TNPSC Thervupettagam

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள்

March 2 , 2023 529 days 255 0
  • நேபாளத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் கட்சியின் தலைவரான பிரதமர் புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆளும் கூட்டணியின் இரு முக்கியக் கட்சிகளான சிபிஎன்-யுஎம்எல், ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி (ஆர்பிபி) ஆகியவை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • பெரும் அரசியல் நாடகத்துக்கு மத்தியில்தான் பிரசண்டா தலைமையிலான அரசு கடந்த டிச. 26-ஆம் தேதி பொறுப்பேற்றது. நேபாளத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்படுவது புதிதல்ல என்றாலும், அதிபர் தேர்தலை மையமாக வைத்து இப்போது புதிய அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார சீர்குலைவு, கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நேபாளத்துக்கு, இந்த அரசியல் நிலையற்றத்தன்மை நிச்சயம் நல்லதல்ல.
  • நேபாளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஎன்-மாவோயிஸ்ட் மையமும், முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா தலைமையிலான நேபாளி காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சியான முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் எதிரணியில் நின்றது.
  • மொத்தம் 275 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்றது. மாவோயிஸ்ட் மையம் 32 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான சிபிஎன் யுஎம்எல் கட்சி 79 இடங்களைப் பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நேபாளி காங்கிரஸின் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா மீண்டும் பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அக்கூட்டணியிலிருந்து பிரசண்டா விலகினார்.
  • ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகள் வீதம் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வகித்துக் கொள்ளலாம் என பிரசண்டா தெரிவித்த யோசனையை ஷேர் பகதூர் தேவுபா ஏற்றுக்கொண்டாலும், முதல் சுற்றில் பிரதமர் பதவியை தனக்கு அளிக்கும்படி பிரசண்டா கோரியதை ஏற்கவில்லை. இந்நிலையில், எதிர்க்கட்சியான சிபிஎன்-யுஎம்எல் கட்சியுடன் கைகோத்த பிரசண்டா, ஏழு கட்சிகள் கொண்ட கூட்டணியை ஏற்படுத்தி, பிரதமராகவும் ஆனார்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் முதல் இரு இடங்களைப் பிடித்த கட்சிகளின் வெற்றியில் பாதியளவு வெற்றியைக்கூடப் பெறாத பிரசண்டா, பிரதமர் ஆனது அவரது அரசியல் சாதுர்யத்தை வெளிப்படுத்தியது. நேபாளி காங்கிரஸ்- சிபிஎன்-யுஎம்எல் இடையேயான மோதலில் தனக்கான ஆதாயத்தைத் தேடிக்கொண்டார் பிரசண்டா என விமர்சனங்களும் எழுந்தன.
  • இப்போது நாட்டின் அதிபர் தேர்தல் வடிவத்தில் புதிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிபர் வித்யா தேவி பண்டாரி பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அதிபர் தேர்தல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளும் கூட்டணி சார்பில் சிபிஎன்-யுஎம்எல் கட்சியை சேர்ந்த சுபாஷ் நெம்பாங் வேட்பாளராக அறிவிக்கப்பட, கூட்டணி தர்மத்தை மீறி எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராம் சந்திர பௌடேலுக்கு ஆதரவைத் தெரிவித்தார் பிரதமர் பிரசண்டா.
  • இதனால் அதிர்ச்சியடைந்த சிபிஎன்-யுஎம்எல், ஆர்பிபி ஆகிய கட்சிகள், பிரசண்டா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளன. ராஷ்ட்ரீய ஸ்வதந்திர கட்சி (ஆர்எஸ்பி) என்ற மற்றொரு கட்சியும் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. இந்தக் கட்சிகளைச் சேர்ந்த 16 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
  • அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தனது முடிவு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என பிரசண்டாவுக்கு நன்றாகவே தெரியும். அவரது முடிவு, கூட்டணியை மீண்டும் மாற்றும் பிரசண்டாவின் அடுத்த உத்தி என சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். இதுபோல கூட்டணியிலிருந்து தங்களை வெளியேற்றும் பல முயற்சிகளை பிரசண்டா மேற்கொண்டார் என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.
  • கூட்டணியில் அங்கம் வகித்த மூன்று கட்சிகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ள நிலையில், பிரசண்டா தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பிரசண்டா உள்ளார். ஏழு கட்சிகள் கூட்டணியில் மூன்று கட்சிகள் விலகினாலும், மேலும் சில கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு எட்டு கட்சி கூட்டணியை உருவாக்கியுள்ளார் பிரசண்டா.
  • பிரதமராக பிரசண்டா நீடிப்பதற்கு 138 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. அதிபர் தேர்தலில் தங்களது வேட்பாளரை ஆதரிப்பதற்கு கைம்மாறாக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பிரசண்டாவுக்கு ஆதரவாக நேபாளி காங்கிரஸ் வாக்களிக்கும். இதனால், பிரசண்டாவின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இருக்காது.
  • சீனாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரசண்டா, நேபாள உள்நாட்டுப் போரின்போது 10 ஆண்டு காலம் அரசுக்கு எதிராகப் போராளியாகச் செயல்பட்டார். ஆனால், இப்போது பிரதமர் பதவியில் நீடிப்பதற்காக கொள்கையில் எல்லா சமரசத்தையும் செய்துகொண்டு நடத்தி வரும் போராட்டம், மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்கும் அவரது மதிப்பையும், நம்பகத்தன்மையையும் சீர்குலைத்துள்ளது.
  • அரசியல் ஆதாயத்துக்காக கூட்டணிகளை விருப்பம்போல் மாற்றிக்கொள்ளும் நேபாள அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கிறது.

நன்றி: தினமணி (02 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்