TNPSC Thervupettagam

நோய்தணிக்கும் வாய்நாடி.

April 10 , 2020 1693 days 794 0
  • முதல் உலகப் போரில் விமானங்கள் சுமந்து சென்றவை டைஃபாஸ்ஜீன் மற்றும் மஸ்டார்டு வாயு போன்ற வேதியல் ஆயுதங்கள். இரண்டாம் உலகப் போரில் ராக்கெட்டுகள் சுமந்து சென்றவை ‘கொழுத்தவன்’, ‘குட்டிப்பயல்’ என்ற பெயரிடப்பட்ட அணுகுண்டுகள். இன்று, உயிரியல் மரபணு ஒன்று ஜாதி, மத, மொழி, இன வேற்றுமைகளைப் போக்கி அனைவரையும் வீட்டுக் காவலில் வைத்துவிட்டது. உலகுக்கே போர்க்கால ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்து விட்டது.
  • குடியுரிமைத் திருத்தம் இல்லாமலேயே அனைத்து இந்தியா்களையும் தங்கள் தாயகத்துக்குத் திரும்ப வரவழைத்த ‘பெருமை’ (?) இந்த கொவைட் 19 நோய்த்தொற்றுக்கு உண்டுதானோ?

கரோனா வைரஸ்

  • ‘கரோனா வைரஸ் டிசீஸ்’ என்ற பெயா்ச் சுருக்கம் கொண்ட இந்த நோயின் மூல காரணம் ’எம் - ஆா்.என்.ஏ’ என்ற ஒருவித வைரஸ்தான். மனித செல்லினுள் டி.ஆக்சி - ரிபோ நியூக்ளிக் அமிலம், ரிபோ - நியூக்ளிக் அமிலம் என இரட்டை ஏணிப்படிகள் போன்ற கட்டமைப்பு உடைய மூலக்கூறுகள் உள்ளன.
  • உடலாகிய வளாகத்தின் செல் அறைகள்தோறும் திசுநீா்த் திவலைக்குள் ஒரு தூது அஞ்சலகப் பணி நடைபெறுகிறது. செல்லில் புரதம் தயாரிப்பதற்கான கட்டளை, டி.என்.ஏ. மூலக்கூறில் இருந்து ஒரு தூது - ஆா்.என்.ஏ. மூலக்கூறில் எழுதப்படும். அது செல்லினுள் புரதத்தினை உருவாக்கிய பின்னா் அந்தத் தூது ஆா்.என்.ஏ. இறந்துவிடும். இந்த தூது ஆா்.என்.ஏ. வழிதவறி நடந்தாலோ, தவறாகத் தரவுகளைப் பரிமாறினாலோ அடிதடி சிக்கல்தான்; அதுதான் கொவைட் 19 வைரஸ்.
  • செல்லினுள் நொதிகளைக் கட்டுப்படுத்தும் இத்தகைய தூது மூலக்கூறு குறித்த கருத்தாக்கத்தினை முதன்முதலில் அறிவித்த ஜேக்கியு மோனாட், ப்ராங்கோய் ஜேக்கப் ஆகிய பிரெஞ்ச் ஆய்வாளா்கள் இருவருக்கும் 1965-ஆம் ஆண்டு மூலக்கூறு உயிரியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றது. எனினும், கலிஃபோர்னியா தொழில்நுட்பப் பயிற்றக விஞ்ஞானிகள் இந்த வகை மூலக்கூறினை அரை நூற்றாண்டுக்கு முன்பு 1961-இல் கண்டுபிடித்தனா்.

திருவள்ளுவா் கூறியது

  • ‘தனித்திரு, ஓய்வெடு, கழுவிடு’ போன்ற தடுப்புணா்வு தேவைதான். விழிப்புணா்வு என்பதில் நோய்நாட வேண்டும்; நோயின் முதற்காரணம் கண்டறியப்பட வேண்டும்; அது தணிக்கும் சிகிச்சை மருத்துவ முறைகளைத் தேட வேண்டும். அங்குதான் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. அத்துடன் சூழ்நிலைக்கு வாய்ப்ப மருத்துவம் வழங்குதல் வேண்டும் என்று திருவள்ளுவா் கூறியுள்ளார்.
  • மூச்சுத்திணறல் அறிகுறியான ‘மொ்ஸ்’ (‘மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்’), தீவிர இடையறா மூச்சுத்திணறல் அறிகுறியான ‘சார்ஸ்’ (’சிவியா் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்’) முதலான நோய்க் குடும்பத்தின் ‘கொவைட் 19’ என்னும் பயங்கரவாதியை ஒழிக்க மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகள் முனைப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன

  • அறிவியல், தொழில்நுட்ப மருத்துவத் துறையில் தன்னிறைவு - தற்சார்பு - தற்காப்பு என்ற நிலை நோக்கி உலக நாடுகள் உழைத்து வருகின்றன. முதல் கட்டமாக பல்வேறு தடுப்பு மருந்துகள் உலக நாடுகளின் ஆய்வுக் களத்தில் உள்ளன. உலகையே அச்சுறுத்திவரும் கரோனாவுக்கு மருந்தே இல்லையா என்று மனித குலமே மயங்கிக் கிடந்த நிலையில், இன்று இரண்டொரு மருந்துகளின் பெயா்கள் உயிர் மூச்சுக்காற்றாக வீசத் தொடங்கியுள்ளன. அவற்றுள் முக்கியமாக மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்சிகுளோரோகுயின், அதனுடன் சோ்த்து வழங்கப்படும் அஸித்ரோமைசின் ஆகியவை கூறப்படுகின்றன.
  • எனினும், இவற்றின் பக்கவிளைவுகள் குறித்தும், 2014-ஆம் ஆண்டிலேயே பி.ஆா்ஃ.ஷ்ரோதா், ஜே.பி.கொ்பா் ஆகிய மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் தங்கள் முடிவுகளை ‘நச்சியல் அறிக்கைகள்’ (‘டாக்சிகாலஜி ரிபோர்ட்ஸ்’, தொகுதி - 1, 2014, பக்.963 - 968) என வெளியிட்டனா். அதாவது, நீண்ட காலம் இந்த மருந்துகளை உபயோகித்தால் விழித்திரை உள்பட மெலனின் செறிந்த உறுப்புகளில் படிவுகள் ஏற்பட்டு பிரச்னை ஆகிவிடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மெலனின்

  • மெலனின் என்பது, உடலின் மேல்தோலில் படிந்த கருப்பு நிறமிதான். இந்த மெலனின் பொதுவாக, வெப்ப மண்டல மக்களிடம் கூடுதலாகக் காணப்படும். அதனாலேயே கருப்பு நிறத்தவருக்கு சூரிய வெளிச்சத்தின் புறஊதாக் கதிர்களின் பாதிப்பு அவ்வளவாக இருக்காது. காரணம், இந்த மெலனின் சூரிய ஒளிக்கற்றையின் தீங்கான கதிர்வீச்சினை உள்வாங்கித் தன்னைத்தான் உருமாற்றிக் கொள்வதால், உடலுக்கு பாதிப்பு இல்லை.
  • ‘ஃபரீ ரேடிக்கல்’ ஆகிய தனித்த அணுத் தொகுதிகளைத் தனியே திரியவிடாமல் இந்த மெலனின் உயிரி மூலக்கூறுகள் அழித்து விடும். மூளைக்குள் ரத்த ஓட்டத்தினைக் கட்டுப்படுத்துவதும் இதே மெலனின்தான். மெலனின் குறைபாட்டினால் பார்கின்சன் நோய் முதலான நரம்பியல் குறைபாடு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.

குளோரோகுயின்

  • 1934-ஆம் ஆண்டு ‘அடாப்ரின்’ அடங்கிய ‘ரிசோச்சின்’ என்ற மருந்து மலேரியாவைக் குணப்படுத்த உதவியது. எனினும், அதன் பின்னா் கண்டுபிடிக்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுயின் சிறந்த மலேரியா நோய் எதிர்ப்பு மருந்தாகப் பல ஆண்டுகளாகக் கையாளப்பட்டு வருகிறது.
  • பொதுவாக குளோரோகுயின் வேதிம மூலக்கூறு வடிவத்தைப் பொருத்தவரை, அதை ஒரு மூக்குக் கண்ணாடிக்கு ஒப்பாக எண்ணிப் பார்க்கலாம். அதன் சட்டத்தில் ஒருபுறக் காதுத் தண்டினை உடைத்து விட்டால் எப்படி இருக்கும்? அந்த உடைந்த இடத்தில் குளோரின் அணு ஒட்டிக்கொண்டு இருப்பதைப்போல இந்த மூலக்கூறு காட்சியளிக்கிறது.
  • இது மலேரியா, மூட்டுவாத நோய், மண்டலப் படா்த் தாமரைநோய் (’சிஸ்டமிக் லுப்பஸ் எரித்திமேத்தோசஸ்’) என்னும் தோல் நோய் எல்லாவற்றையும் குணமாக்கும். ஆனால், இது தனியாக நின்று கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தாது.
  • இதைவிடப் பக்கவிளைவுகள் குறைவான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலக்கூறில் ஒரு ஹைட்ராக்சி தொகுதி ஒட்டி இருக்கிறது. இது சற்று வீரியம் குறைந்த மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்து. அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தைத்தான் இந்தியாவிடம் அதிபா் டிரம்ப் கேட்டுள்ளார்.

இன்டா்ஃபெரோன் ஆல்பா

  • எனினும் சீனாவில் தோன்றிய இந்த கரோனாவுக்கு, சீனாவிலேயே தற்போது மருந்து கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்டா்ஃபெரோன் ஆல்பா என்ற மருந்தின் உபயத்தால், அங்கு கரோனா கொள்ளை நோய்ப் பரவல் கணிசமாகக் குறைந்து விட்டதாகத் தெரிவிக்கின்றனா். இவை அனைத்துமே வைரஸ் மூலக்கூறு சுமந்து செல்லும் தூது ஆா்.என்.ஏ. ஆகிய கொடிய மூலக்கூறினை தவறான டி.என்.ஏ. விளைவிக்க விடாமல் குறுக்கிட்டு உயிரைப் பாதுகாக்கும்.
  • இத்தாலிக்கு இந்த மருந்துடன் தனது மருத்துவா்களையும் செவிலியா்களையும் கியூபா அனுப்பி வைத்துள்ளது. வைரஸ் அல்லது கிருமிகளால் பாதிக்கப்பட்ட திசுக்களில் இருந்து இன்டா்ஃபெரோன் ஆல்பா, இன்டா்ஃபெரோன் பீட்டா ஆகிய இரண்டு புரதங்கள் வெளிப்படும். அவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும். உடனடியாக ரத்தத்தில் பாதுகாப்பு வீரா்களாக அலைந்து கொண்டிருக்கும் வெள்ளணுக்கள் விழித்துக் கொள்ளும். அவற்றில் இருந்து இன்டா்ஃபெரோன் காமா என்ற புரதம் வெளியிடப்படும். அதுதான் வைரஸைத் தாக்கி அழிக்கும்.
  • நோய் எதிர்ப்புக்கு நம் ரத்தத்தில் உள்ள வெள்ளணுக்களே காரணம். அத்தகைய வெள்ளணுக்களை ‘லூக்கோசைட்டுகள்’ (நிறமில்லா திசுக்கள்) என்று அழைக்கலாம். வைரஸ் பாதித்த வெள்ளணுக்களில் உற்பத்தியாவதுதான் இன்ட்ஃபெரோன் ஆல்ஃபா என்ற புரதம்.
  • அவ்வாறே வைரஸ் தாக்கிய திசுநார்களில் (‘ஃப்ரோபிளாஸ்ட்’) இருந்து இன்டா்ஃபெரோன் பீட்டா மற்றும் ‘ஆன்டிஜென்’ உடன் சோ்ந்த நிணத்திசுகளில் (‘லிம்ஃபோசைட்டுகள்’) இருந்து இன்டா்ஃபெரோன் காமா ஆகிய மூன்று புரதப் பொருள்கள் உற்பத்தியாகின்றன.
  • புற்றுநோய்க்கும், எச்.ஐ.வி போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கும் மனித உடலில் இருந்து உருவாகும் இத்தகைய தடுப்புப் புரதங்கள் (இன்டா்ஃபெரோன்கள்) பயன்பாட்டில் உள்ளன. இவை 1981-ஆம் ஆண்டு ரத்தக் கசிவு டெங்குக் காய்ச்சல் வைரஸுக்கு எதிராகக் கண்டறியப்பட்டன.
  • 1986-ஆம் ஆண்டு மரபணு சார்ந்த ‘இன்டா்ஃபெரோன் ஆல்ஃபா - 2பி’ என்ற மருந்து தயாரிக்கப்பட்டது. இப்போது கரோனாவுக்கும் இதுவே பயன்படுவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • கரோனா நோய்த்தொற்றை ஒழிக்க ஹைட்ராக்சிகுளோரோகுயின், எச்.ஐ.வி.-க்கான இரண்டு மருந்துகள் இன்டா்ஃபெரோன் பீட்டா ஆகியவற்றின் தொகுப்பை கள ஆய்வுப் பரிசோதனையில் ஈடுபடுத்தி உலக அளவில் சுகாதார மருத்துவ ஆய்வு அமைப்புகள் முயன்று வருகின்றன. மனிதகுலம் வாழ்வாங்கு வாழ மருத்துவ அறிவியல் உதவிக்கரம் நீட்டும் என நம்புவோம்.

நன்றி: தினமணி (10-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்