற பெயரில் நாம் ஸ்வராஜ்ய இயக்கத்தில் சேர வேண்டுமென்ற ஆசையை அவர் (சித்தரஞ்சன் தாஸ்) சாவளவும் போஷித்துவந்தார்.
  • உடன்படிக்கையினால் சமய ஒற்றுமையோ வகுப்பு ஒற்றுமையோ ஏற்படாது. இவையெல்லாம் உயர்ந்த உணர்ச்சிகளினால் ஏற்பட வேண்டுமேயொழியக் கட்டுதிட்டங்களினால் ஏற்படமாட்டாஎன்று சொல்லி அவருடைய கொள்கை வெறும் ஆகாயக் கோட்டையென்று அசட்டை செய்தனர் சிலர்.
  • ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காது போனால் அரை நிமிஷங்கூட நாம் இவ்வுலகில் வாழ்வை நடத்த முடியாது. இந்த மனித சமூகம் அத்தகையதோர் ஒற்றுமை இராவிட்டால் அழிந்தே போய்விடும் என்று தேசபந்து அவர்களுக்குப் பதிலளித்தார்.
  • இல்லறத்திலும் சரி, நண்பர்களிடமும் சரி, சமூக வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, ஒவ்வொரு நிமிஷமும் மதபேதங்களில் ஒரு சமரசம் ஏற்படாவிட்டால் ஒன்றுபட்டு மனிதரால் வாழ முடியாது. உலகத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு வாணிபம் நடப்பதுகூட ஒரு உடன்படிக்கையில் பேரில்தான். அன்பு அனுதாபம் இவற்றின் வாசனையே இராது போனால் உலகத்தில் ஒன்றுமே கைகூடாது.” (தமிழில்- .நா.குமாரஸ்வாமி)
  • சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை சரிதத்தை இன்று படிக்கிறபோது நம்முடைய சம காலத்திய அரசியல் காட்சிகள் முரண்களாய் நெருடிக்கொண்டே இருக்கின்றன. வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரு கூறுகளாக்கிய வைஸ்ராய் கர்ஸனின் முயற்சிக்கு எதிராக அன்று இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து நின்றனர்.
  • அந்த ஒற்றுமை உணர்வே தேசிய இயக்கத்தைத் தீவிரப்படுத்தியது. சுதேசி இயக்கத்தை வளர்த்தெடுத்தது. அதே வங்கத்தை இன்று தேசியத் தலைவர்களின் பெயராலேயே சமயரீதியில் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடப்பதுதான் வேதனை.

ஜனவரி 23: நேதாஜியின் 125-வது பிறந்த நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (22 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்