TNPSC Thervupettagam

நேர்மையான விசாரணையே குற்றங்களைக் குறைக்கும்

August 25 , 2024 95 days 107 0

நேர்மையான விசாரணையே குற்றங்களைக் குறைக்கும்

  • கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் ஆகஸ்ட் 9 அன்று வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அது குறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு உறுதியளிக்க வேண்டியிருந்தது.
  • பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்ற நிகழ்வுகள் எவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டாலும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க பற்பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. 2012இல் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட நிர்பயா வல்லுறவுக் கொலையை யொட்டியும் நீதிக்கான போராட் டங்கள் நடைபெற்றன. இனி வல் லுறவுக் குற்றங்கள் நடை பெறாத வகையில் சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது. ஆனால், நிர்பயா நிகழ்வுக்கு முன்னர் இருந்த நிலையே, அதற்குப் பின்னரும் நீடிப்பதைத்தான் கொல்கத்தா கொடூரமும் உணர்த்துகிறது.
  • குற்றம் நிகழ்த்தும் ஆணின் மனநிலை இக்குற்றங்களில் முக்கியக் காரணியாக உள்ளது. அதில் அவரது பங்கு, அவர் வளர்ந்த சூழலின் பங்கு, சமூகத்தின் பங்கு ஆகியவை கவனிக்கப்பட வேண்டியவை. பெண் குறித்த மனநிலையை ஆணிடம் மேம்படுத்துவது கல்வியில் ஓர் இன்றி யமையாத கூறாக இருக்க வேண்டும். அது குறித்த உரையாடல்களும் சீர்திருத்தங்களும் தேவை.

நீர்த்துப்போகும் விசாரணை

  • பெண்ணுக்கு எதிரான இதுபோன்ற குற்றச் செயல்களில், விசாரணையிலும் சட்டரீதியான அணுகுமுறையிலும் பல்வேறு நிர்வாகத் தரப்புகள் காட்டும் சுணக்கம்தான் மக்களின் அதிருப்திக்கும் கவலைக்கும் கொந்தளிப்புக்கும் காரணமாகிறது. வல்லுறவுக் குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப் படுவதற்கும் அவை மீண்டும் நடக் காமல் தடுப்பதற்கும் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடி, காவல்துறையிடமிருந்து தான் நிகழ வேண்டியிருக்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் அந்த முதல் அடியை எடுத்து வைக்கக் காவல் துறை தரப்பில் நேரும் தாமதம் வல்லுறவு என்னும் மிகச் சிக்கலான, ஆபத்தான குற்றத்தின் அடிப்படையையே நீர்த்துப் போகச்செய் கிறது. அனைத்துக் குற்றங்களுக்குமே தடயங்களை உயிர்ப்பாக வைத்துள்ள முதல் சில மணி நேரம் மிக மிக முதன்மையானது. வல்லுறவுக் குற்றங்களில் அவை நூறு சதவீதம் முதன்மையானவை எனச் சட்ட ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், காவல்துறையின் அலட்சியத்தால் அது தவறவிடப்படுகிறது. இதனால், குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்கள் தவறவிடப்படும் சூழல் உருவாகிறது.
  • நிர்பயா வழக்கையொட்டி, இந்தியாவில் வல்லுறவுக் குற்றங்களில் 26 சதவீதம்தான் நிரூபிக்கப் படுவதாகக் கூறப்பட்டது. சந்தேகத்துக்கு இடமே இல்லாதவகையில் பாலியல் வல்லுறவு நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்களில்கூடச் சரியான சட்ட நிவாரணம் கிடைக்கச் செய்யுமளவுக்கு சட்டங்கள் வலுவாக இல்லை. அதோடு காவல்துறையின் பலவீனமான விசாரணை நடவடிக்கைகள், தடயங் களைச் சேகரிப்பதில் சுணக்கம் ஆகி யவை நியாயம் கிடைக்கத் தடையாக உள்ளன. வல்லுறவுக் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் தேடித் தர வேண்டிய காவல்துறையே ஒரு பிரச்சினையாக மாறும் அவலம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
  • பெரும்பாலான வல்லுறவு வழக்குகளில் காவல்துறை, விசாரணை யைத் தொடங்குவதைக் காட்டிலும், இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த விழைவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 2012இல் டெல்லியில் நிகழ்ந்த 600க்கும் மேற்பட்ட வல்லுறவுக் குற்றங்களில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளின் அலட்சியம்

  • வல்லுறவுக் குற்றங்களை விசாரிப்பதில் காவல்துறைக்கு இருக்கும் ஒவ்வாமை, வளர்ந்த நாடுகளிலும் பேசுபொருளாக உள்ளது. வல்லுறவுக் குற்றங்களை விசாரிக்க அமெரிக்கக் காவல்துறையில் சில சாதனங்கள் தொகுப்பாக (Rape Kit) வழங்கப்பட்டிருக்கும். விசாரணை வழிமுறையை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்கள், ஆடைகளின் நூலிழைகள், முடி, ரத்தம், எச்சில், வியர்வை, விந்தணு போன்றவற்றைச் சேகரிப்பதற்கான பைகள் போன்றவை ஒவ்வொரு தொகுப்பிலும் இருக்கும். 2007இல் நாடு முழுவதும் உள்ள காவல்துறைப் பிரிவுகளில் இத்தகைய ஆயிரக்கணக்கான பைகள் ஆய்வு செய்யப் படாமலே இருந்ததாகச் செய்தி வெளியானது. பாஸ்டன் நகரத்தைச் சேர்ந்த மிஷெல் பௌட்லர் இதை அறிந்து கோபமும் வேதனையும் அடைந்தார். பொதுச் சுகாதாரத் துறை சார்ந்த தனியார் ஊழியரான அவர் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர். 1984இல் வீடு புகுந்து திருடிய இருவர், இவரை வல்லுறவு செய்தனர். அது குறித்த ஒரு சுருக்கமான விசாரணைக்குப் பின்னர் காவல்துறையிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. வழக்கின் நிலை பற்றிக் கேள்வி எழுப்பிய மிஷெலுக்கு மன உளைச்சலே எஞ்சியது.
  • இந்நிலையில் ஆய்வு செய்யப்படாத வல்லுறவுக் குற்ற ஆய்வு மாதிரிகள் காவல்துறை அலுவலகத்தில் சீந்துவார் இல்லாமல் கிடந்தது அவரை மனக்கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. “என்னை வல்லுறவு செய்தவர்கள் குறித்த தடயங்களும் அவற்றில் இருந்திருக்கக்கூடும். காவல்துறை அவற்றை உடனடியாக ஆய்வுசெய்து அடுத்த நடவடிக்கையில் இறங்கியிருந்தால், அவர்கள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவது தடுக்கப் பட்டிருக்கக் கூடும். பாஸ்டன் பகுதியில் என்னைப் போலப் பிற பெண்கள் பாதிக்கப்படாமல் தப்பித்திருப்பார்கள்” எனக் கூறினார் மிஷெல். 24 வயதில் நிகழ்த்தப்பட்ட கொடுமைக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிட்டாத துயரத்தில் இருந்த மிஷெல், இந்த நிகழ்வை வைத்தே ஒரு செயல்பாட்டில் இறங்கினார். 2013இல் ‘ரேப் கிட் புராஜெக்ட்’ என்கிற பரப்புரை மூலம் பலரிடம் சட்ட நடவடிக்கைகளில் உள்ள பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ‘வல்லுறவு ஒரு குற்றமா? - ஒரு நினைவு, விசாரணை மற்றும் அறிக்கை’ என்கிற நூலை 2020இல் எழுதினார். மிஷெலின் கேள்வி எளிமையானது: ‘வல்லுறவு சட்டப்படி குற்றம் எனில், எனது வழக்கு ஏன் விசாரிக்கப்படாமலே உள்ளது? எப்போது இந்நிலை மாறும்?’

அரசு தலையிட வேண்டும்

  • தொழில்நுட்ப நோக்கிலும் சட்ட ஒழுங்கிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இதுதான் நிலை எனில், இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய விசாரணைகள் எப்படி இருக்கும் என எளிதில் புரிந்துகொள்ளலாம். சட்ட வழிமுறைகளின்படி நடந்துகொள்ள காவல்துறை விரும்பினாலும், அதற்கும் பல தடைகள் உள்ளன. 2013 நிலவரப்படி, இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்குச் சேவை வழங்க ஏறக்குறைய 130 காவல்துறையினர் இருந்தனர். போதைப் பொருள்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. அலுவலகத்தின் தரவரிசைப் பட்டியலின்படி, காவல்துறைப் பணியாளர்களின் பற்றாக்குறையில் 50 நாடுகளில் இந்தியா 49 ஆம் இடத்தில் இருந்தது. மொத்தப் பணியாளர்களில் ஏறக்குறைய 80 சதவீதம் பேர் கான்ஸ்டபிள்களாக இருந்ததாகவும் அப்போது கூறப்பட்டது. கான்ஸ்டபிள் நிலையில் இருப்பவர்களால் குற்றங்களை விசாரிக்கவோ, அபராதம் விதிக்கவோ முடியாது. பாரா வேலைகள் மட்டுமே அவர்கள் செய்ய முடியும். சமூக நிர்வாகக் கட்டமைப்பை ஓர் உடலாகக் கருதினால், காவல்துறை என்பது கைகள் மட்டுமே. இக்கட்டமைப்பின் தலையாக இருக்கும் அரசுதான், காவல்துறை சீராகச் செயல்படும் சூழலை உருவாக்கித்தர வேண்டும். அதுதான் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.
  • பெரும்பாலான வல்லுறவு வழக்குகளில் காவல்துறை, விசாரணையைத் தொடங்குவதைக் காட்டிலும், இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த விழைவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்