TNPSC Thervupettagam

நேபாளத்தின் நேசக்கரம்

November 14 , 2020 1352 days 627 0
  • பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே இந்திய - நேபாள உறவில் ஏற்பட்டிருக்கும் திடீர் திருப்பம் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.
  • வழக்கமான நிகழ்வுதான் என்றாலும்கூட, கடந்த வாரம் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி  மனோஜ் முகுந்த் நரவணே நேபாளத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
  • நேபாளத்தின் தலைமைத் தளபதி இந்திய ராணுவத்தில் "ஜெனரல்' பதவி வகிப்பதும், அதேபோல இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி நேபாள ராணுவத்தில் ஜெனரலாக அங்கீகரிக்கப்படுவதும் நீண்டநாள் மரபு. அந்த மரபு தொடர்கிறது.
  • நேபாளம் எழுப்பிய வரைபட சர்ச்சை இரு நாடுகளுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. அதுமுதல் கடந்த ஆறு மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கடுமையான அழுத்தம் காணப்பட்டது.
  • கடந்த மாதம் இந்தியாவின் "ரா' உளவுத் துறையின் தலைவர் சமந்த் கோயலின் நேபாள விஜயம் முதலாவது திருப்புமுனை என்றால், இப்போதைய ராணுவத் தலைமைத் தளபதியின் விஜயம் சுமுக நிலையை நோக்கி உறவு திரும்புவதன் முக்கியமான அடுத்த கட்டம் என்று கருதலாம்.
  • இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த நேபாளப் பிரதமர் கே.பி.ஓலி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி வருகிறார் என்பது தெளிவாகிறது.
  • இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையை ஜெனரல் நரவணேயின் விஜயம் தீர்த்துவிடாது என்றாலும்கூட அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு சமந்த் கோயல், நரவணே இருவரும் வழிகோலியிருக்கிறார்கள்.
  • இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இந்திய - நேபாள நட்புறவு எப்போதும்போலத் தொடர வேண்டும் என்றும் நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் ஓலி, ஜெனரல் நரவணேயிடம் தெரிவித்திருப்பது உண்மையிலேயே எதிர்பாராத திருப்பம்.
  • கடந்த மே மாதம் லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவங்கள் பதற்ற நிலையில் இருந்தபோது, நேபாளம் தனது பங்குக்கு இந்தியாவின் சில பகுதிகளை உரிமை கோரியது.
  • 17,060 அடி உயரத்தில் உள்ள லிபு லேக் கணவாய் இந்தியாவின் உத்தரகண்டையும் திபெத்தையும் இணைக்கும் பகுதி. லிப் லேக்கின் தெற்குப் பகுதியில் உள்ள காலாபானி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • காலாபானி, லிபு லேக், லிம்பியாதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடத் தொடங்கியிருப்பதன் பின்னணியில் சீனா செயல்படுகிறது என்று இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் நரவணே தெரிவித்தது நேபாளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
  • அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டார் பிரதமர் ஓலி. புதிய வரைபடம் பள்ளி பாடப் புத்தகங்களில் சேர்க்கப்பட்டது.
  • முன்னாள் நேபாள பிரதமர்களான புஷ்பகமல் தாஹால் என்கிற பிரசண்டா, மாதவ் குமார் நேபாள், ஜலநாத் கனால் ஆகிய மூவரும் பிரதமர் ஓலி சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார், கட்சியின் மூத்தத் தலைவர்களைக் கலந்தாலோசிப்பதில்லை, அதனால் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
  • தன்னைப் பதவியிலிருந்து அகற்ற தில்லியில் தீட்டப்பட்ட சதித்திட்டம் என்று அதை வர்ணித்தார் பிரதமர் ஓலி.
  • இப்போது பிரதமர் ஓலியின் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பள்ளி பாடப் புத்தகங்களில் இணைக்கப்பட்ட புதிய வரைபடம் அகற்றப்பட்டு விட்டது.
  • இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதிக்கு வழக்கமான அங்கீகாரம் தரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ஈஸ்வர் பொக்ரேல் அகற்றப்பட்டிருக்கிறார். பிரதமர் ஓலி பாதுகாப்பு துறையையும் தன் வசம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
  • உள்நாட்டு அரசியல் நிர்பந்தங்கள்தான் பிரதமர் ஓலியை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. 
  • நேபாள தேசிய உணர்வைத் தூண்டி விடுவதன் மூலம், தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள அவரது வரைபட அறிவிப்பு தேவைப்பட்டது.அதற்கு சீனாவின் ஆதரவையும் அவர் நாடினார். இப்போது சீனாவை நம்பியிருப்பது தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், உள்நாட்டு உணர்வுகளுக்கும் சாதகமாக இருக்காது என்பதை உணரத் தொடங்கி விட்டார்.
  • நேபாளத்தின் சில பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாட முற்பட்டிருக்கும் நிலையில், திபெத்தைப் போல நேபாளத்தையும் தன்வசப்படுத்திக் கொள்ளுமோ என்கிற அச்சம் பரவலாக நேபாளத்தில் எழுந்திருக்கிறது.
  • எல்லையை முற்றிலுமாகத் திறந்துவிட்டு இந்தியாவுக்குள் நுழைவதற்கும் வாழ்வதற்கும் நாம் வழிகோலியிருப்பது போல, சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை நேபாளம் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டது.
  • மத ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் இந்தியாவுடனான தொடர்பை ஒருநாளும் முறித்துக்கொள்ள முடியாது என்பதும், இந்தியாவுடனான பொருளாதாரப் பாதுகாப்புத் தொடர்புகள் நேபாளத்துக்கு அத்தியாவசியமானவை என்பதும் நிதர்சன உண்மைகள்.
  • அதனால் நேபாளமும், அதன் பிரதமரும் இந்தியாவுடனான உறவை சீர்செய்து கொள்வதில் முனைப்புக் காட்டுவது வியப்பளிக்கவில்லை.
  • இதில் இந்தியாவுக்கும் சில கடமைகளும் நிர்பந்தங்களும் உண்டு. நேபாளமும் பூடானும் இந்தியாவை முற்றிலுமாக நம்பியிருக்கும் இணக்கமான அண்டை நாடுகள். அவற்றை என்ன விலை கொடுத்தாவது தக்க வைத்துக்கொள்வது அவசியம். நேபாளமும், பூடானும் சீனாவின் வலையில் விழுந்துவிடலாகாது!

நன்றி : தினமணி (14-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்