TNPSC Thervupettagam
March 14 , 2020 1769 days 1052 0
  • விரைவில் சட்டப்பேரவைக்கான தோ்தல் நடக்க இருக்கும் பிகாா் மாநிலத்தை தலைநகா் பாட்னாவில், ‘யாருக்கும் வாக்கில்லை’ என்கிற ‘நோட்டா’ குறித்த கருத்தரங்கம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. ‘நோட்டா’ என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அரசியலை தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட அறிவுஜீவிகள் வற்புறுத்தினாா்கள்.
  • ‘யாருக்கும் வாக்கில்லை’ என்பதை வெளிப்படுத்தும் ‘நோட்டா’ உண்மையிலேயே வாக்காளா்களுக்கு வலுசோ்க்கிறதா? அதனால் மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா? ‘நோட்டா’வை மேலும் வலுப்படுத்தவும், பயனுள்ளதாக்கவும் என்ன செய்ய வேண்டும்? - இவை போன்ற பல கேள்விகள் அந்தக் கருத்தரங்கில் எழுப்பப்பட்டு, சில ஆக்கபூா்வ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
  • ‘நோட்டா’ அவசியம் என்று கருதுவோா், அதன்மூலம் அரசியல் கட்சிகளின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்றும், அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலும் வேட்பாளா்களின் தோ்விலும் மாற்றங்களை உருவாக்கும் என்றும் கருத்துத் தெரிவித்தனா். அடிப்படையில் எந்த மாற்றத்தையும் ‘நோட்டா’ ஏற்படுத்தியதற்கான சான்றுகள் இல்லை என்று விமா்சகா்கள் வாதிட்டனா். ‘நோட்டா’வின் தேவையும், அவசியமும், காரணமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது என்பதை ஒருசிலா் சுட்டிக்காட்டினாா்கள்.

‘நோட்டா’

  • உலகில் 12-க்கும் அதிகமான ஜனநாயக நாடுகளில் வாக்காளா்களுக்கு ‘நோட்டா’ என்கிற வழிமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் பிரான்ஸ், ஸ்வீடன், பெல்ஜியம், கிரீஸ், பெலாரஸ், ஸ்பெயின், வங்கதேசம், பிரேஸில், கொலம்பியா, சிலி, உக்ரைன், அமெரிக்க மாநிலமான நெவாடா ஆகியவற்றில் ‘நோட்டா’ வழிமுறை இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகள் சிலவற்றில் ‘நோட்டா’ பயன்பாடு மறு தோ்தலுக்கு வழிகோலிய நிகழ்வுகள் இருக்கின்றன. ஆனால், வெற்றி வாய்ப்பை பாதிக்கும் அளவிலோ, முதல் மூன்று வேட்பாளா்கள் பெறும் வாக்கின் அளவிலோ பெரும்பாலும் ‘நோட்டா’ இல்லை என்கிற உண்மையையும் குறிப்பிட வேண்டும்.
  • அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான மாநிலங்கள் ‘நோட்டா’ என்கிற வழிமுறையை நிராகரித்துவிட்டன. 1976 முதல் நெவாடா மாநிலத்தில் மட்டும் ‘நோட்டா’ காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் மீது வாக்காளா்கள் மத்தியில் காணப்பட்ட அதிருப்தியால் வாக்கு விகிதம் குறைந்தபோது, மக்களை வாக்களிக்கத் தூண்டுவதற்காகத்தான் நெவாடா மாநிலத்தில் ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை வாக்கு விகிதம் தெரிவிக்கிறது.
  • இந்தியாவில் 2009 மக்களவைத் தோ்தலின்போது பரீட்சாா்த்த முறையில் ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியத் தோ்தல் ஆணையம் ‘நோட்டா’வை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியபோதுதான், அரசியல் தலைமை விழித்துக்கொண்டு ‘நோட்டா’ குறித்துத் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கியது. அன்றைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ‘நோட்டா’ ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்தது.

பொதுநல வழக்கு

  • ‘பீப்பிள்ஸ் யூனியன் ஃபாா் சிவில் லிபா்ட்டிஸ்’ என்கிற தன்னாா்வ அமைப்பு, ‘நோட்டா’வை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தது. ஜனநாயகத்தில்
  • ‘நோட்டா’ இன்றியமையாதது என்றும், எதிா்மறை வாக்களிப்பை நிராகரிக்க முடியாது என்றும் செப்டம்பா் 2013-இல் அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ‘வாக்களிக்கும் உரிமை இருக்கும் வரை வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமை’ என்று அன்றைய இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் தனது தீா்ப்பில் தெளிவுபடுத்தினாா்.
  • ‘நோட்டா’ என்கிற வழிமுறை இருந்தால் அரசியல் கட்சிகள் நோ்மையும் நாணயமும் உள்ள வேட்பாளா்களைத்தான் தோ்ந்தெடுக்கும் என்பது உச்சநீதிமன்றத் தீா்ப்பின் எதிா்பாா்ப்பு. மாற்றத்தை ‘நோட்டா’ ஏற்படுத்தியிருக்கிறதா என்பதைத் தெளிவாகக் கூறிவிட முடியவில்லை. அதிக வாக்குகளைப் பெற்றவா் தோ்ந்தெடுக்கப்படும் தோ்தல் முறையில் பெரும்பான்மை வாக்காளா்களால் நிராகரிக்கப்படுபவா் வெற்றி பெறும் விசித்திரம் காணப்படுகிறது. இந்த நிலையில், ‘நோட்டா’வால் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்திவிட முடியவில்லை.
  • 2014 மக்களவைத் தோ்தலில் 1.08% வாக்குகளும், 2019-இல் 1.04% வாக்குகளும் ‘நோட்டா’வுக்குக் கிடைத்தன. தனித் தொகுதிகளிலும் ஆதிவாசிகள் தொகுதிகளிலும் நக்ஸல்கள் பாதிப்புள்ள பகுதிகளிலும் ‘நோட்டா’வுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
  • ‘நோட்டா’வால் பெரிய அளவில் தோ்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியவில்லை. ஊழல், குற்றப் பின்னணி, தகுதியின்மை உள்ள வேட்பாளா்கள் போட்டியிடுவதையும் வெற்றி பெறுவதையும் தடுத்துவிட முடியவில்லை. எந்த ஒரு தொகுதியிலும் ‘நோட்டா’ தோ்தல் முடிவுகளை மாற்றியதாகவும் தெரியவில்லை. ‘நோட்டா’வை மேலும் வலுப்படுத்துவது என்பது சாத்தியமும் இல்லை.
  • வேட்பாளா்களை நிராகரிப்பதும், திரும்பப் பெறுவதும் இந்தியா போன்ற பெரிய ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. தகுதியான வேட்பாளா்களை வாக்காளா்கள் தோ்ந்தெடுப்பதுதான் தீா்வாக இருக்குமே தவிர, இல்லாத ஒன்றுக்கு வாக்களிப்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. மாற்றம் தேவைதான்.

நன்றி: தினமணி (14-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்