TNPSC Thervupettagam

நோபல் (இலக்கியம்): ஹன் காங் - ஆணும் பெண்ணும் ஓர் அடக்குமுறை ஆட்சியும்

October 14 , 2024 42 days 53 0

நோபல் (இலக்கியம்): ஹன் காங் - ஆணும் பெண்ணும் ஓர் அடக்குமுறை ஆட்சியும்

  • இலக்கி​யத்​துக்கான நோபல் பரிசு அறிவிப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் எதிர்​பாராத திருப்பம் இருக்​கும். இந்த ஆண்டு கான் சியே (Can Xue) எனும் சீன எழுத்​தாள​ருக்​குத்தான் அந்த விருது கிடைக்கும் என்று உலகிலுள்ள ஏறக்குறைய அனைத்து இலக்கிய ஊடகங்​களும் எதிர்​பார்த்திருந்த நிலையில், ஐம்பத்து மூன்று வயதுடைய தென் கொரிய பெண் எழுத்​தாளர் ஹன் காங் (Han Kang) தேர்ந்​தெடுக்​கப்​பட்​டிருக்​கிறார். இவர்தான் தென் கொரியாவில் இலக்கி​யத்​துக்கான நோபல் பரிசு பெறும் முதல் எழுத்​தாளர்.
  • இவர் இலக்கிய உலகுக்குப் புதிய​வரல்ல. இதற்கு முன் 2016ஆம் ஆண்டில் இவருக்கு புக்கர் பரிசு வழங்கப்​பட்​டிருக்​கிறது. அதே ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய இலக்கிய விருதான ‘மெதிசிஸ்’ விருதும் வழங்கப்​பட்​டிருக்​கிறது.
  • நோபல் பரிசுக் குழு “மனித பலவீனங்​களையும் வரலாற்றுப் பேரதிர்​வு​களையும் அழுத்தமான கவித்து​வத்​துடன் வெளிப்​படுத்து​கிறார் என்பதற்காக இவ்விருது கொடுக்​கப்​படு​கிறது” என்று அறிவித்​துள்ளது. ஹன் காங் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி​யிருந்​தா​லும், மூன்று நாவல்கள் அவரது முக்கியப் படைப்பு​களாகக் கருதப்​படு​கின்றன - ‘புலால் மறுத்த பெண்’ (The Vegetarian), கிரேக்கப் பாடங்கள் (Greek Lessons), மனிதச் செயல்​பாடுகள் (Human Acts).
  • ‘புலால் மறுத்த பெண்’ (தமிழில் சமயவேலால் ‘மரக்கறி’ என்கிற தலைப்பில் மொழிபெயர்க்​கப்​பட்​டுள்ளது, தமிழ்வெளி வெளியீடு) – இந்த நாவல்தான் அவரை இலக்கிய உலகுக்கு அறிமுகப்​படுத்​தியது. மூன்று பாகங்கள் கொண்ட இந்த நாவலின் முக்கிய கதாபாத்​திரம் இயோங் ஹை திருமணம் ஆனவள். அவள் புலால் உண்பதைத் திடீரென நிறுத்​திக்​கொள்​கிறாள். காரணம் அவள் கண்ட ஒரு கொடுங்கனவு – “இருண்ட காடு. மனித சஞ்சா​ரமில்​லை...வழி தெரியாமல் தவித்​தேன்​...எங்கு திரும்​பினாலும் ரத்தம் சொட்டும் மாமிசத் துண்டு​கள்​.”(ப. 18-19) என்று அந்தக் கனவு வர்ணிக்​கப்​படு​கிறது. மறுநாள் காலை விழித்​தெழுந்​த​திலிருந்து இனிமேல் புலால் உண்ணுவ​தில்லை என்று முடிவுக்கு வந்து​விட்​டாள்.
  • அவள் கணவன் “அவளிடம் தனிப்பட்ட ஈர்ப்பு ஒன்றுமில்லை. அதுபோல் வெறுக்​கத்தக்க விஷயம்கூட ஒன்றுமில்லை,” (பக்கம் 11) என்று சொல்கிறான். அவளை அவன் மணந்ததற்குக் காரணம் அவள் அடக்கமான பெண் - தான் சொல்வதை அப்படியே கேட்பாள் என்பது​தான். அந்த பிம்பம் இப்போது உடைந்​து​விட்டது. அவன் என்ன சொல்லியும் புலால் உண்ண மறுக்​கிறாள். அவள் கண்ட கனவின் தாக்கத்​தா​லும், உணவு பழக்கவழக்க மாற்றத்​தாலும் அவள் உடல் மெலிய ஆரம்பிக்​கிறது. கணவன் அவளைவிட்டு விலகு​கிறான். அவளது அக்கா ஈன் ஹையின் கணவன் (அவன் பெயர் குறிப்​பிடப்​பட​வில்லை) ஓர் ஒளிப்படக் கலைஞன். அவன் இயோங் ஹையைப் பல்வேறு கோணங்​களில் நிர்வாண​மாகப் படம் எடுப்​பதில் ஈடுபடு​கிறான். பின்பு அவளிடம் அத்து​மீறித் தன் ஆசையைத் தீர்த்​துக்​கொள்​கிறான். அவன் மட்டுமன்றி அவன் நண்பன் ஒருவனும் அவளிடம் உறவு கொள்வதைப் படம் எடுக்க முயற்சிக்​கிறான். ஆனால், அந்த நண்பன் மறுத்து​விடு​கிறான். கடைசியில் மனோநோய் மட்டுமல்​லாமல், உடல் நோயாலும் அவதிப்பட்ட அவள் மருத்​துவ​மனையில் அனுமதிக்​கப்​பட்டு மரணத்தை எதிர்​நோக்கு​கிறாள்.
  • ‘கிரேக்கப் பாடங்கள்’ (2011) வாசகர் நெஞ்சைத் தொடும் ஒரு சோக நாவல். ஓரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கல்விக்​கூடத்தில் சந்திக்​கிறார்கள். அவன் பண்டைய கிரேக்க மொழி சொல்லிக்​கொடுப்​பவன். அவள் அங்குப் படிக்க வந்தவள். இருவருக்குமே குறைபாடுகள் இருக்​கின்றன. அவனுக்கு கண் பார்வை மங்கிக்​கொண்டு வருகிறது. அந்தக் குறை பரம்பரையால் அவனுக்கு வந்தது. அவன் அப்பாவுக்கும் அதே நோய் இருந்தது. பார்வை இருக்கும் வரையில் வாழ்க்கையில் சுகமாக வாழ்ந்​து​விடலாம் என்றிருக்​கிறான். அந்தப் பெண்ணுக்கோ பேச்சு வரவில்லை. தாயின் மரணம், விவாகரத்து, பிள்ளைக்குப் பாதுகாப்பற்ற நிலை என்பது போன்ற பல்வேறு சோக நிகழ்வுகள் அவள் வாழ்க்கையில் நிகழ்ந்து அவளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்​தி​விட்டது. அதனால், அவள் பேசும் திறனை இழந்து​விட்​டாள். அந்த ஆணுக்கும் பெண்ணுக்​குமிடையே ஏற்படும் உறவுதான் இக்கதையின் கருப்​பொருள்.
  • ‘மனிதச் செயல்​பாடுகள்’ (2014) 1980ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ‘குவாங்ஜு ’ எனும் மக்களாட்சி இயக்கத்தின் எழுச்​சியைப் பின்னணி​யாகக் கொண்ட நாவல். நூலின் அறிமுக உரையில் மொழிபெயர்ப்​பாளர் வரலாற்றுப் பின்னணியை விளக்கு​கிறார். 1980களின் தொடக்​கத்​தில், தென் கொரியா ஒரு குப்பை மேடாகக் கிடந்தது. 1961இல் நடந்த ஓர் ஆட்சிக் கலைப்பில் பதவிக்கு வந்த பார்க் சுங் – ஹி என்ற வலிமை வாய்ந்த ராணுவ அதிகாரி சில மாதங்​களுக்கு முன்னர்தான் அவருடைய பாதுகாப்பு அதிகாரியால் கொல்லப்​பட்​டிருந்​தார். ஆயினும் இது மக்களாட்​சிக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஏனென்​றால், கொல்லப்பட்ட பார்க் சுங் ஹியை அடுத்து பதவிக்கு வந்தவன் சூன் துவான் என்பவரும் ராணுவத்தைச் சேர்ந்​தவர்​தான். வட கொரியாவின் ஊடுருவல் இருப்​ப​தாகச் சொல்லி அடக்கு​முறையைக் கட்டவிழ்த்து​விட்​டார். இத்தகைய சூழலில் மக்களாட்​சிக்​காகக் குரல் கொடுப்​பவர்கள் படும்​பாட்டை ஹன் காங்க் முக்கியக் கதாபாத்​திரங்கள் மூவரை வைத்து நுட்பமாக விளக்கு​கிறார். நிறைவுரையையும் சேர்த்து ஏழு அத்தி​யா​யங்கள் கொண்ட இந்த நாவலில் மக்களாட்​சிக்​காகப் போராடும் இளைஞர்​களின் வாழ்க்கை நரகமாக மாறுவது சித்திரிக்​கப்​படு​கிறது.
  • சிறை வாழ்க்கை, தற்கொலை முதலானவை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிடு​கின்றன. கடைசி அத்தி​யா​யத்தில் நூலாசிரியரே கதைசொல்​லியாக வந்து முடிவுரை வழங்கு​கிறார். “என்னுடைய கைப்பையி​லிருந்து மூன்று மெழுகு​வத்​திகளை எடுத்​தேன். இறந்த மூவரின் கல்லறைக்​கற்​களின் முன் மண்டி​யிட்டு, ஒவ்வொன்றாக மெழுகு​வத்​திகளை ஏற்றி​வைத்​தேன். பிரார்த்தனை செய்ய​வில்லை. கண்களை மூடிக்​கொள்ள​வில்லை. ஒரு நிமிட மௌனம் அனுசரிக்க​வில்லை. ஆனால், அந்த மெழுகு​வத்​திகள் ஆடாமல் அசையாமல் சுடர்​விட்டுக் கொண்டிருந்​ததையே பார்த்​துக்​கொண்​டிருந்​தேன்​...” (பக்கம் 165). இந்த நாவலில் ஆசிரியரின் சிந்தனை தத்து​வார்த்தமாக எடுத்​துரைக்​கப்​படு​கிறது. எடுத்​துக்​காட்டாக, அவர் ஓரிடத்தில் சொல்கிறார் “சில நினைவுகள் மறக்க முடியாமல் போய்விடு​கின்றன. காலப்​போக்கில் அவை கரைந்​து​போ​காமல், மற்றதெல்லாம் மறைந்து போகும்போது அவை மட்டுமே வாழ்க்கையில் சாஸ்வதமாக நிலைத்து​விடு​கின்றன.”
  • ஹன் காங் படைப்புகள் இன்னும் வரவிருக்​கின்றன. அவர் கடைசியாக எழுதிய ‘பிரிந்து போகாதே’ எனும் நாவல் அடுத்த ஆண்டுதான் ஆங்கிலத்தில் வெளிவர இருக்​கிறது. ஆகையால், அவரைப் பற்றிய ஒட்டுமொத்த மதிப்புரையை இப்போதே வழங்கிவிட முடியாது. ஆயினும் இதுவரை அவரது படைப்புகள் பெற்ற வெற்றி​யினால் தென் கொரியாவின் பண்பாடும், அரசியல் வரலாறும், உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்​திருக்​கின்றன என்பதை உறுதி​யாகச் சொல்லலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்