TNPSC Thervupettagam

நோபல் 2023 பொருளாதாரம் கருத்தடை மாத்திரையின் அமைதிப் புரட்சிக்கு அங்கீகாரம்

October 13 , 2023 408 days 233 0
  • அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றும் ஹென்றி லீ இருக்கைப் பேராசிரியர்கிளாடியா கோல்டினுக்கு இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காகஇந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார நோபல் பரிசுப் பட்டியலில், மதிப்புமிக்க பரிசை வென்ற மூன்றாவது பெண் கோல்டின்.
  • பேராசிரியர் கோல்டின் பொருளாதார வரலாற்றாசிரியர்; தொழிலாளர் பொருளாதார நிபுணரும்கூட. பெண் தொழிலாளர் பங்கேற்பு, வருமானத்தில் பாலின இடைவெளி, வருமானச் சமத்துவமின்மை, கல்வி, குடிவரவு,தொழில்நுட்ப மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது அவரது ஆராய்ச்சி. கோல்டினின் முக்கியமான இரண்டு படைப்புகளைக் கவனப்படுத்தலாம்.
  • தாக்கத்தை ஏற்படுத்திய அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஒன்று, பெண்களின் வாழ்க்கைச் சுழற்சி,அவர்களின் கல்வி நிலை, வேலைவாய்ப்பு சார்ந்த முடிவுகள், திருமண முடிவுகளில் கருத்தடை மாத்திரையின் தாக்கம் பற்றியது. இந்தக் கட்டுரை 2002இல், மதிப்புமிக்க அரசியல் பொருளாதார இதழில் (Journal of Political Economy) வெளியிடப்பட்டது.

கருத்தடை மாத்திரையின் ஆற்றல்

  • அமெரிக்காவில் 1970களில், கல்லூரிப் பட்டதாரிகளான இளம் பெண்கள் மத்தியில் கல்விப் பாதையின் தேர்வு, திருமணத்துக்கான வயது தேர்வு ஆகிய இரண்டிலும் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது. இந்த இரண்டு அம்சங்களும் கடந்தகாலத்திலிருந்து குறிப்பிடத்தக்க வேறுபாட்டை அடைந் திருந்தன.
  • எழுபதுகளில், அதிகமான இளம் பெண்கள் மருத்துவம், சட்டம் போன்ற நீண்ட காலத் தொழில்முறைப் பட்டப்படிப்புகளில் சேரத் தொடங்கினர். கல்லூரியில் இளம்பெண்கள் நுழைவது, நீண்ட காலத் தொழில்முறைப் பட்டங்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற புதிய போக்கை விளக்குவது புதிராக இருந்தது. பின்னோக்கிப் பார்த்தால், அமெரிக்காவில் பொருளாதாரப் புரட்சிக்கு இது வழிவகுத்தது, சமூகத்தை மாற்றியது.
  • புள்ளிவிவரத் தரவையும் பொருளாதார அளவீட்டு முறையையும் பயன்படுத்தி இந்த உறவை ஆராய்ந்த கோல்டினின் கட்டுரை (2002), திருமணமாகாத கல்லூரிப் பட்டதாரி இளம் பெண்களிடையே கருத்தடை மாத்திரைப் பயன்பாடு ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டறிந்தது.
  • கருவுறுதல் முடிவுகளில் பெண்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் வழங்குவதன் மூலம், பெண்கள் தங்களுக்கு விருப்பமான தொழில்சார் கல்வியைத் தேர்வுசெய்ய கருத்தடை மாத்திரை உதவியது என்பதே கோல்டின் கண்டடைந்த புரிதல்.
  • மேலும், தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு, தாமதமான திருமணத்தால் ஏற்படும் சமூக அபராதத்தைக் குறைப்பதற்கான மறைமுகப் பலனை இந்த மாத்திரை கொடுத்தது. ஏனெனில், பெண்கள் தொழில்சார் கல்வியைத் தொடர வழிவகுத்ததுடன், சமூகத்தில் அவர்களுக்கு உயர்ந்த அங்கீகாரத்தையும் மரியாதையையும் மாத்திரையின் சக்தி அளித்தது. இந்த வகையில், இளம் பெண்கள் தங்களுக்கு விருப்பமான தொழில்சார் கல்வியைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கனவுகண்ட தொழில் வாழ்க்கையை அடைவதற்குக் கருத்தடை மாத்திரை அதிகாரம் அளித்தது.

அதிகரித்த தொழில்முறைப் பட்டதாரிகள்

  • பாலினம், திருமணம் தொடர்பான ஆணாதிக்கப் பாலின விதிமுறைகளின் பொறிகளிலிருந்து சமூகரீதியாகப் பெண்களை விடுவிப்பதுடன், அமெரிக்காவில் பாலின சமத்துவத்தின் அடிப்படையில் அமைதியான மாற்றத்துக்கு இந்த மாத்திரை அடித்தளமாக அமைந்தது என்பதை கோல்டின் தனது கட்டுரையில் ஆவணப்படுத்தினார்.
  • 1960களில் அமெரிக்காவில் கருத்தடை மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. 1970களில் அது சார்ந்த சமூகத் தடை மறைந்து, இளம் கல்லூரிப் பட்டதாரிகளிடையே பிரபலமடைந்தது. அதன் பிறகு, சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், எம்பிஏ போன்ற நீண்ட காலத் தொழில்முறைப் பட்டங்களைப் பெண்கள் பெறத் தொடங்கினர். 1970களின் தொடக்கத்தில், இந்தப் பட்டப் படிப்புகளில் 95% அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் மாணவர்களின் ஆதிக்கம் நிலவியது. ஆனால் 1980களில், மூன்றில் ஒரு பங்கு மாணவிகள் இந்தத் தொழில்முறைப் படிப்புகளில் சேர்ந்திருந்தனர். 90களில் இந்த எண்ணிக்கை படிப்படியாக மேலும் அதிகரித்தது.
  • இதற்கும் மாத்திரைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இங்குதான் கோல்டினின் ஆராய்ச்சிப் பணி, நாம் வழக்கமாகப் பார்க்காத ஓர் அம்சத்தைப் பார்க்க உதவுகிறது. கருவுறுதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பெண்கள் தொழில்முறைக் கல்வியைத் தொடர கருத்தடை மாத்திரை அவர்களை அனுமதித்து, சம உரிமைகளுக்காக ஆண்களுடன் போராட அதிகாரம் அளித்தது.
  • அமைதியாக நிகழ்ந்த இந்தப் புரட்சியை நிலையான தேவை-வழங்கல் பொருளாதாரக் கோட்பாடுகளின் கண் கொண்டு பார்க்க முடியாது. இதற்கு ஒரு தனித்துவமான முன்னோக்கிய பார்வை தேவைப்படுகிறது. அதுதான் கோல்டினின் சாதனை.

பெண்களின் தொழில் வாழ்க்கையும் குடும்பமும்

  • 2021இல் வெளியிடப்பட்ட தனது புத்தகத்தில் (Career & Family: Women’s Century-long Journey toward Equity) தொழில், குடும்பத்தைச் சமநிலைப்படுத்தும் பிரச்சினையைப் பெண்கள் தலைமுறை தலைமுறையாக எப்படிச் சமாளித்தார்கள் என்பதையும், பாலின ஊதிய இடைவெளியைக் கடப்பதற்குப் பெண்கள் தொடர்ந்து போராடுவதையும் கோல்டின் ஆவணப்படுத்தியுள்ளார்.
  • அவரைப் பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேலைவாய்ப்பில் பாலின ஊதிய இடைவெளி நிலவுவது என்பது வீட்டில் பெண்களின் பங்கை வரையறுக்கும் பாலின விதிமுறைகளிலிருந்து உருவாகும் ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிக்கிறது. ஆணாதிக்கச் சமூக நடைமுறைகள், பெண்களின் பங்கைக் குடும்பத்தின் பராமரிப்பாளராக வரையறுத்து, அவர்களின் தொழில்முறை லட்சியங்களை நிறைவேற்றுவதிலிருந்து அவர்களைத் தடுக்கின்றன.
  • இந்த ஏற்றத்தாழ்வுகளிலிருந்து வெளியேறும் பாதை யாக, பெண்களுக்கான பணியிட நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க வேண்டும், குழந்தை பராமரிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என கோல்டின் வாதிடுகிறார். இந்தத் தீர்வின் ஒரு பகுதியாக, பாலினச் சமத்துவமின்மை பற்றிய இந்த விவாதத்தில் ஆண்களை உள்ளடக்கவும் அவர் பரிந்துரைக்கிறார்.
  • கோல்டினுடைய ஆராய்ச்சியின் தனிச்சிறப்பு, வழக்கமான தேவை-வழங்கல் விளக்கங்களுக்கு வெளியே தேடுவதற்கான உறுதியும் தைரியமும் ஆகும். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரத் துறைகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் எளிதில் வரவேற்கப் படுவதில்லை.
  • இந்தியாவுக்கான பொருத்தப்பாடு
  • கோல்டினின் பணி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. அடிப்படையில், அவரது ஆராய்ச்சி அமெரிக்க சமூக - கலாச்சார அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை வளரும் நாட்டின் சூழலுக்கு உடனடியாகப் பயன்படுத்த முடியாது.
  • இருப்பினும், கோல்டினின் ஆராய்ச்சி நமது சூழலுக்கான முக்கியமான பொருத்தப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியச் சூழலில், கல்வி சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளிலிருந்து பெண்களின் கருவுறுதல் தேர்வு வரையிலான பல முடிவுகள் வரை ஆணாதிக்கப் பாலின விதிமுறைகளால் பாதிக்கப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை. இது இந்தியாவில் மிகக் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் - பாலின ஊதிய இடைவெளியில் பிரதிபலிக்கிறது.
  • இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பின் பின்தங்கிய நிலை குறித்த விவாதங்களில், வீட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சமத்துவமின்மையின் தாக்கத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச எப்போதும் தயக்கம் இருந்துவருகிறது. கோல்டினின் ஆராய்ச்சிக்கான நோபல் அங்கீகாரம், அந்தத் தடைகளைக் களைவதற்கு உதவுவதோடு, வளர்ச்சிச் செயல்பாட்டில் பாலினச் சமத்துவம் சார்ந்த பிரச்சினைகளை முறையாகப் பார்க்கவும் உதவும்.
  • மேலும், இந்தியச் சூழலில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கும் சாதி, மதம், வர்க்கம் போன்றவற்றின் அடிப்படையில் பெண்கள் எதிர்கொள்ளும் குறுக்குவெட்டான ஏற்றத்தாழ்வுகள் மீது போதுமான கவனம் செலுத்துவதற்கும் கோல்டினின் ஆராய்ச்சி விரிவாக்கப்படலாம்.
  • மேலும், இந்த ஆராய்ச்சித் துறைக்கான நோபல் அங்கீகாரம், நமது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பொருளாதாரப் பாடத்திட்டத்தில் பெண்ணியப் பொருளாதாரம், பொருளாதார சமூகவியல் ஆகியவற்றை அறிமுகப்படுத்த நம்மை ஊக்குவிக்க வேண்டும். இது பொருளாதாரக் கல்வியைச் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுடன் எளிதில் தொடர்புபடுத்தக்கூடியதாகவும், நமது சமூகத்துக்குப் பயனுள்ளதாகவும் மாற்ற உதவும்.
  • நம் கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சீர்திருத்தம், இன்று நாம் எதிர்கொண்டுவரும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பொருளாதார, சமூக, சுகாதாரம், சுற்றுச்சூழல் சார்ந்த பல சவால்களைச் சமாளிக்க உதவும். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் அதிகாரமளிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை வழங்கவும், நிலைநிறுத்தவும் உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்