TNPSC Thervupettagam

நேர்மையின் மறுபெயர் மொரார்ஜி

April 9 , 2022 1071 days 654 0
  • எல்லா அரசியல் கட்சிகளும் மாநாடுகள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கூட்டங்களை நடத்துகிறார்கள்.
  • மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்பதை காட்டுவதற்காக பணம் கொடுத்து ஆட்களை கூட்டங்களுக்கு அழைத்து வருகின்றன.
  • எளிமையான மாநாடு என்று எங்கும் காண்பது அரிது. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அரசியல் கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகளை அளிக்கத் தவறுவதில்லை.
  • ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தாங்கள் சொல்லியதை அக்கட்சிகள் மறந்துவிடுகின்றன. எதிர்க் கட்சிகளும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை.

மொரார்ஜி தேசாய்

  • நேர்மை என்பதை எந்த அரசியல்வாதிகளிடமும் காண்பது கடினம். வேட்பாளரிடம் பணம் இருக்கிறதா, தேர்தலில் செலவழிக்க முடியுமா என்பதை அறிந்த பிறகு வேட்பாளராக வாய்ப்பு தரப்படுகிறது.
  • தேர்தலில் ஓட்டுக்கு பணம் என்பது எல்லா கட்சிகளிடமும் பழக்கம் ஆகிவிட்டது.
  • எனவே வேட்பாளர் செலவழித்த பணத்தை நேர்மையாக இருந்தால் சம்பாதிக்க முடியாது என்று தெரிவதால், பதவிக்கு வந்தவுடன் நேர்மை தவறி பணம் சேர்த்து விடுகிறார்கள்.
  • அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் சொத்து குவிப்பு வழக்கு என நீதிமன்றம் அலைகிறார்கள். நேர்மையானவர்கள் அரசியலில் வெல்வது கடினம்.
  • அன்றைய காலகட்டத்தில் பல அரசியல் தலைவர்கள் கொள்கை ,நேர்மை, எளிமையை கடைப்பிடித்தார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்கிறது.
  • அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாரத பிரதமராக இருந்த பாரத ரத்னா மொரார்ஜி தேசாய் .
  • பிரிக்கப்படாத பம்பாய் மாநிலத்தின் முதல்வராக அவர் இருந்தபோது அவருடைய மகள் இந்து மருத்துவக் கல்லூரியில் இறுதித் தேர்வு எழுதினார்.
  • முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டியவர் தேர்வில் தவறி விட்டதாக அறிவிக்கப்பட்டது.
  • சக மாணவிகளால் இதை நம்பமுடியவில்லை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் படி இந்துவை வற்புறுத்தினர்.
  • இந்து தனது தந்தையிடம் அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை. "மறுமதிப்பீடு செய்து திருத்தி ஆசிரியரின் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, உரிய மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தாலும், நான் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகத்தான் உலகம் சொல்லும்.
  • நீ அடுத்த தேர்வுக்கு உன்னை சிறப்பாக தயாரித்து கொள்வதுதான் நல்லது' என்று தந்தை மொரார்ஜி தேசாய் சொல்லிவிட்டார்.
  • மனமுடைந்து போன இந்து தற்கொலை செய்து கொண்டார்.கீதையின் பாதையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தேசாய், தனது மகளின் இழப்பை மெüனமாய் தாங்கிக் கொண்டார்.
  • 1977-இல் மொரார்ஜி பிரதமர் ஆனதும் அவரது ஆதரவாளர்கள் இந்திரா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
  • ஆனால், தேசாயோ "தேர்தலில் தோற்கடித்ததன் மூலம் மக்கள் ஏற்கெனவே இந்திராவை தண்டித்து விட்டார்கள்.
  • வேறு தண்டனை தேவையில்லை. மக்களாட்சியில் தவறு செய்யும் தலைவருக்கு அதுதான் மிக அதிகமான தண்டனையாக இருக்க முடியும்' என்று கூறிவிட்டார்.
  • அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்திரா காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆவணங்களுடன் கோப்பு தயார் செய்து பிரதமர் மொரார்ஜி அனுமதிக்கு அனுப்பினார்.
  • படித்துப் பார்த்த தேசாய், இந்திராவுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் நடத்தப்படக் கூடாது என்று எழுத்து மூலமாக கருத்து தெரிவித்தார். அப்படிப்பட்ட கொள்கைவாதி தேசாய்.
  • ஒருமுறை மொரார்ஜி தேசாய் தங்கள் நாட்டுக்கு வர வேண்டுமென்று இங்கிலாந்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
  • அப்போதெல்லாம் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால், செல்பவர்கள் யாராக இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகுதான் வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்கும். ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கையற்றவர் தேசாய். தனது கொள்கைக்கு மாறாக நடக்க அவருக்கு விருப்பமில்லை.
  • "நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் வர அனுமதித்தால் தங்கள் நாட்டிற்கு வர சம்மதிக்கிறேன்' என்று இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
  • இங்கிலாந்து பிரதமர் அதற்கு ஒப்புக்கொள்ள, தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலே இங்கிலாந்து சென்றார். தான் காந்தி வழி வந்த தொண்டன் என்பதை ஆங்கில அரசுக்குப் புரிய வைத்தார் தேசாய்.
  • மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனவுடன் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை ரத்து செய்தார். எண்பது வயதில் பிரதமர் பதவியை ஏற்று நாட்டை வளமாக்கினார். மிக நேர்மையானவர். "காந்தியடிகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பே காந்தியவாதியாகத் திகழ்ந்தவர் தேசாய்' என "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை அவருக்கு புகழாரம் சூட்டியது.
  • பாகிஸ்தான் தேசாயின் நேர்மை, எளிமையை பாராட்டி பாகிஸ்தானின் மிக உயரிய விருதான "நிஷான் இ பாகிஸ்தான்' என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற இந்தியர் இவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.
  • பம்பாய் முதல்வராக, பாரதத்தின் நிதியமைச்சராக, பிரதமராக பணியாற்றிய தேசாய், தன் நெடிய வாழ்வின் இறுதி நாட்களில் பலர் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் காலம் கழித்தார்.
  • வீட்டின் உரிமையாளர் தொடுத்த வழக்கில், தேசாய் குடும்பம் வெளியேற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • அதிர்ச்சியிலும் அவமானத்திலும் உடைந்துபோன தேசாயின் மருமகள், மனநிலை பாதிக்கப்பட்டு மாடியிலிருந்து கீழே விழுந்து மரணத்தை தழுவிக் கொண்டார். இந்திய பிரதமராக இருந்த ஒருவருக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை, என்பது நாம் கண்முன்னே கண்ட நிஜம்.
  • எந்த மனிதனிடம் சத்தியம் உள்ளதோ அவன் உடலில் இறைவன் குடி கொண்டுள்ளான் என்பதை நிரூபித்தவர் மொரார்ஜி தேசாய்.
  • அவருக்கு 1994-இல் இந்திய அரசு பாரத ரத்னா விருது அளித்து பெருமை கொண்டது. மொரார்ஜி தேசாய், 1995-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள், தனது 100-ஆவது வயதில் மறைந்தார்.
  • வாழ்வில் எளிமையையும் நேர்மையும் எப்போதும் கடைப்பிடியுங்கள் என்று வாழ்ந்து காட்டிய வரை இன்றைய ஆட்சியாளர்கள் பின்பற்றினால் நாடு நலம் பெறும்.
  • நாளை (ஏப். 10) மொரார்ஜி தேசாய் நினைவு நாள்.

நன்றி: தினமணி (09 – 04 – 2022)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top