TNPSC Thervupettagam

நேரடி நியமனம் ரத்து: வரவேற்கத்தக்க முடிவு!

August 26 , 2024 143 days 181 0

நேரடி நியமனம் ரத்து: வரவேற்கத்தக்க முடிவு!

  • அரசுத் துறைகளின் செயலாளர்கள் பதவிகளுக்கான நேரடி நியமனம் (‘லேட்டரல் என்ட்ரி’) தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டிருந்த விளம்பரத்துக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை ரத்துசெய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
  • பல்வேறு அரசுத் துறைகளின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் என 45 பணிகளுக்கான நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை ஆகஸ்ட் 18 அன்று பல்வேறு பத்திரிகைகளில் யுபிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இது இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானது என்று காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
  • பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (எல்ஜேபி), ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆகிய கட்சிகளும் விமர்சித்தன. இந்நிலையில், அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுமாறு ஆகஸ்ட் 20இல் யுபிஎஸ்சிக்கு மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உத்தரவிட்டிருக்கிறார்.
  • அரசுத் துறைப் பணி நியமனங்களில் சமூக நீதியைக் கடைப்பிடிப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி கொண்டிருக்கும் அக்கறையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சுதனுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் ஜிதேந்திர சிங், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் நேரடி நியமன முறை இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
  • பாஜக கூட்டணிக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் (எல்ஜேபி), மக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்த்து இத்தகைய முடிவை அரசு எடுத்திருப்பதைப் பாராட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார். நேரடி நியமன முறை ஏற்கெனவே இருந்ததுதான். எம்.எஸ்.சுவாமிநாதன், மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியா, நந்தன் நீலேகனி உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் அரசுத் துறைகளில் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள்தான்.
  • மிக முக்கியமான திருப்புமுனைகளுக்கு வழிவகுத்தவர்கள் அவர்கள். அரசுத் துறைக்கு வெளியே இயங்கிவரும் திறமைசாலிகளைப் பல்வேறு துறைகளுக்குக் கொண்டுவந்து, அவர்களின் திறமையை தேச வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வது இந்த நேரடி நியமன முறையின் நோக்கமாகக் கூறப்படுகிறது.
  • அதேவேளையில், பாஜக அரசு தமது சித்தாந்தத்தைக் கொண்டவர்களை முக்கியப் பணிகளில் நியமிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதாகவும், இது இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்தானது என்றும் வைக்கப்பட்ட விமர்சனங்கள் புறந்தள்ளத்தக்கவை அல்ல.
  • சமூக நீதி மீதான அக்கறையால் நேரடி நியமன அறிவிப்பைத் திரும்பப் பெற்றதாகக் கூறும் மத்திய அரசு, 2018இல் எதிர்க்கட்சிகள், சமூகச் செயல்பாட்டாளர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அதை விரிவான வகையில் அமல்படுத்தத் தீர்மானித்தது கேள்விக்குரியது.
  • இதற்கு முன்னர் இணைச் செயலாளர்கள் மட்டும் நேரடி நியமன முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், காலப்போக்கில் இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் பதவிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது. தற்போதைக்கு, நேரடி நியமன முறையிலும் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக மத்திய அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
  • எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் வக்ஃபு வாரியத் திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது; ஒளிபரப்புச் சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவின் இரண்டாவது வரைவு திரும்பப் பெறப்பட்டது.
  • தற்போது நேரடி நியமன முறைக்கான விளம்பர அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. ஆக, கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளித்து, மத்திய அரசு தனது முடிவுகளைத் திரும்பப்பெறுவதும் ஆரோக்கியமான விஷயம்தான். இந்தப் போக்கு தொடர்வது ஜனநாயகத்துக்கு நல்லது!

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்