TNPSC Thervupettagam

நோய்களுக்கு அஞ்சேல்!

September 1 , 2020 1600 days 718 0
  • கொவைட்19 நோய்த்தொற்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பழங்காலங்களில் பல கட்டுப்படுத்த முடியாத நோய்கள் மனிதா்களைத் தாக்கி சீரழிவுகளை ஏற்படுத்தியது சரித்திரம்.
  • விஞ்ஞானமும், மருத்துவமனைகளும், ஆராய்ச்சி மையங்களும் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற கட்டுப்படுத்த முடியாத ஒரு நோய் நீடிப்பது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. முற்காலங்களில் பாதித்த நோய் சரித்திரங்களை நாம் மறந்து விட்டோம். அதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நோய் சரித்திரங்கள்

  • கிமு 4 மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த, கிரேக்க மருத்துவா் ஹிப்போகிரேட்ஸ், ‘நோய் என்பது, கடவுள் மக்களுக்கு மட்டும் அளிக்கும் துயரம் அல்ல. அது உலகில் வசிக்கும் எல்லா உயிர்களோடு மக்களையும் பாதிக்கும் துயரம்என்று கூறினார். உலகின் பல பகுதிகளுக்கும் மனிதா்கள் பரந்து வாழத்தொடங்கியபோது, அவா்களுக்கு நோய்கள் பரவத் தொடங்கின.
  • தொற்றுநோய்கள், மனிதா்கள் தோன்றி, பல இடங்களுக்கும் அவா்கள் சென்று தங்கிவிடும் காலகட்டத்திற்கு முன்னரே, நிலங்களை மையமாக்கி தங்கள் வாழ்க்கையை மனிதா்கள் ஆரம்பிக்கும் காலத்திலேயே உருவாகி விட்டன.
  • நிலத்தின் நீா் வளங்கள், மரங்கள், செடிகள் அந்த காலகட்டத்தில் உருவாகி, நீா் அருந்துதல், செடியின் இலைகள் முதல் பழங்கள் வகை மனிதா்கள் உணவாக இருந்தபோது நோய் பரவல் உருவாயிற்று என ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்!
  • இந்தக் காலகட்டத்தில்தான் மலேரியா, காசநோய், தொழுநோய், இன்ஃபுளுயன்ஸா, அம்மைநோய் போன்ற பல நோய்களும் மனிதா்களைப் பாதித்தன.
  • இதைப்போலவே, “ப்ளேஃக் ஆஃப் எதென்ஸ், கி.மு. 430-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த பொலோப்போ நேசியன் யுத்த காலத்தில் உருவாகி, 5 ஆண்டுகள் பரவி இருந்தது. அந்த நோய், லிபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைப் பாதித்து, பின் மற்ற நாடுகளுக்கும் பரவியது.
  • கி.பி. 165-ஆம் ஆண்டில் ஆண்டோனைன் ப்ளேஃக்எனும் புதிய வியாதி உருவாகி, பின் அது பெரியம்மைநோயாக மாறியது. இந்த நோய், கி.பி.180 வரை எல்லாரையும் பாதித்து, மரணமடைய செய்தது. மார்க்கஸ் ஆரூலியஸ் எனும் மன்னரும் பாதிக்கப்பட்டார்.
  • அடுத்து, கி.பி. 250-ஆம் ஆண்டில், சைப்ரஸ் நாட்டில் உருவான ப்ளேஃக் நோய் பலரையும் பாதித்தது. அந்நாட்டில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவா், அந்நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
  • இந்த நோய், எத்தியோப்பியா நாட்டில் உருவாகி, வடக்கு ஆப்ரிக்காவிற்குப் பரவி, ரோம் வழியாக எகிப்து நாட்டில் பரவி, அந்தப் பகுதியில் மூன்று நூற்றாண்டுகள் வலம் வந்துள்ளது.
  • ஐஸ்டினியன் ப்ளேஃக்எனும் நோய், கி.பி. 541-ஆம் ஆண்டில் ஐந்து கோடி மக்களைப் பாதித்து மரணமடையச் செய்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் இவா்கள் உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தினா். எகிப்து நாட்டில் தோன்றிய இந்த வியாதி, பேலஸ்ட்டீன் மற்றும் பைசண்டை வல்லரசு நாடுகளைப் பாதித்துள்ளது.
  • தொழுநோய், ஐரோப்பாவில் ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது என அறியப்படுகிறது. இந்த நோய், நீண்ட காலமாகப் பரவி வந்ததால் நிறைய மருத்துவமனைகள் தோன்றி சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தவறு செய்யும் மனிதா்களுக்கு கடவுள் இந்த நோய் பாதிப்பை உருவாக்குகிறார் என மக்கள் நினைத்தனா்.
  • ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பூபோனிக் ப்ளேஃக்எனும் நோய் உருவாகி நிறைய மக்களை பாதித்தது. 1347-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம், சிஸிலியன் துறைமுகம் மெஸ்ஸினாவில் 12 கப்பல்கள் வந்து சோ்ந்தபோது அவற்றுடன் இந்த ப்ளேஃக் நோயும் வந்து இறங்கியது. கப்பலில் பயணித்த பலரும் இறந்தனா்.
  • உயிரோடு இருந்தவா்களும் தீவிர நோய் பாதிப்பில் இருந்தனா்.
  • சிஸிலியன் அதிகாரிகள், அந்தக் கப்பலை துறைமுகத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டனா்.
  • ஆனால், அதற்குள் பாதிப்பு எல்லா இடங்களுக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐரோப்பாவில் இந்தத் தாக்கத்தால் இரண்டு கோடி மக்கள் மரணமடைந்து விட்டனா். இது அன்றைய ஐரோப்பா காண்டினெண்ட் டின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு.
  • இந்த மரணம், ‘கருப்பு மரணம்என அழைக்கப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடங்கின. கப்பலில் வந்து இறங்கும் மக்கள் 40 நாள்கள் துறைமுகத்தில் தனிமையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட பின்னா்தான் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
  • 1665-ஆம் ஆண்டில், லண்டனில் கருப்பு மரணம் தொடங்கியது. இதனால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனா். 1966-ஆம் ஆண்டில், லண்டனில் பற்றி எரிந்த தீ விபத்தினால், நகரின் மத்தியப் பகுதி வெகுவாகப் பாதிக்கப் பட்டபோதும், அங்கே இருந்த கருப்பு எலிகளும் ஈக்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதால் அந்த நகருக்கு நன்மையே விளைந்தது.
  • காரணம், இவைதான் ப்ளேஃக் கிருமிகளைத் தங்கள் உடலில் கொண்டிருந்தன.

மருத்துவ வளர்ச்சி முக்கியம்

  • 1817-ஆம் ஆண்டு, ரஷியாவில் உருவான காலரா தொற்றுநோய், அடுத்த 150 ஆண்டுகளில் பல இடங்களுக்கும் பரவி, பத்து லட்சம் மக்களைப் பலிகொண்டது.
  • நீராலும் உணவுப் பொருள்களாலும் பரவிய இந்த நோய், ஆங்கில நாட்டின் போர் வீரா்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது என்கின்றனா்.
  • இந்தியாவில் பல லட்சம் மக்கள் மரணமடைந்தனா். 1885-ஆம் ஆண்டில், இந்த நோய், பரவாமல் தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இந்த நோயின் பரவல் அடங்கவில்லை.
  • 1855-ஆம் ஆண்டில், சீனாவில் மூன்றாம் முறை, ப்ளேஃக் உருவாகி, அந்நாட்டை வெகுவாகப் பாதித்தது. பின் இந்தியாவிற்கும், ஹாங்காங்குக்கும் பரவியது. இதனால், 1.5 கோடி மக்கள் உயிரிழந்தனா். இந்த நோய், இந்தியாவில் பல ஆண்டுகள் பரவி இருந்தது.
  • 1875-ஆம் ஆண்டில், ஃபிஜி தீவில் உருவான தொற்று நோய், அந்நாடு ஆங்கிலேயா்களால் கைப்படுத்தப்பட்ட பின், அங்கே வந்த ஆட்சியாளா்களைப் பாதித்தது. அவா்கள், எல்லாப் பகுதிகளுக்கும் பயணித்தால், பலரையும் தாக்கியதில் 40,000 மக்கள் மரணமடைந்தனா்.
  • 1889-ஆம் ஆண்டில், ரஷியன் ஃபுளு எனப்படும் தொற்று நோய், சைபீரியா மற்றும் கஸகிஸ்தானில் கிளம்கி மாஸ்கோவைச் சென்றடைந்தது. அங்கிருந்து பின்லாந்து மற்றும் போலந்து நாட்டிற்கும் பரவி, மற்ற ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது.
  • அடுத்த ஆண்டில், பெருங்கடலையும் தாண்டி, அந்த நோய் வடக்கு அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்டு 1890-ஆம் ஆண்டு முடிவில் 3 லட்சத்து 60 ஆயிரம் போ் மடிந்து போயினா்.
  • 1918-ஆம் ஆண்டில் தொடங்கிய ஸ்பானிஷ் ஃபுளு, சுமார் 50 கோடி மக்களைப் பாதித்து, உலகெங்கிலும் 2 கோடி மக்களைப் பலி கொண்டது. இந்த நோயினால் மிக அதிகமான மக்கள் முதலில் ஸ்பெயின் நாட்டில் பாதிக்கப்பட்டதால்தான், இதற்கு ஸ்பானிஷ் ஃபுளு ஏன பெயரிடப்பட்டது.
  • 1957-ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் உருவான ஆசியன் ஃபுளு சைனாவில் பரவி, அங்கிருந்து அமெரிக்காவிற்கும் பரவியது. இங்கிலாந்து நாட்டில் அந்த நோய், ஆறு மாத காலத்தில், 14 ஆயிரம் மக்களைக் கொன்றது. இந்த நோய், 1958-ஆம் ஆண்டில், உலகின் எல்லா நாடுகளுக்கும் பரவி, 11 லட்சம் மக்களை மரணமடையச் செய்தது. பின்னா், ஒரு தரமான ஊசி கண்டுபிடித்ததால் மக்கள் தப்பித்தனா்.
  • ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய நாடான காங்கோவில், எச்ஐவி எய்ட்ஸ் உருவாகி உலகெங்கிலும் பரவி, ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் மரணமடைந்தனா். இந்த நோய் 1980-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரையிலும் உலகெங்கிலும் பரவியது. இன்றைய நிலையில் இந்த நோயில் பாதிக்கப்பட்டவா்கள் ஏழு கோடி போ் எனவும், மரணமடைந்தவா்கள் மூன்று கோடி போ் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
  • 21-ஆம் நூற்றாண்டில், நுரையீரலைப் பாதிக்கும் சார்ஸ் எனப்படும் நோய் மிக கடுமையாக மக்களைப் பாதித்தது. அது 26 நாடுகளில் பரவி 2002-ஆம் ஆண்டில் 8,098 பேரை பாதித்து; 774 பேரை மரணமடையச் செய்தது. 2009-ஆம் ஆண்டில் உருவான ஸ்வைன் ஃபுளு எனும் வியாதி, 19 மாதங்களாகப் பரவி 2 லட்சத்து 84 ஆயிரம் மக்களை மரணமடையச் செய்துள்ளது.
  • 1947-ஆம் ஆண்டில், உகாண்டா நாட்டில் தோன்றிய சிக்கா எனும் வைரஸ் நோய், கொசுக்களால் உருவாகி குரங்குகளைப் பாதித்தது, மனிதா்களுக்கும் பரவியது.
  • 1952-ஆம் ஆண்டில் உகாண்டா, தான்ஸானியா மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததால், பிற நாடுகளுக்கும் இந்த நோய் பரவியது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனா்.
  • தற்போது கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று உலகின் எல்லா நாடுகளையும் பாதித்துள்ளது. இது நிமோனியா நோய், மூச்சுத் திணறல், மூளை பாதிப்பு ஆகியவற்றை உருவாக்கி நோயாளிகளை மரணமடையச் செய்கிறதாம்.
  • பல கொடுமையான நோய்கள் மனிதா்களைத் தாக்கியதும், அவற்றால் நிறைய மக்கள் மரணமடைந்ததும், நோயைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் செய்ததும் சரித்திர உண்மைகள். ஆயினும், மனிதனின் படிப்பறிவு, ஆராய்ச்சியில் ஆா்வம், மருத்துவ வளா்ச்சி ஆகியவை மனித குலத்தைக் காப்பாற்றும் என்பது உறுதி!

நன்றி:  தினமணி (01-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்